Tuesday, August 24, 2010

மே.வங்கம்: முதலாளிகள் தொழில் தொடங்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற சி.பி.எம்-ன் வாதம் உண்மையா?

மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டைஃபி-யின் மாநிலச் செயலாளர் தோழர் கண்ணன் அவர்களும், அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் தோழர் இரமேஷ்பாபு அவர்களும் தொடர்ந்து தத்தமது வளைதளங்களில் நந்திகிராம் போராட்டங்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பல கருத்துக்களை எழுதிவருகின்றனர். அவர்களைச் சொல்லி பிழையில்லை அவர்கள் சார்ந்திருக்கின்ற அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும், அகில இந்திய பொதுச்செயலாளரும் பேசிவரும் அவதூறுகளைத்தான் இவர்கள் இங்கே ரிப்பீட் செய்துவருகின்றனர்.

எனவே இவர்களது கூற்றுக்களை முறியடிக்கும் வகையிலும், இதுகுறித்து அவர்களுடன் தொடர்ந்து விவாதிக முடியும் என்கிற எதிர்பார்ப்பிலும் சில பதிவுகளை இங்கு வெளியிட முடிவெடுத்திருக்கிறேன். அதன்படி எமது அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் தூத்துக்குடி - விருதுநகர் மாவட்ட கமிட்டிகள் இணைந்து வெளியிட்ட “நந்திகிராம்: சி.பி.எம். கட்சியின் கொலைவெறி!” என்ற சிறு வெளியீட்டிலிருந்து கீழ்கண்ட பதிவை இங்குப் பதிகிறேன். நன்றி!

தோழமையுடன்,
து.சுரேஷ்

======================================================================================

முதலாளிகள் தொழில் தொடங்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற சி.பி.எம்-ன் வாதம் உண்மையா?

டந்த பத்து ஆண்டுகளில் அந்நிய மூலதனம் இந்தியாவில் பெருமளவு பெருகியிருக்கிறது. தொழில்கள் துவங்கப்பட்டு இருக்கின்றன. எனினும் வேலைவாய்ப்பு முன்னர் இருந்ததைக் காட்டிலும் குறைந்திருக்கிறது என்றுதான் மத்திய அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன.

உற்பத்தியை மேலும் மேலும் நவீனமயமாக்குவதன் மூலம் வேலை வாய்ப்பைக் குறைப்பது, இருக்கின்ற தொழிலாளிகளின் வேலை நேரத்தையும் வேலைச்சுமையையும் அதிகரிப்பது என்பதுதான் முதலாளித்துவத்தின் பிறவிக்குணம். மார்க்ஸ் ஆணித்தரமாக நிரூபித்த இந்த விசயத்தை இதுநாள்வரை ஏற்காதவர்கள் கூட இன்று கண்முன்னால் தெரியும் உண்மைகளைப் பார்த்தபின் ஏற்றுக்கொள்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் என்ற சொல்லை மனித குலத்துக்கு அறிமுகப்படுத்தியதே முதலாளித்துவம்தான். ஆனால் ‘மார்க்சிஸ்டுகளோ’ முதலாளித்துவம் வேலைவாய்ப்பைப் பெருக்கும் என்கிறார்கள்.

மேற்கு வங்கத்தின் புள்ளிவிவரங்களையே பார்ப்போம். 90களின் நடுப்பகுதியில் தொடங்கி தனியார் முதலாளிகளைக் கவர்ந்திழுத்து மார்க்சிஸ்டுகள் மேற்கு வங்கத்துக்குப் புதிதாகக் கொண்டு வந்துள்ள தொழில் மூலதனம் 28,000 கோடி. இதனால் உருவாகியுள்ள வேலை வாய்ப்புகளோ 60,000. அதாவது ஒரு கோடி ரூபாய் மூலதனத்துக்கு இரண்டு வேலை. மேற்குவங்க அரசின் கணக்குப்படி தற்போது மேற்குவங்கத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 70 இலட்சம் பேர். மேற்கூறிய கணக்கின்படி இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டுமென்றால் 35 இலட்சம் கோடி ரூபாய் மூலதனம் போடவேண்டும்.

இது சாத்தியம் என்பதை ஒரு பைத்தியக்காரன் கூட ஒப்புக்கொள்ளமாட்டான். மேலும் வெறும் 1500 கோடி ரூபாய் மூலதனம் போடும் டாடாவுக்கு சிங்கூரில் வழங்கியுள்ள சலுகைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். 35 இலட்சம் கோடி மூலதனம் வேண்டுமானால் மேற்கு வங்கம் முழுவதையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகப் பட்டா போட்டுக் கொடுத்தால் கூட நடக்காது.

இது ஒருபுறமிருக்க, 1985 முதல் 2003 வரை ஆலைகள் மூடப்பட்டதன் காரணமாக வேலையிழந்திருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 இலட்சம். 50,000த்துக்கும் அதிகமான சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டிருக்கின்றன. புதிதாகத் தொடங்குவது இருக்கட்டும். மூடியவற்றைத் திறப்பதற்கு இவர்கள் என்ன செய்தார்கள்? இந்தத் தொழிலாளர்களுக்கு யார் வேலை வாய்ப்புக் கொடுப்பார்கள்?

