Thursday, September 23, 2010

சி.பி.எம்: உங்களது அரசியல் அடையாளமாக கம்யூனிசம் தொடரும்வரை எங்களது விமர்சனங்களும் எதிர்வினைகளும் தொடரும்...

அன்பார்ந்த தோழர்களே,


சமூக மாற்றத்திற்கான புரட்சிகரப் போராட்ட களத்தில் நின்று கொண்டிருக்கும் போது எதிரிகளைத் தனியாகவும் துரோகிகளை வேறு விதமாகவும் நாம் எதிர்கொள்ள முடியாது. எதிரிகளின் ஒவ்வொரு வெற்றியிலும் அல்லது நம்முடைய ஒவ்வொரு தோல்வியிலும் துரோகத்தின் பங்களிப்பு கனிசமாக இருந்துகொண்டே இருக்கும். எதிரி வேறு துரோகி வேறு என்று பிரித்து அறிந்துகொள்வது அத்தனை எளிதானது அல்ல.


நம்முடைய போராட்டம் நெடியது. நம்முடைய எதிரியோ வலிமையானவன். துரோகிதான் எதிரியின் வலிமைக்கு வலுசேர்ப்பவனாக அனைத்து முனைகளிலும் செயல்படுவான். நக்சலைட்டுகள் பயங்கரவாதிகள் என்று ஆளும் வர்க்கம் சொல்லிக்கொள்வதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். கம்யூனிசத்தின் பெயரால் கட்சி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் நம்மை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், கொலைபாதகர்கள் என்று கூசாமல் சொல்லித் திரிகின்றனரென்றால், ஆளுகின்ற எதிரிவர்க்கத்திற்கும் அதற்குத் துணைபோகின்ற இந்தத் துரோகக் கூட்டத்திற்கும் உள்ள உறவை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். துரோகிகள் தங்களைத் தாங்களாகவே அம்பலப்படுத்திக் கொள்ளுகின்ற இடம்தான் இது.


மார்க்சிஸ்டுகட்சியை விமர்சிப்பதற்காகவும், அதனை மறுத்து அவர்கள் கருத்து பதிவார்களேயானால் அதனை ஏற்று பரிசீலித்து ஜனநாயகப்பூர்வமாக, தர்க்கரீதியாக மறுத்து எமது விமர்சனங்களை உறுதிப்படுத்துவதுவும்தான் இந்த வலைதளத்தின் மையமான நோக்கம். எமது விமர்சனங்களை ஏதோ போகிற போக்கில் இங்கு பதிந்துவிட்டு செல்வதில்லை, இங்கு பதிவிடப்படுகின்ற ஒவ்வொரு விமர்சனமும் மார்க்சிஸ்டு கட்சியின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு நேரடியாகச் சென்று எமது இந்த விமர்சனத்தைத் தெரிவித்து, அதற்கான தங்களது கருத்தைத் தாருங்கள் என்று கேட்கப்படுகிறது.


அவதூறுகளையும் பொய்மூட்டைகளையும் அவிழ்த்துவிடுபவர்தான் எதிரிக்குத் தெரியாமல், எதிரியின் நியாயமான மறுப்புகளைப் புறக்கனித்து, இருட்டடிப்பு செய்துவிட்டு தமது கருத்தை உண்மையாக்க முயலுவார்கள். எமக்கு அந்த அவசியமில்லை. விமர்சனங்களைக் கண்டு ஓடி ஒளிந்துகொள்வதை ஆகக் கேவலமான விசயமாகக் கருதுகிறோம். அரசியல் ரீதியாக எமது அமைப்பின் மீது யார் விமர்சனங்களை முன்வைத்தாலும், அல்லது அவதூறுகளையே அள்ளி வீசினாலும் அவற்றைப் புறக்கனித்து சந்தடியில்லாமல் புறந்தள்ளிவிடுவது கிடையாது; அனைத்திற்கும் முறையாக பதிலளிக்கின்ற கடமையை எமது அரசியல் நேர்மையாகவும் அறிவு நாணயமாகவும் கருதுகிறோம்.


