Wednesday, August 25, 2010

நக்சல்பரி அரசியல்: டைஃபி கண்ணனுடன் ஒரு விவாதம்!

///////காலத்தின் தேவை கருதி நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை என்ற நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது./////

அப்படியா. விவாதிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இப்புத்தக வெளியீடு குறித்து உள்ளபடியே மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆமா.... அது என்ன காலத்தின் தேவை கருதி.... அப்படிப்பட்ட தேவை எங்கிருந்து உருவாகியது? அத்தகைய தேவையை எது உருவாக்கியது? இதனை நாம் முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது.


முப்பதாண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிவந்த ஆட்சியதிகாரம் கையைவிட்டு நழுவிக்கொண்டிருக்கும் இந்நிலைதான் அத்தகையை காலத்தின் தேவையை நம்ம காம்ரேடுகளுக்கு உணர்த்தியிருக்கும் போலும்!


முதலாளித்துவம் உச்சிமுகர்ந்து கொண்டாடிய மறைந்த மார்க்சிஸ்டு தலைவர் ஜோதிபாசு பின்வருமாறு கூறுகிறார். “நக்சலிசத்தை வீழ்த்து- வதற்கான நடவடிக்கைகளில் முதன்மையான நடவடிக்கையாக தாம் மேற்கொண்டதுதான் மேற்குவங்கத்தில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீரமைப்பு சட்டம்.” ஆக இதிலிருந்தே தெரியும், மேற்குவங்க உழைக்கும் மக்களுக்கு பெயரளவுக்கேனும் வழங்கப்பட்ட அந்த நிலப்பங்கீட்டிற்கு காரணம் நக்சலிசம் என்பது.


நக்சலிசத்தை வீழ்த்தும்பொருட்டு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களை மொத்தமாகப் பிடுங்கி இப்போது பன்னாட்டு பகாசூர முதலாளிகளுக்குச் சொந்தமாக்குகிறீர்களே, இது யாரை வீழ்த்துவதற்கு? இக்கேள்விக்கான பதிலைச் சொல்லுவதற்குள் ‘காம்ரேட்’ ஜோதிபாசு செத்துவிட்டதால், தோழர் கண்ணன் குறிப்பிட்டுள்ள இந்த ‘காலத்தின் தேவை கருதிய விவாத்தத்தில்’ நமது மதிப்பிற்குரிய தோழர்கள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.



////கம்யூனிஸ்ட் விவாதத்திலும் இயக்கம் தத்துவார்ந்த விவாதத்திலும், நடைமுறை விவாதத்திலும் நீண்ட காலத்தினை செலவிட்டு இருக்கிறது.////////


இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா, தோழர் கண்ணன். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் ஏனைய மத்திய, மாநில கட்சிகளுக்கும் உங்களுக்கும் நடக்கும் லாவணிக்கச்சேரியைத்தான் விவாதம் என்று புரிந்து கொண்டுவிட்டீர்களா?!


எந்த விவாதம்? யாருடன் எங்கு நடத்தப்பட்ட விவாதம்? என்பதை முடிந்தால் கொஞ்சம் சுட்டிக்காட்டுங்கள். அல்லது இதன் தொடர்ச்சியாக இதுகுறித்து விவாதிக்க முடிந்தால் முயன்று பாருங்கள், விவாதிப்போம்.



/////நந்திகிராம், சிங்கூர், லால்கர் ஆகிய மேற்குவங்க மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு,...//////


மேற்குவங்க மாநில மார்க்சிஸ்டு அரசின் முதலாளித்துவ சேவையையும் பாட்டாளிவர்க்க துரோகத்தையும் “சலசலப்பு” என்ற இந்த ஒற்றை வார்த்தைக்குள் கமுக்கமாக முடக்கிவிட நினைக்கிறீர்கள். சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் லால்காரிலும் உங்கள் கட்சியின் குண்டர்படையான ‘ஹிம்மத் வாஹினி’ யாலும், உமது அரசின் பயங்கரவாத போலீசு படையாலும் கொண்று வீசப்பட்ட அப்பாவி மக்களின் போராட்டம் உங்களுக்கு சிறு சலசலப்பாகத் தெரிகிறது, போலும்!




நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள ‘காலத்தின் தேவையை’ உங்கள் கட்சிக்கு உணர்த்தியதே இந்த சிங்கூர், நந்திகிராம், லால்கார் மக்களின் சிறு ‘சலசலப்பு’தான் என்பதையாவது உணருங்கள், தோழரே!



//////மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.///////


உள்ளபடியே இந்தப் பெருந்தன்மை வேறு யாருக்கும் வராதுதான். நாடாளுமன்றத் தேர்தலின் தோல்வியை ஒப்புக்கொண்டது கிடக்கட்டும், தோழா; நந்திகிராமத்தில் அப்பாவி விவசாயிகளின் மீது கொலை- வெறியாட்டம் போட்டதற்காக பகிரங்கமாக பொறுப்பேற்று மன்னிப்பு கோரினாரே உங்கள் கட்சியின் மேற்குவங்க முதல்வர் புத்ததேவு, இது எத்தனை பெரிய பெருந்தன்மை!

* * * * *

தோழர் கண்ணன் அவர்களுக்கு,


ஒருவேளை இது ஒரு விவாதமாகத் தொடரும் என்கிற நம்பிக்கையில் நான் துவக்கத்திலேயே சிலவற்றைத் தெளிவுபடுத்திவிடுவது முறையாக இருக்கும் என்று கருதுகிறேன்.


மாவோயிஸ்டுகளின் நிலைப்பாட்டை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மாவோயிஸ்டுகள் மீது செயல்தந்திர ரீதியிலான பல்வேறு விமர்சனங்கள் எனக்கும் உள்ளது. குறிப்பாக மாவோயிஸ்டுகள் - மம்தா இடையே உருவாகியிருக்கும் (நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் அளவுக்குத் தாழ்ந்ததாக இல்லையென்றாலும்...) கூட்டு என்பது ஏற்புடையதாக இல்லை. இங்கே நான் மாவோயிஸ்டுகளின் தரப்பில் விவாதிக்க வரவில்லை.


நக்சலிசம் என்பதையும் நக்சல்பாரிப் புரட்சி என்பதையும் ஏளனமாகவும் அவதூறாகவும் சித்தரிப்பதை நான் எதிர்த்து கருத்து பதிவேன். நான் நக்சல்பரி அரசியலைத்தான் இந்தியாவுக்கான புரட்சிகர பாதை என்று பல்வேறு அனுபவத்தினூடாக புரிந்துகொண்டிருக்கிறேன். சி.பி.எம். கட்சிக்கும் கம்யூனிசக் கருத்துக்களுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பதை நீண்ட, நெடிய அனுபவத்தினூடாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். இதுகுறித்து ஏராளமான சி.பி.எம். தோழர்களுடன் விவாதித்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் உங்களுடனும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்.


வீரத்தெலுங்கானா முதல் நக்சல்பரி புரட்சி வரை இந்தியாவுக்கான புரட்சிகர அரசியல் நடமுறையை உணர்ந்துகொள்வதற்கான உறுதியான தடங்கள் பல இருக்கிறது. தெலுங்கானா, நக்சல்பரியின் தோழர்களைத்தவிர உமது கட்சியின் தலைமைக்கும் அத்தகைய உன்னதமான தடங்களுக்கும் சம்பந்தமில்லை. அதேவேளையில் வீரத்தெலுங்கானா போராட்டத்தில் களத்தில் ஆயுதப்போராட்ட முனையில் நின்றுகொண்டிருந்த இலட்சக்கணக்கான கீழ்மட்டத் தோழர்களின் தியாகத்தைப் புறக்கனித்து வெளிப்படையாக துரோகமிழைத்தது, அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிசக் கட்சியாக இருந்த இந்திக கம்யூனிசக் கட்சியின் தலைமை. எஸ்.ஏ.டாங்கே உள்ளிட்ட தலைவர்களின் வெளிப்படையான துரோகம் பல முனைகளில் அம்பலமாகியது.


அதேபோல, மேற்குவங்க மார்க்சிஸ்டு கட்சியின் டார்ஜிலிங் மாவட்டத்திற்கு உட்பட்ட சிலிகுரி வட்டக் கமிட்டியின் முடிவின் படி நந்திகிராம போராட்டம் துவக்கப்பட்டது. அப்போராட்டத்தில் அன்றைய மார்க்சிஸ்டு கட்சியின் சிலிகுரி வட்ட கட்சிக் கமிட்டியும், விவசாயிகள் சங்கமும் அன்றைய நிலபிரபுத்துவ கொடுங்கோலர்களான ஜோத்திதார்களுக்கு எதிராகக் களத்தில் நின்றனர்.


