அன்பார்ந்த தோழர்களே,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் நான் விவாதிக்க முயன்றதையும் அதனை அவர் மிகவும் அலட்சியமான முறையில், பொறுப்பற்ற தன்மையோடு, நக்கல் தொனியில் எதிர்கொண்டதையும் எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அவர் மின்னஞ்சல் மூலமாக ஒரு நெடிய பதிலைத் தெரிவித்திருந்தார். (அதனை இப்பதிவின் பின்னூட்டப் பகுதியில் முதல் பின்னூட்டமாகப் பதிப்பித்திருக்கிறேன், தோழர்கள் படிப்பதற்காக...)
அவருடைய இந்த பதிலிலும்கூட, விமர்சித்துவிட்டானே என்கிற எரிச்சலில் கோபத்தையும் வெறுப்பையும் என்மீது உமிழ்கின்றாரே தவிர, முறையான, பொறுப்பான பதில்களை இந்த நிமிடம் வரை அவர் தரவில்லை. எனது சந்தேகங்களை, விளக்கம் கோருகின்ற வினாக்களை வசவுகள் என்று மதிப்பிடுகிறார். மேலும் ‘மார்க்சிஸ்டு’ கட்சியை விமர்சிப்பதைத் தவிர வேறெந்த வேலையுமற்றவர்கள் என்று எம்மீது முத்திரை குத்தி எனது எளிய கேள்விகளையெல்லாம் ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளவும் முயற்சிக்கிறார்.
”நாங்க எப்படியாவது கிடந்து நாசமாப்போறோம், நீங்க முன்னேறுகின்ற வழியைப் பாருங்கள், எங்களை ஆளைவிடுங்க...” என்று சொல்லி விவாதிப்பதைத் தவிர்த்து விலகிச்செல்ல முற்படுகிறார். ”உங்களுக்கு பதில் சொல்வதெல்லாம் வெட்டிவேலை” என்றும் அழுத்தம் திருத்தமாக தமது மின்னஞ்சல் கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துவிட்டார். எதிர்கருத்துள்ளவர்களிடம் விவாதித்தல் கூடாது; பாராட்டுரைகளால் சொறிந்துவிடுகின்ற அற்பர்களிடம்தான் விவாதிக்க வேண்டும்; அதில்தான் இனிமை உள்ளது என்று நினைக்கிறார் போலும்.
ஆக, சி.பி.எம். கட்சியின் ஏனைய தலைவர்களிடம் உள்ளது போன்ற, பொதுத்தளத்தில் விவாதிக்கத் தயங்குகின்ற நோய்க்கு தோழர் தமிழ்ச்செல்வனும் ஆட்பட்டிருக்கிறார் என்பதுமட்டும் தெளிவாகிறது. ”உங்கள் வினாக்களுக்கெல்லாம் என்னிடத்தில் பதிலில்லை” என்று ஒற்றை வரியில் நேர்மையாக ஒப்புக்கொள்ளத் துணிவில்லாமல், ”உங்களுடன் விவாதித்துப் பலனில்லை” என்றும், “எங்களை விமர்சிப்பதே உங்கள் கொள்கை எனும்போது என்னால் எப்படி விவாதிக்க முடியும்” என்றும் மழுப்பல் வாதம் பேசி, விவாதத்திலிருந்து விலகி ஓடிவிட முயலுகிறார். இருப்பினும் அரசியல் ரீதியில் எனக்கிருக்கும் கேள்விகளுக்கு ‘மார்க்சிஸ்ட்’ கட்சி நண்பர்களிடமிருந்து விடைபெறுவது அவசியம் என்று கருதுகிறேன். விடையளிக்க முடியாத மோசடி அரசிலைக் கொண்டிருக்கும் அக்கட்சியை முடிந்தவரை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதும் அவசியம் என்றே கருதுகிறேன்.