.மு....வின் மாநிலச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன் முதல் டைஃபியின் மாநிலச் செயலர் தோழர் கண்ணன், மாநிலத் தலைவர் தோழர் ரமேஷ்பாபு, தீக்கதிர் பத்திரிக்கையின் முன்னணியாளர்களான தோழர் .குமரேசன், தோழர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களுக்கு எமது விமர்சனங்களை நேரடியாக மின்னஞ்சலின் மூலமாக அனுப்பிவருகிறேன். ஆனால், எல்லோர் மத்தியிலும் ஒரு ஆழ்ந்த மவுனமே பதிலாகக் கிடைக்கிறது. தோழர் தமிழ்ச்செல்வன் மட்டும் சற்று விதிவிலக்காக சில பதில்களை தெரிவித்திருக்கிறார். அதிலும் தம்மை விமர்சித்துவிட்ட வெறுப்பைத்தான் நம்மீது உமிழ்கிறாரே தவிர, அதில் எந்த நேர்மையான பதில்களும் இல்லை.


இவர்கள் அனைவரும் பொதுவாக, நமது விமர்சனங்களின் மீது ஒரு மதிப்பீடு கொண்டிருக்கின்றனர். மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர்கள் முதல் கனிசமான அணிகள் வரை அந்த மதிப்பீட்டில் நின்று கொண்டுதான் ....வின் விமர்சனங்களைப் பார்க்கின்றனர். அது என்ன மதிப்பீடு? "இந்த .... காரனுக்கு நம்ம கட்சியை விமர்சிப்பதைத் தவிர வேறு வேலையே கிடையாது. நாம் எது செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து விமர்சிப்பதுதான் அவர்களது வேலை. அவர்களுக்கென்று தனித் திட்டம் எதுவும் கிடையாது, சி.பி.எம். கட்சியை விமர்சிப்பதுதான் அவர்களது திட்டம்." என்று கிளிப்பிள்ளை மாதிரி அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இதையே உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கின்ற அப்பாவிகள் பலர் இருக்கிறார்கள்.


ஆனால், இவர்களது மறுபக்கம் அவர்களுக்குத் தெரிவதில்லை. நாம் மார்க்சிஸ்டுகளை விமர்சிப்பது ஒருபுறமிருக்கட்டும்; மார்க்சிஸ்டுகள் நம்மை எப்படியெல்லாம் அவதூறு செய்கிறார்கள், பொதுவெளியில்? "பல்லாவரம் பகுதியில் நக்சலைட் நடமாட்டம்" என்று தலைப்பிட்டு தமது பத்திரிக்கையான தீக்கதிரில் முழுக்க முழுக்க அவதூறுகளாலான செய்திகளை, ஆட்காட்டும் நோக்கத்தோடு வெளியிடுகின்றனர். அதுவும், திரிசூலமலை முதல் திருநீர்மலை வரை அனைத்து மலைகளிலும் நாங்கள் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதாகவும் அதனை இவர்கள் நேரில் கண்டதைப் போலவும் அவதூறு செய்கிறார்கள்.


நேர்மையான தோழர்களே நீங்கள் சொல்லுங்கள்; நேரடியாக முகத்துக்கு நேராக, அரசியல் ரீதியாக விமர்சனம் செய்கின்ற ....தோழர்களின் அனுகுமுறை தவறானதா, அல்லது இப்படி கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழின் மூலமாக ஆட்காட்டும் நோக்கத்தில் அவதூறு செய்கின்ற இவர்களது அனுகுமுறை தவறானதா? யாருடைய அனுகுமுறையில் துரோகமும் வஞ்சகமும் நிறைந்திருக்கிறது?


பொதுத்துறை தனியார்மயம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், காடுகள்-மலைகள்-நதிகள் ஆகியவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தல் போன்ற மறுகாலனியாக்க நடவடிக்கைகளில் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டுவருகிறது இந்திய நாடாளுமன்றம். இடையில் பல ஆட்சிமாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதில் எந்த ஆட்சியும் சோடைபோகவில்லை. இதனைக் கண்டித்து போராடுவதற்கு மக்களை அணிதிரட்டுவதற்குப் பதிலாக, மறுகாலனியாக்கக் கொள்கைகளை மக்கள் மீது திணிப்பதற்குத் துப்பாக்கி தூக்கிக்கொண்டு செல்கிறதுமார்க்சிஸ்டுகட்சியின் அரசு.


