Wednesday, September 1, 2010

’மார்க்சிஸ்டு’ கட்சியினரை வெற்றிலைப் பாக்கு வைத்து விவாதிக்க அழைக்கிறேன்!

அன்புமிக்க நண்பர்களே!

எனது இந்த வலைதளம் விவாதகளம் என்று பெயர் சூட்டப்பட்டதற்கான முக்கியமான காரணமே, அரசியல் ரீதியிலான விசயங்களை நேர்மையான, எளிமையான, வெளிப்படையான வகையில் திறந்தமனத்துடன் விவாதித்து, எதுசரி, எதுதவறு என்று பரிசீலித்து முடிவெடுக்கும் பொருட்டு தொடங்கப்பட்டதுதான். நாம் ஏற்கெனவே முடிவு செய்துகொண்ட ஒரு கருத்தை, அதுசரியா அல்லது தவறா என்று கூட பரீசீலிக்க மனமின்றி “நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான்” என்று நிறுவத்துடிப்பது பொருள்முதல்வாதிகளான நமது பண்பு அல்ல. அது கருத்துமுதல்வாதம்.

தான் முன்வைக்கக் கூடிய கருத்து விமர்சனத்திற்கும் விவாதங்களுக்கும் அப்பாற்பட்டது. எனது கருத்தை விஞ்சக்கூடிய கருத்து இல்லை. .இதைவிடப் புனிதம் வேறில்லை என்று கண்ணை மூடிக்கொண்டு கிறித்தவ பாதிரியைப் போல் ஒரு உண்மையான கம்யூனிஸ்டால் பேசமுடியாது. அப்படிப்பேசுபவர் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது.

விமர்சிக்கப்படுவதைச் சிறிதும் அனுமதிக்காக தன்மை ஆண்மீகத்தன்மையாகும். முழுக்க முழுக்க விமர்சனங்களாலேயே புடம்போடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருவதுதான் அறிவியலின் தன்மையாகும். ஆண்மீகத்திற்கும் அறிவியலுக்கும் அடிப்படையிலேயே உள்ள மிகப்பெரும் முரண்பாடு இது.

கம்யூனிசம் என்பது, குறிப்பாக மார்க்சியம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம். ஆய்வுமுறையில் அது இயங்கியலையும் கோட்பாட்டில் அது பொருள்முதல்வாத கோட்பாட்டையும் கொண்டுதான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“அதிகமான கல்லடி பட்ட .பலாப்பழம்தான் மிகவும் ருசியானதாக இருக்கும்” என்று நமது கிராமப்புறங்களில் சொல்வார்கள். அதுபோல அதிகமான சொல்லடி பட்டதனால்தான் மார்க்சியம் செழுமையுற்றதுடன் முதலாளித்துவத்திடமிருந்து பாட்டாளிவர்க்கத்தைக் காப்பாற்றக்கூடிய கேடயமாகவும் இருந்துவருகிறது. மார்க்சியத்தைவிட அதிகம் விமர்சிக்கப்பட்ட தத்துவமே உலகில் கிடையாது.

ஆனால் ‘மார்க்சிஸ்டுகள்’ என்று தம்மை அழைத்துக்கொள்ளும் சி.பி.எம். கட்சியின் தலைவர்கள் விமர்சனம் என்றாலே அஞ்சி நடுங்கி ஒளிவதும், விமர்சிப்பவரைக் கடுமையாக வசைபாடுவதுமாக இருந்துவருகின்றனர். தமது கட்சி விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட பரிசுத்த தேவனைப் போன்றது என்று மல்லுக்கு நிற்கின்றனர்.