மார்க்சிஸ்டு கட்சியை விமர்சிப்பதற்காகவே கட்சி நடத்துபவர்கள் என்று எமது அமைப்பின் மீது முத்திரை குத்தும் இவர்கள், மேற்குவங்கத்தின் சிங்கூர், நந்திகிராம், லால்கார் பகுதி ஏழை, எளிய, விவசாய, பழங்குடியின மக்களின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவதையும் பேசுவதையும் முழுநேர வேலையாக வைத்துள்ளனர். மாவோயிஸ்டுகள் மீது அவதூறு பரப்பி வசைபாடுவதையே இவர்களுடைய அனைத்து மொழிப் பத்திரிகைகளும் செய்துவருகின்றன. எனவே, தமது கட்சியை விமர்சிக்கக் கூடாது என்று அவர்கள் எம்மைப்பார்த்து சொல்வதற்கு எந்த உரிமையும் கிடையாது. நேர்மையாக பதில் சொல்ல மறுக்கும் அவர்களிடமிருந்து உரிய விளக்கங்களை வரவிருக்கின்ற புரட்சிகரச் சூழல் பெற்றுத்தரும்.
நந்திகிராமில் நிலம் கையகப்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டது மம்தா+மாவோயிஸ்ட்களின் பொய்ப்பிரச்சாரமே தவிர தமது கட்சி நிலப்பறிப்பு குறித்து ஒரு துண்டறிக்கை கூட முறைப்படி வெளியிடவில்லை என்று மல்லுக்கு நிற்கிறார்கள், மார்க்சிஸ்டு பொலிட்பீரோ முதல் தமிழ்ச்செல்வன் வரையிலான தலைவர்கள். ஆனால், இவர்களது கட்சியினைச் சார்ந்த, நந்திகிராம் பகுதியின் எம்.பி.யான லக்ஷ்மண் சேத் என்பவர் தலைவராக இருக்கும் ‘ஹால்டியா வளர்ச்சிக் குழுமம்’ என்கிற நிறுவனம் அப்பகுதியிலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலமாக நிலம் கையகப்படுத்தவிருக்கும் தகவலை முறையாக தெரிவித்ததன் விளைவே இப்போராட்டம், என்பதனையும் சி.பி.எம். பத்திரிகைகள் பதிவு செய்திருக்கின்றன.
ஆக, கையகப்படுத்தப்படாத நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளப்போகிறது என்று மக்களுக்கு அறிவித்தது, மாவோயிஸ்டுகளோ அல்லது மம்தாவோ அல்ல; அதற்கான முறையான அறிவிப்பை ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அவரது தலைமையிலான அந்த வளர்ச்சிக் குழுமமுதான் என்பது இவர்களின் மூலமாகவே தெளிவுபடுத்தப் பட்டுவிட்டது. “அவர்கள் எமது அரசைக் கேட்காமல் தானாகவே அவசரப்பட்டு இத்தகவலைத் தெரிவித்துவிட்டனர். அவர்களது இந்த அறிவிப்பு அரசுக்குத் தெரியாது” என்று விளக்கமளித்துள்ளார், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.
’பொய்த்தகவல் கொடுத்து மக்கள் போராடுவதற்குக் காரணமாக அமைந்த’ தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மண் சேத் என்பவர் மீது குற்றம் சாட்டுவதற்குப் பதில், அவர்மீது முறையான நடவடிக்கை எடுப்பதற்கு பதில், நிலமீட்பு போராட்டத்திற்கு மக்களுக்கு வழிகாட்டிய மாவோயிஸ்டுகள் மீது இன்றுவரை வெறுப்பை உமிழ்வது, அவதூறன்றி வேறென்ன? அரசுக்கு எதிராகப் போராடிய குற்றத்திற்காக அப்பாவி மக்களையும் மாவோயிச பயங்கரவாதி என்று போலியாக முத்திரை குத்தி அரச பயங்கரவாத தாக்குதலை ஏவிவிட்டது எப்படிப்பட்ட பச்சைத் துரோகம்?
பன்னாட்டு கம்பெனிகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்து தொழில் தொடங்கினால் தமது மாநிலமே வளர்ச்சியின் உச்சத்தை எட்டிவிடும் என்று மார்க்சிஸ்டு தலைவர்கள் (மறைந்த ஜோதிபாசு உட்பட) சொல்லிக்கொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை.