இது கட்சியின் தலைமைக்குத் தெரியாமல் ஒரே இரவில் திட்டமிட்டுத் துவக்கப்பட்ட போராட்டம் இல்லை. பல்வேறு அடக்குமுறையினை ஏவிவிட்ட நிலபிரபுத்துவத்தின் கொடுங்கோன்மைக்கு சில ஏழை விவசாயிகள் பலியிடப்பட்டதன் தொடர்ச்சியாகவே, இப்போராட்டம் துவக்கப்பட்டது. ஆனால், போராட்டம் துவங்கிய அவ்வேளையில் ஜோதிபாசு உள்ளிட்ட நால்வர் மந்திரிகளாக அங்கம் வகித்த கூட்டணி ஆட்சி மேற்குவங்கத்தில் இருந்தது.


1967-ல் நடைபெற்ற நக்சல்பரி எழுச்சியை ஜோதிபாசு தன் கையில் இருந்த போலீசு துறையைக் கொண்டு கொடூரமான ஒடுக்குமுறையை, களத்தில் போராடிக்கொண்டிருந்த தமது கட்சியின் சொந்த அணிகளின் மீது ஏவினார். கட்சியின் தலைமை சொந்த கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களை, போராளிகளைச் சுட்டுக் கொல்ல முடியுமா? அத்தகைய துரோகத்தனத்தில் இருந்த கட்சியிலா நாம் இத்தனையாண்டுகாலம் இருந்தோம்? என்கிற கேள்விகள், அக்கட்சியின் அணிகளின் மத்தியில் இந்தியாவெங்கும் எதிரொலித்தது. 9 போராளித்தோழர்கள் அன்றைய தினம் ஜோதிபாசுவால் கொன்று வீசப்பட்டனர். ஆனால், நந்திகிராமப் படுகொலைகளுக்கு புத்ததேவு பொறுப்பேற்றதைப் போல நக்சல்பரிப் படுகொலைகளுக்கு ஜோதிபாசு பொறுப்பேற்கவில்லை.


சரியாகச் சொன்னால், நக்சல்பரியின் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக சொந்த கட்சியின் ஊழியர்களையே கொன்றொழித்த தலைமை, இங்கே தமிழகத்தில் அப்போது கீழ்வெண்மணியில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்ப்பதாக நாடகம் நடத்திக்கொண்டிருந்தது. வெண்மணியின் நிலப்பிரபுவான கோபால- கிருஷ்ண நாயுடு-வை எதிர்த்து இங்கே இயக்கம், அங்கே நக்சல்பரியின் கோபால கிருஷ்ணநாயுடுக்களான ஜோத்திதார்களை எதிர்த்து இயக்கம் நடத்திய தோழர்களைப் படுகொலை செய்வது, இத்தகைய துரோகத்தில் திளைத்ததுதான் மார்க்சிஸ்டு கட்சியின் தலைமைகள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


மேற்குவங்கத்தைத் தவிர ஏனைய மாநிலங்களில் இதே மார்க்சிஸ்டு கட்சி உலகமயமாக்கலை எதிர்ப்பதாகவும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பதாகவும் நாடகங்கள் பல நடத்திவிட்டு, மேற்குவங்கத்தில் உலகமயமாக்கலையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தையும் துப்பாக்கிமுனையில் தினிக்கிறது. இதுபோன்ற இடத்திற்கேற்ப வேடங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை தமது பிழைப்புவாத அரசியலின் இயல்பிலேயே வந்ததுதான்.


தோழர் கண்ணன் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த நக்சல்பரி போராட்டம் குறித்த புரிதல் இப்போதைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்கிற கருத்து அடிப்படையிலேயே தவறானது. நக்சல்பரி அரசியல் குறித்த அரிச்சுவடியே அந்த புரட்சிகர போராட்டமும் சி.பி.எம். தலைமையின் நினைத்துப் பார்க்கமுடியாத பச்சைத் துரோகமும்தான்.


