Tuesday, September 7, 2010

பொது வேலை நிறுத்தமா? போலி வேலை நிறுத்தமா?!

இன்று (07.09.2010 - செவ்வாய் கிழமை) அகில இந்திய வேலை நிறுத்தம். விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம், பொதுதுறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டம், தொழிலாளர் வேலையிழப்பு, முறைசாரா தொழிலாளர் பாதுகாப்புக்கு ஆணையம் அமைக்கக் கோருதல் உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேற்கண்ட கோரிக்கைகளில் எந்தப் பிழையுமில்லை. மிகவும் நியாயமான கோரிக்கைகள்தான் இவைகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு, 6-வது ஊதியக்குழுவை நிறைவேற்ற வேண்டும் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டும் முன்வைத்துப் போராடுகின்ற போலிகம்யூனிஸ்டுகளின் சங்கங்கள், இன்றையதினம் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட முன்வந்திருப்பது நல்ல முன்னேற்றம்தான்.

பெரும்பான்மை மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் போதெல்லாம் ‘அரை நிர்வாண போராட்டம்’, ‘முக்கால் நிர்வான போராட்டம்’, ’மொட்டையடிக்கும் போராட்டம்’, ‘பாடைகட்டும் போராட்டம்’ என்றெல்லாம் நடத்துவார்கள் போலிகம்யூனிஸ்டுகள். இத்தகைய போராட்ட முறைகள், உணர்ச்சிகரமாக அனுகவேண்டிய பிரச்சினைகளைக் கூட கேலிக்குரிய பிரச்சினையாக உருமாற்றம் செய்துவிடும் பொருட்டு நிகழ்த்தப்படுபவைதான்.

ஆனால், இன்றைய வேலை நிறுத்தத்தில் அத்தகைய ‘சிறப்பு’ அம்சங்கள் எதுவும் இடம்பிடிக்கப்போவதில்லை. ஆனால், மேற்கூறிய கேலிக்குரிய போராட்ட முறைகளைவிடக் கேவலமான ஒரு முக்கிய அம்சம் இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இருக்கிறது. மார்க்சிஸ்டு’ கட்சியின் சி.ஐ.டி.யூ., வலது கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரசு கட்சியின் ஐ.என்.டி.யூ.சி., பாரதிய ஜனதா கட்சியின் பி.எம்.எஸ் (பாரதீய மஸ்தூர் சங்கம்) உள்ளிட்ட ஏராளமான கட்சிகளின் தொழிற் சங்கங்கள் இணைந்து நடத்தியதால் இது ஒரு ‘அடையாள’ வேலைநிறுத்தம் தான் என்பது தெளிவாகியுள்ளது.

ஆளும் கட்சியான காங்கிரசு கட்சியின் சங்கமும் எதிர்கட்சிகளான பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளின் சங்கங்களும் கரம் கோர்த்துக் கொண்டு யாரை எதிர்த்துப் போராடுகின்றன? பாகிஸ்தான் அரசை எதிர்த்தா?!  மேற்கண்ட நியாமான கோரிக்கைகள் ஒருபுறமிருக்க, அத்தகைய நெருக்கடியை மத்தியில் ஆளுவதன் மூலமாக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கத்தையும் இணைத்து கொண்டு போராடுவதை கேலிக்கூத்து என்பதா பித்தலாட்டம் என்பதா?

குறிப்பாக, விலைவாசி உயர்வுக்கு ஊகவணிகம்தான் காரணம் என்பதை உறுதிபட அறிவித்த பிறகும் அதனை நிறுத்தாமல், ஊக்குவிக்கிறது மத்திய காங்கிரஸ் அரசு. மின்வெட்டு பிரச்சினைகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் கட்டணமற்ற மின்சாரக் கொள்ளையே காரணமாக இருக்கிறது. ஏராளமான வரிச்சலுகைகளுடன் சேர்த்து கட்டணமற்ற முறையிலும் சொற்ப கட்டணத்திலும் அந்நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குகின்றன, அந்தந்த மாநில அரசுகள்.

தொழிலாளர் வேலையிழப்பைப் பொறுத்தவரை உலகமயமாக்கலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் படையெடுப்புகளும்தான் காரணமாகின்றன. உள்நாட்டுத் தொழில்களை அழித்து காய்கறி வியாபாரத்தில் கூட ஏகபோக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. அரசின் இப்படிப்பட்ட கொள்கைகளால் சுமார் 60 இலட்சம் தொழிலாளர்கள் தமிழகத்தில் மட்டும் வேலையிழந்து வாடுகின்றனர்.