தமது ஆளும் வர்க்க சேவையை கம்யூனிச முகமூடி கொண்டு மறைத்துக் கொள்கிறது. அந்த முகமூடியை விலக்கி உண்மை முகத்தை மக்களுக்கும், அக்கட்சியின் தலைமையை உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கும் நேர்மையான அணிகளுக்கும் காட்டுவதும் அவர்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்தி வீழ்த்துவதும் மிகவும் அவசியமான, அரசியல் ரீதியான செயலாகக் கருதுகிறேன்.


நாங்கள் சி.பி.எம். கட்சியை விமர்சிக்கவே கூடாது என்றும், விமர்சித்துவிட்டதாலேயே எம்மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கின்ற தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் கட்சியின் கொடியையும், பெயரையும் மாற்றிக்கொண்டு, வேறு ஏதேனும் ஒரு ஓட்டுக்கட்சியின் பானியிலான கொடிதோரணங்களுக்கு மாறிவிடுங்கள்; உங்களை நாங்கள் இத்தனை கடுமையாக விமர்சிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதில் இருக்கின்ற கம்யூனிச அடையாளங்கள் உழைக்கும் மக்களுக்குச் சொந்தமானது. ஆனால் அதைவைத்து நீங்கள் செய்கின்ற சேவையோ முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சொந்தமாக இருக்கின்றது. இந்த இழிவிலிருந்து உங்கள் கட்சியைக் காப்பாற்றுவது கடமை என்று கருதினால் உட்கட்சி போராட்டம் நடத்துங்கள். இல்லையேல் கம்யூனிச அடையாளங்களைத் துறந்து உங்களது இயல்பான, உண்மையான அடையாளங்களை வைத்துக்கொண்டு களத்தில் நில்லுங்கள். உங்களுடைய அங்க அடையாளங்களாக கம்யூனிசம் தொடரும் வரை எமது கூர்மையான விமர்சனங்களும் எதிர்வினைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.


கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைத் தத்துவம்; அதனை முகப்பூச்சாக ஏகாதிபத்திய அடிவருடிகள் வைத்திருப்பது அவமானகரமானது. அறிவால் சுத்தியல் சின்னம்புரட்சித் தலைவியின் பொற்பாதங்களுடைய ஆசிபெற்ற சின்னமாகஅறிவிக்கப்படுவது இழிவானது. கம்யூனிசத் தத்துவம்புரட்சித் தலைவியின் பாதணிகளாக இருக்கவேண்டுமா? அல்லது பாட்டாளி வர்க்கத்தின் கவசமாக இருக்க வேண்டுமா? என்பதைமார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள்தான் முடிவு செய்யவேண்டும். ரெண்டு சீட்டுக்காக கொள்கையை வளைத்துக் கொண்டு சமரசம் செய்துகொள்ளுகின்ற தலைமை உங்களுக்கு வேண்டுமா? எதிலும் சமரசம் செய்யாத புரட்சியாளர்களின் பாதை உங்களுக்கு வேண்டுமா? நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். நன்றி!


தோழமையுடன்,
து. சுரேஷ்.
letusdebate1@gmail.com

=================================================

முந்தைய பதிவுகள்:

1. த.மு.எ.க.ச.தமிழ்ச்செல்வனுடன் ஒரு அரசியல் விவாதம் (பாகம் 2)

2. த.மு.எ.க.ச. தமிழ்ச்செல்வனுடன் ஒரு அரசியல் விவாதம்!

3. நக்சல்பரி அரசியல்: டைஃபி கண்ணனுடன் ஒரு விவாதம்!

4. ‘மார்க்சிஸ்டு’ கட்சியினரை வெற்றிலை பாக்கு வைத்து விவாதிக்க அழைக்கிறேன்!

5. பொது வேலை நிறுத்தமா? போலி வேலை நிறுத்தமா!

6. மன்மோகனுக்கு ஒரு ‘ஓ’ போடுவோம்!

=================================================

No comments:

Post a Comment