நந்திகிராம் சுற்றியுள்ள பகுதியில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்து, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்து, அங்கு ஒரு இரசாயண மையத்தை (Chemical Hub) அமைக்கின்ற ஆலோசனையில் தமது அரசு இருந்ததாக புத்ததேவ் பட்டாச்சார்யா தமது சட்டமன்ற விளக்கவுரையிலேயே தெளிவாக அறிவித்திருந்தார். அதற்காக நிலம் கையகப்படுத்தவுள்ள அறிவிப்பை மட்டும் முறைப்படி அரசு வெளியிடுவதற்கு முன்னதாகவே ஹால்டியா வளர்ச்சிக்குழுமம் முந்திக்கொண்டு வெளியிட்டுவிட்டது, என்பதுதான் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் அறிவிப்பு. ஆக, அங்கு பத்தாயிரம் ஏக்கரில் அமெரிக்க டௌ கெமிக்கல்ஸ் (யூனியன் கார்பைடு) நிறுவனமும், இந்தோனேசிய சலீம் குழுமமும் இரசாயண தொழிற்சாலைகள் அமைக்கின்ற முயற்சி இருந்தது இவர்களே ஒப்புக்கொள்ளும் உண்மை.
கம்யூனிசத்தின் பெயரால் கட்சி வைத்துக்கொண்டு, கம்யூனிசத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்டு 35 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் இவர்கள், பன்னாட்டு கம்பெனிகளின் தாசர்களாக மாறி மக்களை சுட்டு வேட்டையாடி அந்த நிலங்களை முதலாளிகளுக்குப் பிடுங்கிக் கொடுக்க முயன்றது அவர்கள் அறிவிப்புகளின் மூலமாகவே ஒப்புகொண்டுள்ள உண்மை. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வேண்டும்; ஏழை, எளிய, விவசாயிகளின் விளைநிலங்கள் பல்லாயிரம் ஏக்கர் வேண்டும்; ஏகாதிபத்திய - முதலாளித்துவ வளர்ச்சியில்தான் தேசத்தின் வளர்ச்சியே அடங்கியிருக்கிறது; என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களின் அசைக்க முடியாத வாதம்.
இதுதான் காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் கருத்துக்களாகவும் இருக்கிறது. தண்டகாரண்யா காடுகளிலிருந்து கோடிக்கணக்கான பழங்குடியின மக்களை நாய், நரிகளை அடித்து விரட்டுவதைப் போல துணை இராணுவத்தை விட்டு அடித்து விரட்டிவிட்டு, அந்த மலைகளை, வனங்களை பன்னாட்டு முதலாளிகளுக்குச் சொந்தமாக்குகின்ற நடவடிக்கையை ‘தேசத்தின் வளர்ச்சி’ என்றுதான் ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் சொல்லிவருகின்றனர். அதற்கும் பிரகாஷ்காரத், யெச்சூரி, புத்ததேவ் உள்ளிட்டோர் குறிப்பிடுகின்ற ‘வளர்ச்சி’க்கும் என்ன வித்தியாசம்?
ஆனால், இத்தகைய மறுகாலனியாக்க நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, அதையொட்டியுள்ள சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், ஒரிசா உள்ளிட்ட ஏனைய மாநிலங்களிலும் மாவோயிஸ்டுகள், அந்தந்த பகுதி மக்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்திவருகின்றனர். மாவோயிஸ்டு போராட்டத்தினால்தான் அப்பகுதி மக்கள் நாடு மறுகாலனியாக்கப்படுவதை உணர்ந்துகொள்கிறார்கள். ஓட்டுக்காக கம்யூனிச நாடகம் நடத்துகின்ற இடது, வலது போலிகளால் மக்கள் தங்களது ஆபத்தான நிலையை ஒருபோதும் உணர்ந்துகொண்டதில்லை.மறுகாலனியாக்கத்திற்கு எதிராக சாதாரண மக்களை மாவோயிஸ்டுகள் அணிதிரட்டுவதைத் தடுப்பதற்காகவே காங்கிரசு, பா.ஜ.க. கும்பலுடன் இணைந்துகொண்டு ‘மார்க்சிஸ்டு’களும் பயங்கரவாதம், தீவிரவாதம் என்றெல்லாம் கூச்சல் போடுகின்றனர்.
எதிரிகளின் தூண்டுதலுக்கு ஆளான மக்களால், செய்யாத தவறுக்காக தமது கட்சி தண்டிக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடிப்பது பச்சையான பித்தலாட்டம் என்பது அவர்களுடைய முரண்பட்ட தகவல்களிலிருந்தே உறுதியாகிறது. அண்ணன் தமிழ்ச்செல்வன் தமது பதிலில் வடித்திருந்த கண்ணீர் எத்தனை போலியானது என்பதை இப்போது அவரே உணர்ந்துகொள்ளக்கூடும்.