சி.பி.எம். கட்சியின் போலிக்கம்யூனிச அரசியலைப் புறக்கனித்துவிட்டு நக்சல்பரி அரசியலை என்போன்றவர்கள் ஏற்றுக்கொள்வதற்கும் இத்தகைய புரிதலே வழிவகுத்தது. எந்தவிதமான தனிப்பட்ட நோக்கங்களும் அற்று முழுமையான சமூகமாற்றத்தினை விரும்பி கட்சியில் செயல்பட்டு வருகின்ற எவரும், அதே கொள்கையுடன் நீடித்திருப்- பார்களேயானால் மார்க்சிஸ்டு கட்சியில் அவர்கள் தொடர்ந்து தம்மைத் தக்கவைத்துக்- கொள்ள வாய்ப்பே கிடையாது.


தோழர் கண்ணனைப் பற்றி தனிப்பட்ட முறையில் நான் நன்கு அறிவேன். அவர் எனது மேற்கண்ட கருத்துக்களை தவறாமல் பதிப்பித்து விவாதத்தை தொடருவார் என்கிற நம்பிக்கையிலேயே இத்தனை நெடிய பின்னூட்டங்களை இங்கு (அவரது பதிவின் பின்னூட்டப்பகுதியில்) பதிந்திருக்கிறேன்.
 
 
தோழமையுடன்,
து.சுரேஷ்.

2 comments:

விடுதலை said...

பொறுக்கி தின்ன வாய்சவடாலும் எதிர்புரட்சிக்கு மகஇகவும்

நாங்க மாவோவைச் சொன்னாலும்
மகஇக எஸ்.ஓ.சி பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.

அரை காலனித்துவ
அரை முதலாளித்துவப்
அரை நிலபிரப்புத்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
மகஇக கலைக்குழு பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும் !

தோழர் . மக்கள் இன்னும் தயாராய் இல்லை

அது வரைக்கும் ?

ஓட்டு போடாதிங்க!

அப்புறம் பாருங்க.. நேரா புரட்சிதான் !

கேட்டவரை அதிரச்சியடைய

டோட்டலாய் விளக்கினார் தோழர்

யாருமே கட்சியில் இல்லாட்டாலும் - சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி தன் கொள்கையை மட்டும் இழக்காது.

மக்கள் விரோதிகள் எவரும் இனி
(மமதா மாவோஸ்ட் கூட்டுபோல)
மகஇக விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது !

யாருமே எங்கள ஏதுக்களனாலும் தமிழ்நாட்டுல
இருக்கிற நாலுபேரும் தடுத்தாலும்
சாருமஜீம் தாரு சபதம் முடிக்காமல் மகஇக அடங்காது.

அப்புறம் எப்போது புரட்சி?

அது இருக்கட்டும் தோழரே சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி
வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:

அன்று சாருமஜீம் தாருயை அடையாளம்
கண்டோம் அவரிடம் வந்த
அத்தனைபேரையும் கொன்றோம்.

கம்யுனிஸ்ட் கட்சி உள்ளே இருந்தே
இடது சீரகுலைவை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாய்
தனிக்கடையை விரிச்சோம்.

அப்புறமா மேற்கு வங்க நக்சல்பாரி கிராமத்தில்
ஆட்சியைப் பிடிச்சோம்.

அடுத்தது புரட்சி ?

பின்னே ஆயுதம் வன்முறை இல்லாமல்
சோசலிசம் படைக்க முடியாது என்பதை
சாரும் மஜீம்தாரு தலைமையில் அழித்தொழிப்பு என்று சொல்லி
அப்பாவி மக்கள ஏமாத்தி கொண்ணு போட்டோம் !

கல்லாவை வென்றெடுக்க
தனி தனியாக 82 கடை விரிச்யோம்

அமெரிக்காவிடம் நல்ல பேர எடுக்கு
புதுசு புதுச இயக்கம் வைச்சோம்
மகஇக என்.ஜீ.ஓ ஆரம்பிச்சோம் !

காசு சேரத்து கம்யுட்டர வாங்கி
இனையத்தில் சிபிஎம் ஆதிக்கம் ஒழிச்சோம்


சரி புரட்சி எப்போது ?

அட ! மமதாவை வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !

பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
52 சிபிஎம் தோழர்களை கொண்று போட்டோம்.

பிஜேபினு பேதம் பார்க்காமல்
அத்வானி அரவனைத்துகிட்டோம்.

வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி தொழிலாளி வாழ்வை ஒழிச்சோம்
அத்வானிக்கு கொடுத்த உறுதி மொழிப்படி
குஜராத்துக்கு கம்பெனியை மாத்தினோம் !

விவாதகளம்... said...

நண்பர் விடுதலை!

சற்றே நிதானமாக மீண்டுமொருமுறை மேற்கண்ட எனது பதிவினையும் அதற்கு நீங்கள் பதிந்திருக்கின்ற கருத்தையும் படித்துப்பாருங்கள். உங்கள் அரசியலின் அபத்தம் உங்களுக்கே தெளிவாகப் புரியும்.

முறையாக பதில் சொல்லி எதிரியின் விமர்சனத்தை தர்க்கரீதியில் முறியடிக்காதவரை அது எத்தகைய விமர்சனமாக இருந்தாலும் அது உயிருடந்தான் இருக்கும். எனது கருத்துக்களில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் பதிந்து விவாதியுங்கள். ”விமர்சித்துவிட்டானே பாவி...” என்கிற வயிற்றெரிச்சலுடன் இப்படி வசைபாடாதீர்கள்.

நமது வாழ்நாளை முழுமையாகவும் நேர்மையாகவும் இச்சமூகத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதிலிருந்துதான் என்னைப்போன்றவர்கள் செயல்பட்டு வருகிறோம். நீங்களும் கூட அவ்வாறே இருக்கலாம். நமது அறிவை, சமூகப்பொறுப்பை, வாழ்க்கையின் அர்த்தமுள்ள நேரங்களை இப்படி அபத்தவாதங்கள் செய்வதற்கு செலவழிக்காமல், உருப்படியான விவாதங்களில் செலவழித்தால் தெளிவு பிறக்கும்.

என்னுடைய கருத்துதான் சிறந்தது, அதனை எதிர்த்துவரும் கருத்துக்கள் எல்லாம் மோசடியானது என்கிற கருத்தை சிந்தையில் உருவாக்கி வைத்துக்கொண்டு எந்த ஒரு விவாதத்திலும் பங்கெடுக்க முடியாது. அவ்வாறு பேசுவது கருத்து முதல்வாதம். அனைத்து கருத்துக்களையும் வரிக்கு வரி பரிசீலித்து தர்க்க ரீதியாக முறியடித்து உறுதியுடன் நின்று போராடுவதுதான் நமது அரசியலுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான மரியாதையாகும். உங்கள் அரசியல் எப்படிப்பட்டது என்பதுதான் உங்கள் பிதற்றல்களிலிருந்து வெளிப்படுகிறது.

அதற்காக உங்களை நான் இழிவாகவோ கீழாகவோ கருதவில்லை. காரணம் உங்கள் தலைவர்களே விவாதிக்கப் பம்மிக்கிடக்கும் போது, இந்த அளவுக்கு முன்வந்து ஒரு கருத்தை பதிகின்ற உங்களை பாராட்டவும் வேண்டியிருக்கிறது.

மேற்கண்ட எனது பதிவு, டைஃபியின் மாநிலச் செயலாளர் தோழர் கண்ணன் அவர்களின் வலைதளத்தில் நான் பதிந்த பின்னூட்டம் ஆகும். இதனைப் பதிந்து சுமார் பத்து நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் அவர் இதைப் பதிப்பிக்கவில்லை. அதற்கான காரணத்தைக்கூட நேர்மையாகச் சொல்லவில்லை. இத்தகைய பரிதாபமான நிலையில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே இருக்கும்போது, உங்களை நான் எப்படி கீழானவராகக் கருதமுடியும்?

நீங்களும் விமர்சிக்கலாம், விவாதிக்கலாம், உங்கள் அரசியல் என்பது உங்கள் மீது தினிக்கப்பட்டதா அல்லது உங்கள் அனுபவத்தினூடாக நீங்கள் வரித்துக்கொண்டதா என்பதை எண்ணிப்பார்த்து செயல்படுங்கள். நன்றீ!

தொடர்ந்து விவாதிப்போம். என்னைத் தெளிவுபடுத்துங்கள் அல்லது நீங்கள் தெளிவுபெறுங்கள்.

தோழமையுடன்,
து.சுரேஷ்

Post a Comment