முறைசாரா தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ந்த குறிப்பிட்ட கால வரம்புக்குள் முறைப்படுத்தப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களாக ஆக்க வேண்டும் என்ற சட்டங்கள் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளால் கிழித்து வீசப்பட்டிருக்கின்றன. சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமைகூட இன்றையதினம் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. மறுப்பது முதலாளிகள் மட்டுமல்ல; நமது பெருமதிப்பிற்குரிய மத்திய-மாநில அரசுகளும்தான். அப்படிப்பட்ட அரசை நடத்திவரும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து மத்திய அரசை எதிர்ப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமில்லையா!

பொதுத்துறை நிறுவனங்களை அரசு கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மோசடியில் இப்போதைய காங்கிரசு அரசு மட்டுமல்ல, முந்தைய பா.ஜ.க. அரசுக்கும் கனிசமான பங்கு உண்டு. பி.எஸ்.என். எல். தொடங்கி ரயில்வே வரை அனைத்திலும் தனியார்மயம் நுட்பமாகப் புகுத்தப்படுகிறது. மம்தா பானர்ஜி ரயில்வே துறையின் பங்குகள் விற்பனை செய்வதைத் தவிர்க்க முடியாது, என்று மிகவும் நிதானமாக, தெளிவாக, திமிராக நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கிறார்.

எனவே, அரசு வேறு பன்னாட்டு, உள்நாட்டு ஏகபோக முதலாளிகள் வேறு அல்ல. விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்காத மத்திய அரசு, அம்பானி சகோதரர்களின் குடும்பப் பிரச்சினைகளுக்காக மூன்றுநாள் அவையில் விவாதித்ததை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை முதலாளிகளே தங்கள் இஷ்டம்போல ஏற்றிக்கொள்ள வெளிப்படையாக அறிவித்து தமது வர்க்கப் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டது, மத்திய அரசு.

மக்களைப் பாதிக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு, வக்கிரத்தன்மையுடன் திணித்துவரும் இந்த அரசை அரசியல் ரீதியாக எதிர்ப்பதாக எதிர்கட்சிகள் சொல்வது கடைந்தெடுத்த பொய். அதைவிடப் போலியானது அதனை எதிர்த்து இவர்களே போராடுவதாகச் சொல்லிக்கொள்வது. காங்கிரசு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தா ஐ.என்.டி.யூ.சி.யுடன் இணைந்து இவர்கள் போராடுகிறார்கள்? போலிகம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்க வாதம் எத்தனை தகிடுதத்தங்கள் நிறைந்ததாக இருக்கின்றது என்பதை இப்போராட்டத்தினூடாகப் புரிந்துகொள்ளலாம்.

உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற மறுகாலனியக் கொள்கைகளை வெவ்வேறு அளவுகோலில் ஆதரித்து வரும் இந்த ஓட்டுக்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய இந்த பொது வேலைநிறுத்தம் ஒரு கடைந்தெடுத்த பித்தலாட்டம். அரசியல் ரீதியாக மக்களை ஏமாற்றுகின்ற மோசடி!

எதிரியையும் துரோகியையும் பிரித்தறியமுடியாமல் இருந்த காலம் போய் இன்று வெளிப்படையாகவும் வெட்ட வெளிச்சமாகவும் அவர்களுக்குள் இருக்கும் கள்ளக் கூட்டு அம்பலமாகியுள்ளது. அவர்களே தங்களை தெளிவாக அடையாளம் காட்டிக்கொண்டிருக்கின்றனர். கட்சியின் அடிப்படையான கொள்கைவேறு நடைமுறைக் கொள்கை வேறு என்று விளக்கம் சொல்கின்றனர் ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் தலைவர்கள். நடைமுறைக் கொள்கை என்பது தேதலுக்குத் தேர்தல் அணிமாறி ஆதரிப்பதை நியாயப்படுத்தி அவர்கள் சொல்லிக்கொள்ளும் நியாயவாதம்.

தேர்தல் கூட்டணி வேறு கட்சியின் அடிப்படையான கொள்கை வேறு என்று சொல்லிக்கொள்ளும் போலிகம்யூனிஸ்டு கட்சிகள் இத்தகைய போராட்டங்களைக் கூட நேர்மையாக நடத்தாமல், காங்கிரசையும் பா.ஜ.க.வையும் இணைத்துக் கொண்டு போராடுவதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தல் கூட்டணிக்கு இவர்கள் சொல்லும் காரணமும் பொய், போராட்டக் கூட்டணிக்கு சொல்லும் காரணமும் பொய் என்றாகிறது. யாரை எதிர்த்துப் போராடுகிறோம் என்பது கூட தெரியாமல் போராடுவது அபத்தமானது.

