Thursday, September 2, 2010

நந்திகிராம்: சி.பி.எம். கட்சியின் கொலைவெறி! (மீள்பதிவு)

நந்திகிராம் போராட்டமும் சிங்கூர் போராட்டமும் காலாவதியாகிவிட்டது என்றும் இப்போது அதைப்பற்றி பதிவுகள் எழுதுவது தேவையற்றது என்றும் யாரும் கருதிவிடாதீர்கள். தண்டகாரண்யா பழங்குடியின மக்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை. பல்லாயிரம் கோடி நிதியை வாரியிறைத்து ப.சிதம்பரம் தலைமையில் ஒரிசாவின் பிஜூ ஜனதாதள கட்சியின் அரசும், மேற்குவங்கத்தின் மார்க்சிஸ்டு அரசும், பீகாரின் நிதீஷ்குமார் அரசும், சட்டீஷ்கரின் பா.ஜ.க. அரசும், ஜார்கண்டு மாநில அரசும் இணைந்து, கோடிக்கணக்கான பழங்குடியின மக்கள் மீது கொலைவெறி யுத்தத்தை நடத்திவருகிறது.

பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுடனும் உள்நாட்டு தரகு முதலாளிகளுடனும் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இணங்கி, கோடிக்கணக்கான மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து, வளர்த்து, பாதுகாத்துவந்த காடுகளையும் வனங்களையும் நதிகளையும் விட்டுத் துரத்திக்கொண்டிருக்கிறது இந்த மாநில அரசுகளும் மத்திய அரசும். இதில் இந்திய ‘மார்க்சிஸ்டு’கட்சியும் அடக்கம்.

கோடிக்கணக்கான பழங்குடியின மக்களை காடுகளைவிட்டு விரட்டியடித்துவிட்டு முதலாளிக்கு கோடிக்கணக்கான கனிவளங்களைச் சொந்தமாக்குகின்ற நடவடிக்கைகளுக்கு நமது ‘மார்க்சிஸ்டுகள்’ சூட்டியிருக்கும் பெயர் என்ன தெரியுமா? வளர்ச்சி, வேலைவாய்ப்பு!!

இந்த பச்சையான முதலாளித்துவ சுரண்டலை, மறுகாலணியாக்க நடவடிக்கைகளை எதிர்த்து போராடுகின்ற பழங்குடியின மக்களை ‘மாவோயிஸ்டுகள்’ என்று முத்திரை குத்தி அவதூறு செய்வதோடு, கொலையும் செய்துவருகிறது மேற்கண்ட சர்வகட்சி கூட்டணி. இதில் நமது யோக்கிய சிகாமணிகளான மார்க்சிஸ்டுகளின் பங்களிப்பை புரிந்து கொள்வதற்காகவே 2007-ல் வெளிவந்த இப்பதிவு இங்கு பதியப்படுகிறது.

தோழமையுடன்,
சுரேஷ்.
=======================================================================

உழைக்கும் வர்க்கத்தின் உதிரத்தால் சிவந்த செங்கொடியை ஏந்தியிருக்கும் கட்சி அந்த உழைக்கும் வர்க்கத்தையே நரவேட்டையாடியிருக்கிறது. நந்திகிராம் துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகளைப் படித்தவர்களும், மேற்குவங்க போலீசு நடத்திய கொலைவெறித் தாக்குதலைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களும் அதிர்ச்சியால் உறைந்திருக்கிறார்கள். “ஒரு கம்யூனிஸ்டு அரசாங்கம் இப்படி நடந்து கொள்ள முடியுமா?” என்பதே கம்யூனிசத்தின் மீது மதிப்பும் பற்றும் கொண்டுள்ள ஒவ்வொருவருவரின் கேள்வி.



அவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல, போலி கம்யூனிஸ்டுகள் என்ற உண்மையை நாங்கள் நீண்ட நாட்களாகவே கூறி வந்திருக்கிறோம். மற்ற முதலாளித்துவக் கட்சிகள் திராவிடம், தேசியம், தமிழினம் போன்ற சொற்களை பயன்படுத்துவதைப் போல, உழைக்கும் மக்களை ஏமாற்றி ஓட்டுப் பொறுக்குவதற்கான ஒரு தந்திரமாகத்தான் ‘கம்யூனிசம்’ என்ற சொல்லை ‘மார்க்சிஸ்டு’ கட்சியினர் பயன்படுத்தி வருகிறார்கள் என்று அம்பலப்படுத்தி வருகிறோம்.

எம்.எல்.ஏ. பதவிக்காக தி.மு.க., அ.தி.மு.க என்று மாறி மாறிக் கூட்டு சேரும் சந்தர்ப்பவாதிகள்தான் மார்க்சிஸ்டுகள் என்பது மக்களுக்குத் தெரியும். இவர்கள் சந்தாப் பணத்தைத் தொழிலாளர்களிடமிருந்தும், ‘அன்பளிப்பை’ முதலாளிகளிடமிருந்தும் வாங்கிக் கொண்டு சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் தொழிற்சங்க சுல்தான்கள் என்பதையும், போலீஸ் ஸ்டேசனிலும் தாலுகா ஆபீசிலும் லஞ்சம் வாங்கிக் கொடுத்து காரியத்தை முடித்துக் கொடுக்கும் இடைத்தரகர்கள் என்பதையும் மக்கள் தம் அனுபவத்திலிருந்தே புரிந்து வைத்திருக்கிறார்கள். இவை மட்டுமல்ல, பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாங்கள்தான் அடியாட்கள் என்ற உண்மையையும் இன்று மேற்கு வங்கத்தில் பச்சையாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

நந்திகிராமத்தில் நடந்தது என்ன?