இதுதான் காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் கருத்துக்களாகவும் இருக்கிறது. தண்டகாரண்யா காடுகளிலிருந்து கோடிக்கணக்கான பழங்குடியின மக்களை நாய், நரிகளை அடித்து விரட்டுவதைப் போல துணை இராணுவத்தை விட்டு அடித்து விரட்டிவிட்டு, அந்த மலைகளை, வனங்களை பன்னாட்டு முதலாளிகளுக்குச் சொந்தமாக்குகின்ற நடவடிக்கையை ‘தேசத்தின் வளர்ச்சி’ என்றுதான் ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் சொல்லிவருகின்றனர். அதற்கும் பிரகாஷ்காரத், யெச்சூரி, புத்ததேவ் உள்ளிட்டோர் குறிப்பிடுகின்ற ‘வளர்ச்சி’க்கும் என்ன வித்தியாசம்?
ஆனால், இத்தகைய மறுகாலனியாக்க நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, அதையொட்டியுள்ள சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், ஒரிசா உள்ளிட்ட ஏனைய மாநிலங்களிலும் மாவோயிஸ்டுகள், அந்தந்த பகுதி மக்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்திவருகின்றனர். மாவோயிஸ்டு போராட்டத்தினால்தான் அப்பகுதி மக்கள் நாடு மறுகாலனியாக்கப்படுவதை உணர்ந்துகொள்கிறார்கள். ஓட்டுக்காக கம்யூனிச நாடகம் நடத்துகின்ற இடது, வலது போலிகளால் மக்கள் தங்களது ஆபத்தான நிலையை ஒருபோதும் உணர்ந்துகொண்டதில்லை.மறுகாலனியாக்கத்திற்கு எதிராக சாதாரண மக்களை மாவோயிஸ்டுகள் அணிதிரட்டுவதைத் தடுப்பதற்காகவே காங்கிரசு, பா.ஜ.க. கும்பலுடன் இணைந்துகொண்டு ‘மார்க்சிஸ்டு’களும் பயங்கரவாதம், தீவிரவாதம் என்றெல்லாம் கூச்சல் போடுகின்றனர்.
எதிரிகளின் தூண்டுதலுக்கு ஆளான மக்களால், செய்யாத தவறுக்காக தமது கட்சி தண்டிக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடிப்பது பச்சையான பித்தலாட்டம் என்பது அவர்களுடைய முரண்பட்ட தகவல்களிலிருந்தே உறுதியாகிறது. அண்ணன் தமிழ்ச்செல்வன் தமது பதிலில் வடித்திருந்த கண்ணீர் எத்தனை போலியானது என்பதை இப்போது அவரே உணர்ந்துகொள்ளக்கூடும்.
எனவே, அண்ணன் தமிழ்ச்செல்வன் என்னை எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் கோபித்துக்கொள்ளட்டும். என்னிடத்தில் விவாதிப்பதைத் தவிர்த்துவிட்டு ‘புரட்சி’யைக் கட்டி இழுத்துவருவதில் கவனம் செலுத்தட்டும். ஆனால், அவரால் விடையளிக்கப்படாமல் கிடக்கும் (பின்வரும்) இக்கேள்விகளுகான விடைகளை மட்டும் சற்று நேரம் ஒதுக்கி தெரிவித்துவிட்டு அவர் விலகிச்செல்லட்டும். இது அவரது அரசியல் நேர்மைக்கும் அறிவு நாணயத்திற்கும் விடப்பட்டிருகின்ற வெளிப்படையான சவால்.
- முதலாளி உழைப்புச் சுரண்டலுக்காகவும் இலாபத்திற்காகவும் தொழில் தொடங்குகின்றானா அல்லது உங்கள் பொலிட்பீரோ தலைவர்கள் சொல்லிக்கொண்டிருப்பது போல நமது நாட்டை வளப்படுத்துகின்ற நோக்கத்தில் தொழில் தொடங்குகின்றானா? என்பதுதான் முதல் கேள்வி.
- ஏகாதிபத்திய ஆதரவு பத்திரிக்கைகள் உங்கள் கட்சியின் அரசுக்கு எதிராக அவதூறு செய்திகளைப் பரப்பிவிடுகின்றனர் என்று தெரிவித்திருக்கிறீர்கள். மக்களைக் கொண்றுவிட்டு அவர்களது உடைமைகளை ஏகாதிபத்திய நிறுவனங்களின் காலடியில் சமர்ப்பிக்கும் உங்கள் அரசை எதிர்த்து அவர்கள் ஏன் கருத்து பதியவேண்டும்? இதில் ஏதோ முரண்பாடாக இருக்கிறதே, தலைவா!
