கடந்த இரண்டரை மாதங்களாக நந்திகிராமத்தில் அரசு எந்திரமே செயல்பட முடியவில்லை. அது வன்முறையாளர்கள் தீவிரவாதிகளின் ‘சுதந்திர’ ராஜ்ஜியமாகவே இருந்தது. இடதுசாரி அரசாங்கம் மட்டுமல்ல; வேறெந்த அரசாங்கமும் இத்தகைய நிலைமையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், வன்முறைச் சக்திகளால் நாசமாக்கப்பட்டுள்ள சாலைகள் பாலங்களைச் சீரமைக்கவும் அங்கு போலீசு அனுப்பப்பட்டது” என்று நியாயவாதம் பேசுகிறார் மேற்குவங்க பாசிச முதல்வர் புத்ததேவ்.
எல்லா ஆட்சியாளர்களையும் போலவே, போராட்டம் என்றாலே சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று ஒப்பாரி வைக்கிறார் புத்ததேவ். யாருக்கான சட்டம் ஒழுங்கு என்பதுதான் கேள்வி. இந்தச் சட்டம் ஒழுங்கு உழைக்கும் மக்களுக்கானதா? அல்லது இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய பாசிச சுகர்தோவின் கூட்டாளியான சலீம் குழுமம் நந்திகிராம விளைநிலங்களைக் கைப்பற்றி சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெயரில் பகற்கொள்ளை அடிப்பதற்கா?
நந்திகிராம மக்கள் கடந்த இரண்டரை மாதங்களாக சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் நிலையில், அங்கு சாலைகள் பாலங்களைச் சீரமைக்க பொதுப்பணித்துறை ஊழியர்களை அனுப்பாமல் 5000-க்கும் மேற்பட்ட போலீசாரை அனுப்பியது ஏன்? அவர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டார்களா? அல்லது துப்பாக்கிகளையும் குண்டுகளையும் வைத்து சாலைபோடச் சென்றார்களா?
“நந்திகிராமத்தினுள் போலீசு நுழைய முற்பட்டதும் வன்முறையாளர்கள் கற்களை வீசி போலீசு மீது தாக்குதல் நடத்தினர். மரங்களின் மீதேறிக் கொண்டு நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர்; நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்” என்று குற்றம் சாட்டுகிறது சி.பி.எம். கட்சியின் அதிகாரப்பூர்வ ஆங்கில வார ஏடான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’. இது உண்மையென்றால், காயம்பட்ட ஒரு போலீசுக்காரனைக் கூட அக்கட்சியினரோ, ‘இடதுசாரி’ அரசாங்கமோ இதுவரை காட்ட முடியவில்லையே, அது ஏன்? போலியாக மாவு கட்டு போட்டுக் கொண்டு போட்டோவுக்கு “போஸ்” கொடுக்கும் போலீசுக்காரனைக் கூட இதுவரை காட்டவில்லையே! அப்புறம் எந்த போலீசுக்காரர்கள் காயமடைந்தார்கள்?
நந்திகிராம மக்களை சமூக விரோதிகள், வன்முறையாளர்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறது சி.பி.எம். கட்சி. நந்திகிராமத்தில் போலீசு கொலைவெறியாட்டம் போட்டு, பின்னர் அங்கு முகாம் அமைத்துள்ள போதிலும் இதுவரை நந்திகிராமத்தில் ஒரு வன்முறையாளர் கூட கைது செய்யப்படவில்லையே, அது ஏன்? அந்த வன்முறையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குண்டடிபட்ட உழைக்கும் மக்கள் வன்முறையாளர்களா?