28,000 ஏக்கர் விளைநிலத்தை அதாவது 100 கிராமங்களை விட்டு விவசாயிகளை வெளியேறச் சொன்னது மார்க்சிஸ்டு அரசு. சாலை, அரசுத்துறை ஆலை, அணைக்கட்டு போன்ற பொதுநலத் திட்டங்களுக்காக அல்ல. போபாலில் 25,000 மக்களை விஷவாயுப் படுகொலை செய்துவிட்டு இன்று வரை விசாரணைக்குக் கூட வர மறுக்கும் அமெரிக்க யூனியன் கார்பைடு மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்கள் இரசாயனத் தொழிற்சாலை அமைத்து மண்ணை நாசமாக்குவதற்காக விளைநிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேறச் சொன்னது மார்க்சிஸ்டு அரசு. இந்தோனேசியாவைச் சேர்ந்த மாஃபியா நிறுவனமான சலீம் குழுமம் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்து ரியல் எஸ்டேட் கொள்ளை நடத்துவதற்காக 28,000 ஏக்கரை விட்டுத்தரச் சொன்னார் திவான் பகதூர் புத்ததேவ்.

விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு எதிராகக் கடந்த நான்கு மாதங்களாக இப்பகுதியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு விவசாயிகளை அணிதிரட்டி வந்தார்கள். இதுதவிர எதிர்த்தரப்பு ஓட்டுக் கட்சிகளும், ஜாமியத் உலேமா-ஐ-ஹிந்த் எனும் இசுலாமிய அடிப்படைவாத அமைப்பும், தன்னார்வக்குழுக்களும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்தன.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த சி.பி.எம். குண்டர்கள் ஜனவரி 6-ம் நாளன்று அதிகாலையில் 250 பேருக்கும் மேலாகத் திரண்டு வந்து நந்திகிராம், சோனாசுரா கிராமங்களின் மக்கள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு நாட்டுத் துப்பாக்கியால் கண்டபடி சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 விவசாயிகள் கோரமாகக் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நந்திகிராம வட்டார விவசாயிகள் கொலைகார சி.பி.எம். கட்சிக்கிளை அலுவலகங்களைத் தீயிட்டுக் கொளுத்தி சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த துரோகிகளையும், ஆட்காட்டிகளையும் கிராமத்தை விட்டே வெளியேற்றினர்.

அதன்பிறகு, விவசாயிகளின் ஒப்புதலோடு மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மேற்குவங்க முதல்வர் அறிவித்தார். விவசாயிகளின் ஒப்புதலோடு நிலம் கையகப்படுத்தப்படுமா, ஒப்புதல் இல்லாமல் பறிமுதல் செய்யப்படுமா என்பதல்ல பிரச்சினை. நந்திகிராம வட்டாரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் திட்டம் கைவிடப்படுமா, இல்லையா என்பதுதான் விவசாயிகளின் கேள்வி. இதற்கு எந்த விளக்கமும் தராமல், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் வெறியோடு சி.பி.எம். ஆட்சியாளர்கள் முனைப்பாகச் செயல்பட்டதால் விவசாயிகள் நந்திகிராமத்துக்கு வரும் சாலைகள், பாலங்களைத் துண்டித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்பகுதியில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து முடமாகிப் போனது.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் சேவை செய்வதற்கு நந்திகிராம மக்கள் தடையாக நிற்பதைக் கண்டு ஆத்திரமடைந்த முதல்வர் புத்ததேவ், “நந்திகிராமத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது” என்று புலம்பி, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். மேற்குவங்க அரசும் மாவட்ட நிர்வாகமும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை வைத்து நந்திகிராமத்தில் சிவில் நிர்வாகம் மீட்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. “நந்திகிராம அராஜகத்தை இனிமேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாது; அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம்” என்று மார்ச் 11-ஆம் நாளன்று சி.பி.எம். கட்சி ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள் பேரணியில் புத்ததேவ் கொக்கரித்தார்.

பாசிச முதல்வர் புத்ததேவின் கொலைவெறி பிடித்த இந்த வார்த்தைகள் மார்ச் 14-ஆம் நாளன்று போலீசு மற்றும் சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டமாக மாறியது. 5000-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கிகள் - வெடிகுண்டுகளுடன் 2000 பேர் கொண்ட நந்திகிராம வட்டாரத்தைச் சுற்றி வளைத்து எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி நிராயுதபாணியான விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக 67 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.



இன்னும் தொடரும்.....

அடுத்து வருவது: சிவப்பு பஜ்ரங்தளத்தின் பாசிச வெறியாட்டம்!

நன்றி: விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தூத்துக்குடி - விருதுநகர் மாவட்டம்.


==================================================================

தொடர்புடைய பதிவுகள் (அவசியம் படிக்க...)






No comments:

Post a Comment