நக்சலைட்டுகளை
இயங்கவிடாமல் செய்துவிட்டதாம் அரசு
நம்புகிறார்கள் சிலர்.
உண்மையில்
இயங்கமுடியவில்லை மக்களால்.
கத்திக்கு எத்தனை சாணைபிடித்தாலும்
ஒருஇழவு விசாரித்துவர
பேருந்து கட்டணத்தைப்
பிடிக்க முடியாமல்
துருப்பிடித்துக் கிடக்கிறது
தொழிலாளியின் வாழ்க்கை.
அங்கங்கே ஆள்வைத்து
பணத்தாலே கண்ணி வைத்து
எத்தனை முறை கிளப்பினாலும்
எழுப்ப முடியவில்லை
‘எம்ப்ளாய்மெண்ட்’ எண்ணை.
ராகு மூணாம் இடம் போகிறார்
சேது நாலாம் இடம் வருகிறார்
கேட்ட பவுனைப் போடமுடியாததால்
அக்காமார்கள் மட்டும்
அடுப்படியிலேயே கிடக்கிறார்கள்.
ரேசன் அரிசி வடித்த கஞ்சியில்
சலவை செய்த உயிரை உடுத்தி
ராத்திரி அறுப்புக்குப் போய்வந்து படுத்த
அம்மாவின் கண்கள்
கடைசிவரை திறக்கவே இல்லை..
ஊரெல்லாம் கடன்பட்டு
தலைமறைவு வாழ்க்கை நடத்தும்
உங்களுக்குத் தெரியாதா?
புரட்சிக்குக் கடன்படாமல்
இனி இயங்க முடியாது என்பது.
- துரை. சண்முகம்
====================================================
.
புதிய கலாச்சாரம் - ஜூலை/2000 இதழில் வெளியான இக்கவிதை இங்கு பதிவிடப்படுகிறது.
=====================================================
தொடர்புடைய பிற பதிவுகள்:
1. வா... இயற்கையே உன்னைப் போராட அழைக்கிறது!
2. முன்னேறிய சிந்தனை உள்ளவனே முன்னேறிய மனிதன்!
3. யார் கொலைகாரன்? யார் பயங்கரவாதி?
4. பற்றவைக்கும் பயங்கரவாதி யார்?
No comments:
Post a Comment