முதலாளித்துவத் தொழில்மயம் 10 வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் 100 வேலைகளைப் பறிக்கும். ஏனென்றால் முதலாளிகளின் நோக்கம் இலாபம். மேலும் இலாபம்.

தொழில்மயம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தின் கீழ், உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக செய்யப்படும்போது மட்டும்தான் அதாவது, தனியார் இலாபம் என்ற நோக்கத்தை ஒழித்துவிட்டு சமூக முன்னேற்றம், நல்வாழ்வு என்பதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் போது மட்டும்தான் அது வேலை வாய்ப்புகளை உண்மையிலேயே வழங்க முடியும்.

“உங்கள் அரசாட்சி என்பது விவசாயிகள் நலனுக்கானது என்று நீங்கள் கருதினால் புத்ததேவ் பட்டாச்சார்யா மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” “சோஷலிசம் என்பது பயங்கரவாதம் அல்ல. அது மனிதாபிமானம். துப்பாக்கியால் நடத்தப்படும் கொடுங்கோல் ஆட்சி என்பது நிச்சயம் இடதுசாரி ஆட்சி அல்ல.”

“ஆனால் மேற்கு வங்கத்திலோ முதலாளித்துவம் மகிழ்ச்சியாக இருக்கிறது. விவசாயிகள் வறுமைக்கும் பறிமுதலுக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.”


குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள இக்கருத்துக்கள், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், இ.எம்.எஸ்.ஸின் தலைமையில் கேரளத்தில் முதன்முதலில் அமைந்த இடதுசாரி அரசில் சட்ட அமைச்சராக பணியாற்றியவருமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் மார்க்சிஸ்டு கட்சி பொதுச்செயலர் பிரகாஷ்காரத்துக்கு மார்ச் 15-2007 அன்று எழுதிய கடிதத்திலிருந்து.


“பெரிய முதலாளித்துவக் குழுமங்களுக்குக் சாதகமாக சாதாரண விவசாயிகளின் நிலங்களைப் பறித்துக் கொடுக்கும் வேலையை இந்த அரசு செய்யுமானால், இந்தக் கட்சி தன்னை மார்க்சிஸ்டு கட்சி என்ற பெயரால் அழைத்துக் கொள்ளவே தகுதியற்றது. இது மார்க்சுக்கு செய்யும் துரோகம்.”

-வி.ஆர்.கிருஷ்ணய்யர் (மெயின் ஸ்ட்ரீம் வார இதழ், டிச.8-14’2006)
=====================================================================================

மேற்கண்ட பதிவுடன் தொடர்புடைய பிற கட்டுரைகள்:

1.  லால்கார் : சி.பி.எம். - காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்! - வினவு.
2. போலிகம்யூனிச ஆட்சிக்கு எதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி! - வினவு.
3. திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? சி.பி.எம்-இன் நில அபகரிப்பு! - வினவு.
4. இந்தியாவின் இதயத்தின் மீதான போர்! - அருந்ததிராய்.

2 comments:

விடுதலை said...

முதலாளித்துவ நாடுகள் மார்க்சிஸவாதிகளைச் சந்தேகிக்கின்றனர். மார்க்சிஸ்டுகளைச் சந்தேகிப்பது சரி என்பதா? சரியல்ல! இப்படி சந்தேகிக்க ஆரம்பித்தால், பொதுவாக எல்லா கட்சி, அமைப்புகளையும் சந்தேகிக்க வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்லும்.

வி.ஆர். கிருஷ்ணய்யர்(http://en.wikipedia.org/wiki/V._R._Krishna_Iyer)

விவாதகளம்... said...

கருத்துக்கு நன்றி நண்பர் விடுதலை.

கிருஷ்ணய்யர் சொன்னதாக நீங்கள் பதிந்துள்ள கருத்திற்கும் அதில் நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மேற்குவங்கத்தில் பன்னாட்டு முதலாளிகள் தொழில் தொடங்கினால் மாநிலம் முன்னேறிவிடும் என்று உங்கள் கட்சி உருவாக்கி வைத்திருக்கும் போலிச் சித்திரத்தை அம்பலபப்டுத்தும் விதமாகத்தான் மேற்கண்ட பதிவு இங்கு பதியப்பட்டுள்ளது.

மாறாக, கிருஷ்ணய்யரின் புகழ் பேசுவதற்காக அல்ல. ஒருவேளை நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பதைப் போலவே கிருஷ்ணய்யர் பேசியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கருணாநிதியின் கூட்டணியில் இருக்கும் போது இராட்சஷியாக உமக்குக் காட்சியளித்த ஜெயலலிதா இன்றைக்கு தேவதையாகத் தோன்றவில்லையா, நாம் வெளிப்படுத்தும் கருத்துக்கள் நம்முடைய சொந்த புரிதலினூடாகத்தான் வெளிப்பட வேண்டும். கிருஷ்ணய்யர் தினம் ஒரு நிலைப்பாட்டில் இருந்தால், இருந்துவிட்டு போகட்டும், ஆனால் மையமான விவாதம் கிருஷணய்யரை நோக்கி அமையவில்லை. அது உமது கட்சியின் முதலாளித்துவ அடிவருடி நிலையில் இருக்கிறது.

முடிந்தால், உங்கள் அரசியலின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் முறையாக, தர்க்கரீதியாக மறுப்புகளைப் பதிந்து விவாதிக்க முன்வாருங்கள். நன்றி!

Post a Comment