- ஒரு சில முதலாளிகளுக்காக ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான உழைக்கும் ம்க்களின் நிலங்களைப் பிடுங்கிக் கொடுக்கலாமா? இதுதான் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் செயல்தந்திரமா?
- கடந்த செப்டம்பர் -7ம் தேதி நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் உமது கட்சியின் தொழிற்சங்கம் மத்திய அரசைக் கண்டித்து போராடியபோது, மத்தியில் ஆளுகின்ற காங்கிரசு கட்சியையும் உடன் சேர்த்துக்கொண்டு போராடியதே அதன் பொருள் என்ன? அதாவது காங்கிரசு அரசை எதிர்த்து காங்கிரசுடனே கூட்டணி கட்டிக்கொண்டு போராடுவது எப்படிப்பட்டது?
- உலகிலேயே அதிசிறந்த பாரதத்திருநாட்டின் ஜனநாயகத்தின் தூண்களாக பத்திரிக்கை ஊடகத்துறையையும், அரசியல் கட்சிகளையும், நீதிமன்றங்களையும், நாடாளுமன்றத்தையும் சித்தரிக்கிறார்களே, இதுசரி என்று ஒப்புக்கொள்கிறீர்களா?
பின்குறிப்பு: ‘மார்க்சிஸ்டு’ கட்சியைச் சார்ந்த ஏனைய தோழர்களே, மேற்கண்ட எனது பதிவு உள்ளிட்ட அனைத்திலும் உள்ள எனது அனுகுமுறையால் அதிருப்தி கொண்டிருப்பீர்களேயானால், அதன் வடிவத்தை விட்டுவிட்டு உள்ளடக்கத்தினைக் கருத்தில் கொண்டு நீங்களும் என்னிடத்தில் விவாதிக்க வேண்டும். எனது கருத்துக்களில் தவறிருப்பின் தயங்காமல் உங்களது இயல்பான மொழியிலேயே கருத்துக்களைப் பதிந்து விவாதிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
தோழர் தமிழ்ச்செல்வனுக்குப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு தோழர் கூட இக்கேள்விகளுக்கு விடையளிக்கலாம். நன்றி!
(இன்னும் இன்னும் தொடரும்....
====================================================
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
====================================================
3 comments:
அன்பார்ந்த தோழர்களே!
தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எனக்கு மின்னஞ்சல் மூலமாக பின்வரும் நீண்ட பதிலைச் சொல்லியிருக்கிறார். ஏனைய தோழர்கள் பரிசீலிப்பதற்கும் தொடர்ந்து விவாதிப்பதற்கும் பொருத்தமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் அதனை இங்கும் பதிகிறேன். நன்றி!
-----------------------------------------------------
புரட்சித்தோழர் சுரேஷ் அவர்களே..
உங்கள் விவாதக் குறிப்பைப் படித்தேன்.பாராவுக்குப் பாரா தீர்ப்புகளாகச் சொல்லிச் செல்கிறீர்கள்.தீர்ப்பு வழங்கும் இடத்தில் உங்களை வைத்துக்கொண்டு யாரோடுதான் என்ன விவாதிப்பீர்கள்.முதலில் நீங்கள் உங்களின் இந்த நாட்டாமை மனநிலையை மாற்றுங்கல் அப்போதுதான் யாரும் உங்களோடு விவாதிப்பார்கள்.சிபிஎம் ஒரு புளுகு மூட்டை.கேடுகெட்ட பாராளுமன்றவாதக் கட்சி மார்க்சியத்துக்கு விரோதமான அமைப்பு ... 1968லிருந்து நக்சல் இயக்கத்தோழர்களிடமிருந்து கேட்டுக்கேட்டுப் புளித்துப்போனதையே மறுபடி மறுபடி வாந்தி எடுத்து வைத்துள்ளீர்கள்.. புதுசா ஏதாச்சும் திட்டுங்க தல..