“நந்திகிராமத்தில் போலீசு நுழைந்ததும் அக்கிராம மக்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர்புகை வீசியும், ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டும் அக்கூட்டத்தைக் கலைத்தனர். மக்கள் கூட்டம் நாற்புறமும் சிதறி ஓடியது. அதன்பிறகு வன்முறையாளர்கள் திரண்டு வந்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இத்தாக்குதலுக்குப் பின்னரே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்று நந்திகிராமத்தில் நடந்த சம்பவங்களை அங்குலம் அங்குலமாக விவரித்து, “தவிர்க்கவியலாத நிலையிலேயே போலீசு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று” என்று நியாயவாதம் பேசுகிறது பாசிச சி.பி.எம். கட்சி. கண்ணீர் புகை குண்டுக்கும் ரப்பர் தோட்டங்களுமே மக்கள் நாற்புறமும் சிதறி ஓடிவிட்டார்கள் என்றால், 5000-க்கும் மேற்பட்ட போலீசார் அதிநவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் நந்திகிராமத்துக்குச் சென்றது ஏன்? வன்முறையாளர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர் என்பது உண்மையானால், அதிரடியாகத் தாக்குதல் நடத்திய போலீசு இதுவரை ஒரு நாட்டுத் துப்பாக்கியைக் கூட கைப்பற்றவில்லையே, அது ஏன்? வீடுவீடாகச் சோதனை நடத்தியும் கூட, அந்த நாட்டுத் துப்பாக்கிகளும் நாட்டு வெடுகுண்டுகளும் மறைந்து போனதன் மர்மம் என்ன?
எல்லாவற்றுக்கும் மேலாக, நந்திகிராமத்தைச் சாராத வெளியிலிருந்து வந்த அன்னிய சக்திகள் நந்திகிராம மக்களிடம் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டுகிறார் சி.பி.எம்.மின் பாசிசத் தளபதியான யெச்சூரி. நந்திகிராம் அமைதியாக இருந்ததாம்! வெளியிலிருந்து வந்த அன்னிய சக்திகளான மாவோயிஸ்டுகள் தான் பொய்ப்பிரச்சாரம் செய்து வன்முறையைத் தூண்டிவிட்டார்களாம் இப்படி கதை எழுதியது சி.பி.எம். கட்சியின் வார ஏடான பீப்பிள்ஸ் டெமாக்கரசி.
மறுகாலனியத் தாக்குதலின் ஒரு அங்கமான சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடும் மாவோயிஸ்டுகள் அன்னிய சக்திகள், வன்முறையாளர்கள் என்கிறது பாசிச சி.பி.எம். கட்சி. அதாவது, வெளியூரைச் சேர்ந்தவர்கள் அரசியல் பிரச்சாரம் செய்யக்கூடாது; அவர்கள் அன்னிய சக்திகள் என்கிறது சி.பி.எம். கட்சி.
அப்படியானால் தென்னகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதற்காக காலனிய ஆட்சிக்காலத்தில் கட்சியால் பணிக்கப்பட்டு சென்னையில் பணியாற்றிய வடநாட்டைச் சேர்ந்த தோழர் அமீதுஹைதர்கான், கம்யூனிஸ்ட் கட்சித் தோழரா அல்லது அன்னிய சக்தியா? கீழத்தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட கூலி ஏழை விவசாயிகளைச் அவுக்கடியும் சாணிப்பாலும் கொடுத்து வதைத்த நிலப்பிரபுக்களின் கொட்டத்தை ஒடுக்கி, வர்க்கப் போராட்டத் தீயை மூட்டிய தோழர் சீனிவாசராவ், கம்யூனிஸ்ட் கட்சித் தோழரா அல்லது அன்று நிலப்பிரபுக்கள் சித்தரித்ததைப் போல வெளியூரைச் சேர்ந்த வன்முறையாளரா? அவ்வளவு ஏன்? தமிழகத்தில் கட்சி மற்றும் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன், ரமணி, அரிபட் முதலானோர் சி.பி.எம். கட்சித் தோழர்களா? அல்லது அன்னிய சக்திகளா?
சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக விவசாயிகளை அணிதிரட்டிப் போராடிவரும் நக்சல்பரி புரட்சியாளர்களை அன்னிய சக்திகள் என்று சாடும் சி.பி.எம். கட்சி, இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்காக 14,500 ஏக்கர் விளைநிலங்களைப் பறித்து தாரை வார்க்கக் கிளம்பியுள்ளதே, அந்த சலீம் குழுமம் அன்னிய பெருமுதலாளித்துவ சக்தியா அல்லது சி.பி.எம். கட்சியின் தோழரா? அந்த அன்னிய சக்தியின் இலாபவெறிக்காக, அதுவும் இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய பாசிச சுகார்த்தோ கும்பலின் கூட்டாளி நிறுவனமான சலீம் குழுமத்துக்காக விவசாயிகளையும் விளைநிலங்களையும் பலியிடும் சி.பி.எம். கட்சி இடதுசாரி கட்சியா? அல்லது ஏகபோக முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் பாசிசக் கட்சியா?