மேற்குறிப்பிடப்பட்ட மிகவும் நியாமான கோரிக்கைகளை நாம் வென்றெடுக்க, இத்தகைய பிழைப்புவாத சங்கங்ளின் தலைமையில் போராடுவதைவிட, புரட்சிகர தொழிற்சங்கங்களில் இணைந்து போராட வேண்டும். புரட்சிகர தொழிற்சங்கங்கள்தான் வர்க்க உணர்வை ஏற்படுத்தி வர்க்க எதிரிகளை நேரடியாக அடையாளம் காட்டுகின்றன. போராடுவோம், போராடுவோம், உண்மையான சமூகமாற்றத்தை உருவாக்கித்தருகின்ற புரட்சியை நோக்கி அணிதிரள்வோம்! நன்றி!

=====================================================

தொடர்புடைய பிற பதிவுகள் (அவசியம் படிக்க கீழே சொடுக்கவும்...)






=====================================================

தோழர்களே, வாசக நண்பர்களே!

தங்களது மறுப்புக் கருத்துக்களை இப்பதிவின் பின்னூட்டப் பகுதியில் தவறாமல் பதிந்து விவாதிக்க முன்வாருங்கள்.

தங்களது ஆதரவுக்கருத்தை கீழ்கண்ட திரட்டிகளின் சுட்டிகளின் மீது கிளிக் செய்து வாக்களித்து தெரியபப்டுத்துங்கள். நன்றி!


2 comments:

விடுதலை said...

வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஸ்தம்பித்தன. மலைப் பகுதிகளில் அமைந்திருக்கும் சிக்கிம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்பட நாட்டின் எந்தப் பகுதியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் விடுபடவில்லை. வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. நிலக்கரி சுரங்கங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொலை தொடர்பு நிலை யங்கள், பெட்ரோலிய தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், அஞ்சல் நிலையங்கள், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள், சாலை போக்குவரத்து, அங்கன்வாடி, கட்டுமானத் தொழில் உள்பட அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டுள்ள கோடிக் கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றனர். வேலைநிறுத்தத்திற்கு ஆதர வாக பல்வேறு மாநிலங்களில் லட்சக் கணக்கான விவசாயத் தொழிலாளர்களும், முறைசாராத் தொழிலாளர்களும், இதர பகுதி தொழிலாளர்களும் மறியல், தர்ணாப் போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர்.

தொழிலாளர் வேலைநிறுத்தத்தால் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட அனைத்து பெரும் நகரங் களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. மேற்குவங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் முற்றிலும் ஸ்தம்பித் தன. இம்மாநிலங்கள் மட்டுமின்றி, அசாம், மேகாலயா, மணிப்பூர், ஜார் கண்ட், பீகார், ஒரிசா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, சத்தீஸ்கர், கோவா, இமாச்சலப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநி லங்களிலும் தொழிலாளர் வேலை நிறுத்தம் எழுச்சியோடு நடைபெற்றது.

63 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய தொழிலாளி வர்க்கம் ஒரே குரலில் நடத்திய இந்த மாபெரும் வேலை நிறுத் தத்தில் 10 கோடிக்கும் அதிகமான தொழி லாளர்கள் பங்கேற்றார்கள்

விவாதகளம்... said...

தோழர் விடுதலை,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இந்தப் பதிவில் உங்கள் கட்சியின் மீது சுட்டிக்காட்டப் பட்டிருக்கும் மையமான விமர்சனத்தைப் படித்தீர்களா? அது உங்களுக்குப் புரிந்ததா? அவ்விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் இவ்வளவுதானா?

ஆம். என்பது உங்கள் பதில் என்றால் உங்கள் மீது பரிதாபம்தான் வருகிறது. நான் ஒருபோதும் உங்களைத் தவறாக கருதமாட்டேன். ஏனெனில், உங்கள் கட்சியின் போலித்தனமான அரசியல் நிலைப்பாடுகள்தான் உங்களை பதில் சொல்லமுடியாமல் முடக்கியிருக்கிறது என்பதை நான் அறிவேன்.

கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதனால், உங்கள் கட்சி இதுபோன்ற விமர்சனங்களிலிருந்து காப்பாற்றப்படுவதாக நினைத்துக் கொள்கிறீர்களா?

சிந்தியுங்கள். உங்களிடமிருந்து எப்பாடுபட்டாவது ஒரு சரியான பதிலைப் பெறவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அரசியல் ரீதியாக அம்பலப்பட்டுக் கிடக்கும் போது பதில் என்று ஏதாவது சொல்லி மீண்டுவரவேண்டியது உங்களது கடமை. உங்கள் அரசியலின் வண்டவாளங்கள் இப்படி பொதுவெளியில் நாறிக்கொண்டிருக்கும் போது கூட உங்கள் கடமையை நீங்கள் தவறவிடுகிறீர்கள் என்றால் என்ன சொல்ல?

தயவு செய்து பரிசீலியுங்கள். பிறகு பதிலளியுங்கள். நன்றி!

Post a Comment