கதறும் இயற்கையின்
குரலைக் கேட்டும்
கண்டு கொள்ளாதோரே!
புல்லிதழும் கூட உங்கள்
கல்லிதயம் பார்த்து
கருகுது! கருகுது!
இதயத்தை விட மென்பொருள் உண்டா?
அதுவே இல்லாத உங்களிடம்
சாஃப்ட்வேர் இருந்தென்ன?
இண்டர்நெட் இருந்தென்ன?
போராடாதவனின் முகத்தைப் பார்த்து
இயற்கை மிரளுது! மிரளுது!
தன்மீதும் தன்நிலத்தின் மீதும்
அந்நியன் ஆதிக்கம் என்றவுடன்
கொதித்தெழுந்து சுயமரியாதையுடன்
எதிர்த்து நின்று போராடுபவன்
காட்டுவாசியாம்!
எது நடந்தாலும்
எனக்கு எவ்வளவு சம்பளம்
என மரத்துக் கிடப்பவனுக்கு பெயர்
கம்ப்யூட்டர் வாசியாம்!
காட்டிய வேலையை செய்துகொண்டு
அடிமைத் தனத்தில் வயிறு வளர்ப்பவன்
நோட்டுவாசி!
இவனைப் பார்த்து சிரிக்கிறான் காட்டுவாசி!
முன்னேறிய பொருளை வைத்திருந்தாலே
ஒருவன் முன்னேறியவனல்ல,
முன்னேறிய சிந்தனை உள்ளவனே
முன்னேறிய மனிதன்...
தன்னிகரில்லா போராட்டம் வழி
இதை உணர்த்துகிறார்கள் பழங்குடிமக்கள்
கம்ப்யூட்டரை பார்த்துவிட்டு
நாடு வல்லரசாகிவிட்டது என்று
அவர்களுக்கு கத்தத் தெரியாது!
கழிவறையில்
ஒரு தானியங்கி தண்ணீர் குழாயைப் பார்த்துவிட்டு
நாடு முன்னேறி விட்டதாக
அவர்கள் நம்புவதில்லை!
சாலையில்
ஒரு ஏ.சி. பஸ்ஸைப் பார்த்துவிட்டு
காலம் மாறிவிட்டதாக
மூளையை அடகுவைக்க
முடியாது அவர்களால்!
செல்போன், டி.வி.யை பார்த்துவிட்டு
இந்தியா ஒளிர்கிறது என்று
ஏற்க முடியாது அவர்களால்
அப்துல் கலாமை அழைத்துக் கொண்டுபோய்
இந்தியா வல்லரசாகுது என்று
அறிவித்தால்,
அவரை உற்றுப்பார்த்து சிரிப்பார்கள்,
மன்மோகன்சிங்கையும்,
ப.சிதம்பரத்தையும் காட்டி
மனிதர்கள்தான் என்றால்
ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
அனைத்துக்கும் மேலே
தான் வேறு, மண் வேறு
என்று பிரித்துப் பார்க்கும்
கேவலம், மடமை
அவர்களிடம் கிடையாது.
இப்போது சொல்லுங்கள்
முன்னேறியவர்கள்
காட்டுக்குள் இருப்பவர்களா?
நாட்டுக்குள் இருப்பவர்களா?
கற்றுக் கொள்வோம்
பழங்குடிகளிடமிருந்து நாட்டுப்பற்றை!
- துரை. சண்முகம்.
===================================================
“மறுகாலனியாக்க கொலைக்களங்கள்” -
தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதைத் தொகுப்பிலிருந்து மேற்கண்ட கவிதை இங்கு பதிவிடப்படுகிறது.
வெளியீடு:
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
எண்.10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
தொலைபேசி: 044- 28412367
===================================================
தொடர்புடைய மற்றொரு பதிவு:
வா... இயற்கையே உன்னைப் போராட அழைக்கிறது! - கவிதை
==================================================================
No comments:
Post a Comment