சைக்கிளில் கட்டிக் கொண்டு,
எதிர்காற்றை முறித்து
மிதிவண்டி அழுத்துகையில்
பாட்டிலில் கலந்த காற்று
நெஞ்சக் கூட்டினில் வந்து வெடிக்கும்
கமறும் இரத்தத்தை
எச்சிலாய் காறித்துப்பி மேட்டினில் ஏறி
ஒற்றை மனிதர்களாய்
உள்ளூர் சந்தையை உருவாக்கிய தொழிலாளர் தலையில்,
ஒரே நாளில்
கோக் பெப்சியை
டன் கணக்கில் இறக்கிவிட்டு
சிறுதொழில் முகத்தையே சிதைத்த
பயங்கரவாதி யார்?
இந்த நாடுமாறி அரசா?
இல்லை நக்சலைட்டா!
நீங்கள் கஞ்சிச் சட்டை போட
தன் நெஞ்சுக் கட்டை தேய
கைத்தறியை இழுத்து, இழுத்து அடிக்கும் கைகள்,
தலைமுறையாய்த் தறியாடி
இடுப்பெலும்பு சுழலும்
தறிநூலாய் தொண்டை நரம்புகள்
அசைந்து அசைந்து வெறும் வயிற்றில்
உயிர் உழலும்
நசுங்கிய சொம்புத் தண்ணி
அவ்வப்போது நாவுக்கு பசைபோடும்...
பசியின் நெசவு வெறுங்குடல் பின்னும்
படாதபாடுபட்டு கைத்தறியை நூலாக்கி
சுயதொழில், சுயமரியாதையுணர்வோடு வாழ்ந்த
நெசவாளர்களின் கைத்தறி ரகங்களை பிடுங்கி
விசைத்தறிக்குக் கொடுத்து,
அந்நிய மூலதனத்தால் தறிக்கட்டைகளை உடைத்து
கைத்தறிக்கான பஞ்சை கட்டாய ஏற்றுமதி செய்து
மானங்காத்த நெசவாளிகள் கடனை அடைக்க
தன் உடலை விற்கும்படி,
உருத்தெரியாமல் சிதைத்த இரக்கமற்ற பயங்கரவாதி யார்?
இந்த நாடாளுமன்ற சாடிஸ்டுகளா?
நக்சலைட்டுகளா!
கண்தோல் காய்ந்தாலும்
மந்தோல் காயாமல்
மடை பார்ப்பான் விவசாயி.
பிள்ளை முகத்தில் கட்டிவந்தாலும்
பெரிதாக அலட்டாமல்
சுண்ணாம்பைத் தடவிவிட்டு...
நெல்லின் முகத்தில் ஒரு கீறல் எனில்
வட்டிக்கு கடன் வாங்கி
வைப்பான் அடி உரம்
வரப்பின் சேற்றில் பல் துலக்கி
மடையின் நீரில் முகம் மழுவி
வயல் நண்டில் உடல் வலி போக்கி
கதிரின் வாசத்தில் உயிர்வலி போக்கி
களத்து மேட்டில் நெல்லைத் தூற்றும்
உழைப்பின் வேகத்தில் தூரப் போய்விழும் சூரியன்,
அவரை, மொச்சை, துவரை
ஊடுபயிரோடு
அத்தை, மாமன், தமக்கை உறவும்
வளர்ந்து நிற்கும்.
பால்மாடு, வண்டிமாடு
பசுந்தழை மேயும் ஆடு,
அறுவடைக்காலத்தில் தன்பங்கையும் சேமித்து
மாட்டுக் கொட்டகைக்குள் மகிழ்ந்திருக்கும் குருவிக்கூடு
இப்படி ஒட்டுமொத்த
உயிர்ப்பு பொருளாதாரமாய் விளங்கிய
வளங்களை நீரின்றி, விலையின்றி திட்டமிட்டு அழித்து
சிறப்பு பொருளாதார மண்டலமென சீரழித்து
ஏர்முனை ஒடித்து, கால்நடை அழித்து
நாடோடிகளாக விவசாயிகளை துரத்தி;
நகரத்து உழைப்பில் இரத்தம் குடிக்கும்
பச்சை பயங்கரவாதி யார்?
இந்த தேசத்துரோக ஆட்சியாளர்களா?
தேசப்பற்றுள்ள நக்சலைட்டுகளா!
கடும்பனிக்கு அஞ்சி
சூரியனே தலைமறைவாய் கிடக்கும்
கம்பளிப் பூச்சியும் நகர்ந்து இலை மறைவாய்ப் படுக்கும்.
சிறுகடை வியாபாரி கைகளோ போய் வேகமாய்
பஜாஜ் எம்.எய்டியை எடுக்கும்...
கோயம்பேடு சரக்கை குந்த இடமின்றி அடுக்கும்
வந்த காய்கறியை குடும்பமே வகை பிரிக்கும்.
நடுத்தர வர்க்கத்தின் நாக்கு விழிக்கும் முன்னே
பால் கவர் போட்டு,
அடுத்த வேலையாய் தண்ணீர் கேன் போட்டு
அடுத்தடுத்த குரலுக்கு அளந்து போட்டு,
திரிந்த பாலுக்கும் குழைந்த அரிசிக்கும்
எரிந்து விழும் பார்வையை ஆற்றுப்படுத்தி,
மாற்றிக் கொடுத்து
மெல்ல மெல்ல சில்லறை வணிகச் சந்தையை
தன் கையால் காலால் கட்டி எழுப்பிய வியாபாரிகளை,
ஒரே போடில் தலைவேறு, முண்டம் வேறாய்
சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தையும்
ரிலையன்ஸ் டாடா வணிக மிருகங்களையும்
உலவவிட்டு
சிறுகடை வியாபாரிகளை
கடை கடையாய் வேட்டையாடிய
கண்மூடித்தனமான பயங்கரவாதி யார்?
இந்தக் கயவாளி அரசா?
மக்களைக் காக்கத் துடிக்கும் நக்சலைட்டா!
ஹுண்டாய் கார் போகும் சாலையில்
குடிசைகளின் நிழல் விழுந்தால் கறையாகுதாம்,
மேட்டுக் குடிகள் மிதக்கவிட்ட கூவம்
ஒட்டுக் குடிகளின் மூச்சுபட்டு அழுக்காகுதாம்
சிங்காரச் சென்னையின் அழகுக்காக
அடிக்கடி தீக்குளிக்கின்றன குடிசைகள்.
பற்றவைக்கும் பயங்கரவாதி யார்?
- துரை. சண்முகம்.
===================================================
“மறுகாலனியாக்கக் கொலைக்களங்கள்”
தோழர் துரை.சண்முகம் அவர்களுடைய கவிதைத் தொகுப்பிலிருந்து மேற்கண்ட கவிதை இங்கு பதிவிடப்பட்டுள்ளது.
===================================================
வெளியீடு:
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
எண். 10, அவுலியா தெரு,எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
தொலைபேசி: 044-28412367
===================================================
தொடர்புடைய பிற பதிவுகள்:
1. வா... இயற்கையே உன்னைப் போராட அழைக்கிறது!
2. முன்னேறிய சிந்தனை உள்ளவனே முன்னேறிய மனிதன்!
3. யார் கொலைகாரன்? யார் பயங்கரவாதி?
========================================================
No comments:
Post a Comment