நந்திகிராமில் நிலம் எடுப்பது என்கிற பிரச்னையே இல்லை.அது மம்தா மாவோயிஸ்ட்டுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட 100 சதம் கலப்பில்லாத பொய். ஏகாதிபத்திய மீடியாவுடன் நீங்கள் கொண்ட உறவை வைத்து இல்லாத பிரச்னைக்காக சிபிஎம் தாக்கப்பட்டது.எடுக்காத நிலத்துக்காக பூமி பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி உலக வரலாற்றில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஆளும் வர்க்கங்களுடன் இணைந்து உருவாக்கினீர்கள்.அதில் நாங்கள் தோற்றோம் என்பதுதான் உண்மை.பொய்யர்களின் கூட்டணியிடம் சிபிஎம் தோற்ற வரலாறுதான் நந்திகிராம் வரலாறு.புத்ததேவ் மன்னிப்புக் கேட்ட பத்திரிகைக்குறிப்பை சரியாகப் படித்துப்பாருங்கள்.மார்ச் மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.மக்கள் கருத்தை -ஒப்புதலை-பெறாமல் சிங்கூர் போன்ற இடங்களில் புதிய தொழில்கள் துவங்க முயற்சித்ததற்காக வருத்தம் தெரிவித்தார்.சிபிஎம் எடுக்கும் எல்லா முயற்சிக்களும் பகிரங்கமாக மேற்கு வங்கத்திலும் இந்தியாவெங்கும் விவாதிக்கப்படுகிறது.ரகசியம் என்று ஒரு புடலங்காயும் கிடையாது.வெளிநாட்டு முதலீடுகளை உரிய கட்டுப்பாடுகளுடன் மேற்குவங்கத்தில் அனுமதிப்பது தொடர்பாக பல நூறு கட்டுரைகள் சிபிஎம் வெளியிட்டுள்ளது.cpim.org இல் போய் படியுங்கள்.இதை உங்களுக்காக எழுதவில்லை.நீங்கள் எல்லாம் தெரிந்தும்தான் நாடகம் ஆடுகிறீர்கள்.
நக்சல்பாரிகள் ஆந்திராவிலிருந்து மே.வங்க,ஜார்கண்ட் பகுதிக்குள் பல ஆண்டுகளுக்கு முன் ஊடுருவி உருவான எழுச்சிதான் இன்றைய மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைப்போராட்டங்கள்.இன்றைக்கும் மாவோயிஸ்ட்டுகளை கட்டுப்படுத்த அரசியல்ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும் என்றுதான் சிபிஎம் கூறி வருகிறது.ஜார்கண்ட்டில் போல சால்வா ஜூடும் போன்ற அமைப்புக்களை சிபிஎம் ஏற்படுத்தவில்லை.பழங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பிரச்னைகள் தொடர்பாக மே.வங்க அரசு செய்யத்தவறியவை குறித்து சிபிஎம் வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளது.அந்த இடைவெளியில்தான் மாவோயிஸ்ட்டுகள் பணியாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன..இது எதையும் உங்களுக்காக எழுதவில்லை.உங்களுக்குத்தான் எல்லாமே தெரியுமே.உங்களுக்கு ஆதரவான ஏகாதிபத்திய மீடியா கிளப்பிவிட்டுள்ள சிபிஎம் எதிர்ப்புக் கருத்துக்களை மட்டுமே வாசிக்கும் ஒரு வாசகருக்காக குறிப்பிடுகிறேன்.
[நீளம் கருதி, பின்னூட்டப் பகுதி ஏற்கவில்லை அதனால் அடுத்த பகுதியாக இதன் பின்னூட்டம் தொடர்கிறது. - சுரேஷ்]
பாராளுமன்ற அரசியலில் பங்கேற்பதா கூடாதா என்பதுதான் மர்கிசிஸ்ட்டுகள் விவாதிக்க வேண்டியது.இன்றைய இந்தியச் சூழலுக்கெற்ற மார்க்சியத்தை சிபிஎம் மட்டுமே இந்தியாவில் முன் வைக்கிறது.ஒரு கட்சித்திட்டத்தை முன்வைத்து ச் செயல்படும் ஒரே கம்யூனிஸ்ட் கட்சி அது மட்டுமே.ஆகவேதான் அதை ஒழிக்க இடது தீவிரவாதமும் வலது அடிப்படைவாதமும் இந்திய ஆளும்வர்க்கமும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கிறீர்கள்.இந்த உன்மைகளையெல்லாம் செங்கொடியைக்கொண்டே மூடி மறைக்கப் பார்க்கிறீர்கள்.
