யார் கொலைகாரன்?
யார் பயங்கரவாதி?
“பாக்சைட்டுக்காக”
பழங்குடி மக்களின் கழுத்தை அறுக்கும்
ப.சிதம்பரம் சொல்கிறார்
பயங்கரவாதிகள் நக்சலைட்டுகளாம்!
நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்தாம்!
காட்டுப்பன்றியின் கண்களே சொல்லும்
உண்மையான பயங்கரவாதி
காங்கிரசு பன்றி என்று!
சத்தீஷ்கரின் மலைப்பாம்புகளை கேளுங்கள்
சரளமாகச் சொல்லும்
இதுவரை தான் பார்க்காத கொடிய விஷம்
ப.சிதம்பரத்தின் நாக்கில் என்று!
கானகத்து அரும்பினாலும்
காட்டுமர நரம்பிலும்
காட்டுப் பூச்சிகள் தீண்டிய தழும்பிலும்
மலைப்பொருட்களின் தாதிலும்
வரலாறாய் கலந்திருக்கும்
பழங்குடி மக்களுக்கு காடு சொந்தமில்லையாம்!
இப்படி பேசுபவனுக்கு
இனி நாடு சொந்தமில்லையென
எழுந்துவிட்டது டோங்கிரி!
மண்ணை விட்டால் தன்னை விட்டதாய்
கருதும் அந்த பழங்குடி
காடும் மலையும் கூட இனி
இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பதிலடி!
பழங்குடி மக்களின் கண்களில்
பத்திரமாக இருக்கிறது மலை...
அவர்களின் தாலாட்டில்
வேரோடியிருக்கிறது காடு...
பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளின் சிறகிலும்
துளிர்க்கும் பச்சிலைகளின் நுனி நாக்கிலும்
படிந்திருக்கிறது அவர்கள் மொழி...
கடும் பாறைகள் அவர் மார்புகள்...
கருமரக்கிளைகள் தலைமுறைக் கைகள்...
அடர்ந்த காடும், நிமிர்ந்த மலைகளும்
பழங்குடி மக்களின் பரம்பரை உணர்ச்சிகள்.
அவர்கள்,
பேசும் காடுகள், நகரும் மலைகள்
உதடுகள் கொடுத்து
காட்டு மூங்கிலைப் பேச வைத்தவர்கள்...
உணர்ச்சிகள் கொடுத்து
மலை, நீர்ச்சுனைகளை வாழ வைத்தவர்கள்...
பால்வடியும் தம் பிள்ளைகளோடு
பனிவடியும் செடி, கொடிகளுக்கும்
பெயர் வைத்து அழைத்தவர்கள்...
தயங்கும் ஓடைகளை அழைத்துவந்து
தாவரங்களோடு பழக வைத்தவர்கள்...
கிழங்கு, கனிகள், பச்சிலைகள் என
காடு, மலைகளின் இயற்கை பெருமிதத்தை
தங்கள் இரத்தத்தில் அறிந்தவர்கள்...
இயற்கை உரிமையுள்ள
இந்த எண்ணிறந்த மக்களை
அந்நியக் கம்பெனியின் இலாபவெறிக்காக
அவர்கள் பெற்றெடுத்த மண்ணை விட்டே
அடித்து துரத்தும்
ஆபத்தான பயங்கரவாதி யார்?
மன்மோகனிஸ்டா?
மாவோயிஸ்டா?
- துரை. சண்முகம்
================================================
“மறுகாலனியாக்கக் கொலைக்களங்கள்”
தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதைத் தொகுப்பிலிருந்து மேற்கண்ட கவிதை இங்கு பதிவிடப்பட்டிருக்கிறது.
================================================
வெளியீடு:
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
எண்: 10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
தொலைபேசி : 044-28412367
====================================================
தொடர்புடைய பிற பதிவுகள்:
1. வா... இயற்கையே உன்னைப் போராட அழைக்கிறது!
2. முன்னேறிய சிந்தனை உள்ளவனே முன்னேறிய மனிதன்!
==================================================================
No comments:
Post a Comment