சி.பி.எம். கட்சியானது கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தால், ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போல இத்தகைய அபத்த வாதங்களை அடுக்காது. ஆனால் சி.பி.எம். கட்சியானது கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி. அது மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; பாசிஸ்ட் கட்சி. எனவேதான் ஆளும் வர்க்க கட்சிகளை விஞ்சும் வண்ணம் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் விசுவாச அடியாளாக வேலை செய்து கொண்டு ஹிட்லரின் பாசிச கோயபல்சையே விஞ்சும் வண்ணம் பொய்வாதங்களையே நியாயவாதங்களாக அடுக்குகிறது.
நந்திகிராம் தொகுதியின் எம்.எல்.ஏ., எம்.பி. பஞ்சாயத்துத் தலைவர் உட்பட எல்லோரும் இடது முன்னணியினர்தான் என்பதையும், 35 ஆண்டுகளாகத் தங்களுக்கு வாக்களித்து வந்த மக்கள்தான் இன்று தங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்ற உண்மையையும் வெட்கங்கெட்ட முறையில் மறைக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
படுகொலை செய்யப்பட்ட குஜராத் முஸ்லீம்கள் மோடியை நம்பி ஏமாறவில்லை. பாரதிய ஜனதா தங்களின் எதிரி என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் நந்திகிராம் மக்களையோ நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கிறார்கள், மார்க்சிஸ்டுகள். அந்த வகையில் இவர்கள் இந்து வெறியர்களைக் காட்டிலும் நயவஞ்சகமான பாசிஸ்டுகள். இது மிகையல்ல, உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக மக்களைக் காவு கொடுக்கும் புத்ததேவின் கொள்கையில் வக்கிரம் மட்டுமல்ல வஞ்சகமும் நிரம்பியிருக்கிறது.
(இன்னும் தொடரும்...
அடுத்த பதிவு:
நந்திகிராம்: பாட்டாளியின் பகையாளி! டாடாவின் கூட்டாளி!
==========================================================
2006-ஆம் ஆண்டு இறுதியிலும் 2007-ஆம் ஆண்டின் மத்திய காலம் வரையிலும், மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் பகுதியில் மறுகாலனியாக்கத்துக்கு எதிராக போராடிய மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் மீது கொலைவெறியாட்டம் போட்டது அம்மாநிலத்தை ஆளுகின்ற ‘மார்க்சிஸ்ட்’ கட்சி. அந்த ஏழை, எளிய விவசாய மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகமெங்கும் ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பிரச்சாரம் மேற்கொண்டன. அப்போது வெளியிட்ட்ட ‘நந்திகிராம்: சி.பி.எம். கட்சியின் கொலைவெறி!’ என்கிற சிறு வெளியீட்டிலிருந்துதான் எமது முந்தைய பதிவுகள் உள்ளிட்ட தொடர்ச்சியான கட்டுரைகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. இதன் வெளியீடு, விவசாயிகள் விடுதலை முன்ன்ணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டம்.
=======================================================
தொடர்புடைய பதிவுகள் (அவசியம் படிக்க கீழே சொடுக்குங்கள்...)
1. மார்க்சிஸ்டு கட்சியினரை வெற்றிலைப் பாக்கு வைத்து விவாதிக்க அழைக்கிறேன்!
2. நந்திகிராம் : சி.பி.எம். கட்சியின் கொலைவெறி!
3. நந்திகிராம் : சிவப்பு பஜ்ரங்கதளத்தின் பாசிச வெறியாட்டம்!
4. மேற்குவங்கம்: முதலாளிகள் தொழில் தொடங்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்கிற சி.பி.எம். கட்சியின் வாதம் உண்மையா?
5. கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இண்டியா [ரவுடியிஸ்ட்]!
1. மார்க்சிஸ்டு கட்சியினரை வெற்றிலைப் பாக்கு வைத்து விவாதிக்க அழைக்கிறேன்!
2. நந்திகிராம் : சி.பி.எம். கட்சியின் கொலைவெறி!
3. நந்திகிராம் : சிவப்பு பஜ்ரங்கதளத்தின் பாசிச வெறியாட்டம்!
4. மேற்குவங்கம்: முதலாளிகள் தொழில் தொடங்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்கிற சி.பி.எம். கட்சியின் வாதம் உண்மையா?
5. கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இண்டியா [ரவுடியிஸ்ட்]!
No comments:
Post a Comment