நக்சல்பாரி இயக்கம் அது தோன்றிய நக்சல்பாரி வட்டாரத்திலேயே வளரவில்லை.சில அதிமேதாவி அறிவுஜீவிகள்,மத்தியதர வர்க்கத்தினரில் ஒரு சிறு பகுதி ,மாணவர்களில் மிகச்சிறூ பகுதி ..இன்னும் கொஞ்ச நாளைக்கு மலைவாழ் மக்களிடம் என்று ..சுருங்கிக் கிடக்கிறது.ஏன் சரியான கம்யூ கொள்கை கொண்டிருப்பதாகக் கூறும் நீங்கள் வளரவில்லை?
அதெல்லாம் போகட்டும் தோழரே... தனிப்பட்ட முறையில் மக இக மீது எனக்கு சில மரியாதைகள் இருந்தது.தஞ்சையில் ஆண்டுதோறும் நீங்கள் நடத்திய மக்கள் இசைவிழா..ஒரு உருப்படியான காரியம்..கோக் எதிர்ப்பு இயக்கம் நீங்கள் நடத்திய பாராட்டத்தக்க போராட்டம்.அதையெல்லாம் ஏன் இப்போது கைவிட்டு விட்டீர்கள்.எப்படி இருந்த நீங்க இப்ப இப்படி ஆயிட்டீங்களே தோழா..அதைப்பற்றி முதல்ல கவலைப்படுங்க..நாங்க என்னான்னும் நாசமாப்போறோம்.நாங்க சரியில்லைன்னுதானே 68இலே பிரிஞ்சு நக்சல் இயக்கத்துக்குப் போனீங்க.. உங்க இயக்கத்தை வளர்க்கிறதுக்கு வழியைப் பாருங்க தலைவா..
நான் தொடர்ந்து உங்களோடு விவாதிக்க நேரம் ஒதுக்க முடியாது.அது தேவையற்ற வேலையும் கூட.நான் ரொம்பச் சின்ன ஆள்.நீங்கள் எல்லோருமே பெரிய மார்க்சிய மேதைகளாக இருப்பதால் நான் விவாதித்து நீங்கள் தெரிந்து கொள்ள உலகத்தில் ஒன்றுமே இல்லை.எல்லாமே அறிந்தவர்கள் நீங்கள்தான்.உங்கள் பாதை உங்களுக்கு எங்கள் பாதை எங்களுக்கு.காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்.நன்றி.வணக்கம்.
தமிழ்ச்செல்வன்
மேற்கண்ட கட்டுரைக்கு அண்ணன் தமிழ்ச்செல்வன் மின்னஞ்சல் மூலமாக எனக்களித்த பதிலை இங்கு பதிகிறேன்.
---------------------------------------------
பொறுப்புள்ள தோழர் சுரேஷ்
நந்திகிராமில் நிலம் கையகப்படுத்தல் இல்லை என்று புத்ததேவ் அறிவித்த பிறகுதான் பூமி பாதுகாப்பு இயக்கத்தை மம்தா,அத்வானி கூட்டணியுடன் மாவோயிஸ்ட்டுகள் தீவிரப்படுத்தினார்கள் என்பதை நேரடியாக நேர்மையாக நீங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் உங்கள் எழுத்தில் அது மறைமுகமாக வெளிப்படுத்தியதற்கு நன்றி.எங்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தோடுதான் நீங்கள் ‘நேர்மை’யாக விவாதத்துக்கு அழைப்பதாகக் கூறிவிட்டீர்கள்.நோக்கம் ஏற்கனவே முடிவாகிவிட்டது.அதற்கு நாங்க வந்து பாயிண்ட் எடுத்து எடுத்து கொடுக்கணுமாக்கும்.நீங்கள் எழுப்பியுள்ள எல்லாக் கேள்விகளுக்கும் cpim.org யில் பழைய கட்டுரைகளில் பதில் இருக்கிறது.அவசியமானவர்கள் படித்துக்கொள்வார்கள்.எம்மை அவதூறு செய்ய நாங்களே உதவ வேண்டும் என்று பாதந்தொட்டு நீங்கள் கேட்டுக்கொண்டதால் எம் தோழர்களில் யாராவது சும்மா வெட்டியாக இருந்தால் பார்த்து அனுப்புகிறேன்.
சும்மா இருக்கும்போது மீண்டும் உங்கள் ‘விவாதங்களை’ வாசிக்கிறேன்.
நன்றி.வணக்கம்.
தசெ
Post a Comment