விமர்சிப்பவர் தமது கட்சிக்கு அப்பாற்பட்டவரா அல்லது கட்சிக்கு உட்பட்டவரா என்பதையெல்லாம் இவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பது கிடையாது. விமர்சனத்தை எடுத்துவைத்த மறு நொடியிலிருந்து அவர்கள் அக்கட்சியின் எதிரிகளாகவும், மக்கள் விரோதிகளாகவும் சித்தரிக்கப்படுவார்கள். நவீனகாலமாக விமர்சனங்களை அரசியல் ரீதியாகவும் ஆதாரப்பூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் எடுத்துவைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நக்சலைட்டுகள் என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அநீதியைம் போலித்தனத்தையும் எதிர்ப்பதற்குப் பெயர் நக்சலிசம் என்றால் அப்பெயரை நான் மனமுவந்து சூட்டிக்கொள்கிறேன் என்று என்னைப் போன்றவர்களை உணரச் செய்து நக்சல்பரி அரசியலை நோக்கித் தள்ளிவிட்டதுவும் அவர்களது இதுபோன்றதொரு நடவடிக்கைகள்தான்.

இத்தளத்தினைப் பார்வையிட வருகைதரும் வாசகர்கள் ‘மார்க்சிஸ்டுகளை’ விமர்சிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டதா இத்தளம் என்று சலிப்படையலாம். இத்தளத்தின் முதன்மையான நோக்கமே, நான் மேலே சுட்டிக்காட்டியிருப்பதைப் போல விவாதிப்பதற்கான முழுமையான களம்தான். விவாதங்கள் என்பது விமர்சனங்களால் மட்டுமே ஆனது. ஒத்த கருத்துடையவர்கள் விவாதிப்பதில் பொருள் இல்லை. மாற்றுக்கருத்துடையவர்களுடன் விவாதிக்கையில்தான் நம்முடைய கருத்தின், அரசியலின் வலிமையை நாம் முழுமையாக உணரமுடியும். அத்தகைய மாற்றுக்கருத்துக்கள் எனப்படுபவைதான் பொதுத்தளத்தில் விமர்சனங்களாக பொருள்படுகின்றன.

மார்க்சிஸ்டு கட்சியின் நபர்கள் விடுதலை, ரமேஷ்பாபு, மாதவராஜ், ச.தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் தளங்களை நீங்களெல்லாம் ஒருமுறை பார்வையிட்டு வந்தீர்களானால் அவர்கள் விவாதிக்கின்ற இலட்சனத்தைப் புரிந்துகொள்ளலாம். மார்க்சிஸ்டுகளுடன் விவாதிப்பதற்காக ஒரு தனிப்பட்ட தளம் தேவையா என்பதன் உண்மை நிலையை அவர்களுடைய அவதூறுப்பதிவுகளினூடாக நாம் புரிந்துகொள்ளலாம்.

இது மார்க்சிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களுக்கான ஒரு பகிரங்க அழைப்பு. விவாதிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கும் தங்களது கருத்துக்களைப் பதிந்து விவாதிக்கலாம். இத்தளத்தின் பின்னூட்டப்பகுதி அனைவருக்குமாகத் திறந்தே இருக்கும். எத்தகைய இழிந்த விமர்சனங்களை சி.பி.எம். தலைவர்கள் பதிந்தாலும் அவற்றை இத்தளம் நீக்காது. இது விவாதிப்பதற்கான திறந்த களம் என்பதனை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி மார்க்சிஸ்டு தோழர்களை விவாதிக்க அழைக்கிறேன். நன்றி!தோழமையுடன்,

து.சுரேஷ்

letusdebate1@gmail.com

http://letsdebate1.blogspot.comகுறிப்பு: இத்தனைக்கும் பிறகு எம்மை ‘கம்ப்யூட்டர் புரட்சியாளர்கள்’ என்றும் இவர்களுடன் விவாதிப்பது வெட்டி வேலை எனவும், இவ்விவாதங்களில் பங்கெடுத்துவிட்டால் நடக்கவிருக்கும் புரட்சி தள்ளிப்போய்விடும் என்பதாகக் கருதுகின்ற ‘புரட்சி’வீரர்களான ரமேஷ்பாபுக்கள், இவ்விவாதங்களைத் தவிர்த்துவிட்டுத் தங்கள் புரட்சிப்பணியைப் பார்க்கலாம் என்று அன்புடன் பணிக்கப்படுகிறார்கள். மீண்டுமொருமுறை நன்றி!!

No comments:

Post a Comment