2006-ம் ஆண்டு இறுதியிலும் 2007-ம் ஆண்டு மத்திய காலம் வரையிலும் மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் பகுதியில் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடிய மண்ணின் மைந்தர்களான விவசாய உழைக்கும் மக்கள் மீது கொலைவெறியாட்டம் போட்டது அம்மாநிலத்தை ஆளுகின்ற ‘மார்க்சிஸ்ட்’ கட்சி.
அந்த ஏழை, எளிய விவசாய மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகமெங்கும் ம.க.இ.க. மற்றும் தன் தோழமை அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் பிரச்சார இயக்கம் மேற்கொண்டன. அப்போது வெளியிடப்பட்ட சிறு வெளியீடுதான் “நந்திகிராம்: சி.பி.எம். கட்சியின் கொலைவெறி!” அவ்வெளியீட்டிலிருந்து தொடர் பதிவுகளாக இங்கு பதிவிடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பின்வரும் கட்டுரை பதிவிடப்பட்டுள்ளது.
==================================================================
நந்திகிராம்: ஆளும் வர்க்க நிழலில் அவதூறுப் பிரச்சாரம்!
”மக்களின் ஒப்புதலோடு மட்டும்தான் நந்திகிராமத்தை எடுத்துக் கொள்வோம்: என்று பலமுறை தான் கூறியிருப்பதாகச் சொல்கிறார் புத்ததேவ். “முஸ்லீம்களின் ஒப்புதலோடு இராமன் கோயில் கட்டுவோம்” என்று பாரதிய ஜனதா கூறுவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது நந்திகிராம் மக்களுக்குப் புரிந்திருக்கிறது. எனவே தான் எதிரிகளை உள்ளே நுழைய விடாமல் சாலைகளையும் பாலங்களையும் துண்டித்தார்கள். “நந்திகிராமத்தை நசுக்காவிட்டால் மாநிலத்தில் வேறு எங்குமே சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க முடியாமல் போய்விடும்” என்பது புத்ததேவின் கவலை. “நாடே நந்திகிராம் ஆகிவிடும்” என்பது ஆளும் வர்க்கத்தின் அச்சம். நந்திகிராம் மீதான யுத்தத்திர்குக் காரணம் இதுதான்.
எனவேதான் மறுகாலனியக்கக் கொள்கையைக் கறாராக அமல்படுத்தும் புத்ததேவை உறுதியாக ஆதரித்து நிற்கிறது இந்திய ஆளும் வர்க்கம். ப.சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் துக்ளக் ‘சோ’வும் மார்க்சிஸ்டு கட்சியைப் பாராட்டுகிறார்கள். கண் துடைப்புக்காக கண்டனம் தெரிவித்த அத்வானியும் ஜெயலலிதாவும் அத்தோடு முடித்துக் கொண்டுவிட்டார்கள்.
ஆளும் வர்க்கத்தின் பேராதரவு தனக்கு இருப்பதைப் புரிந்து கொண்டுதான் நக்சல்பாரிகளைக் குறிவைத்து அவதூறு செய்கிறார்கள் இந்தப் போலிகள். மம்தாவுடன் கூட்டு சேர்ந்துகொண்டு போராட்டத்தைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். 2 நாற்காலிக்காக புரட்சித்தலைவியிடமும் தானைத்தலைவரிடமும் எந்தக் கழிசடையிடமும் கூச்சமே இல்லாமல் பல்லிளிக்கும் இந்தப் போலிகளுக்கு இதைச் சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
“தங்கள் கட்சி நந்திகிராமத்தில் இல்லை” என்பதை என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் மாவோயிஸ்டுகள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். நந்திகிராம பகுதியில் மம்தா கட்சி மற்றும் மா.லெ.இயக்கங்களின் சக்தி மிகக் குறைவுதான் என்பதும், இது எந்தவொரு கட்சியும் தனியுரிமை பாராட்ட முடியாத மக்கள் இயக்கம் என்பதுமே உண்மை. 35 ஆண்டுகளாக வெற்றி பெற்றுவந்த தொகுதியை இவர்கள் கூறுவது போல, மூன்றே மாதத்தில் நக்சல்பாரிகள் கைப்பற்றிக் கொண்டுவிட்டார்கள் என்பது உண்மையாயிருந்தால் மார்க்சிஸ்டுகள் முக்காடு போட்டுக் கொண்டல்லவா ஓட வேண்டும்?
“மார்க்சிஸ்டு தொண்டர்களை நந்திகிராமத்திலிருந்து துரத்திவிட்டார்கள்” என்று பிலாக்கணம் வைக்கிறார் பிரகாஷ்காரத். புத்ததேவின் அரசு 100 கிராமத்து மக்களையும் வெளியே துரத்துவதைத் தடுக்க வேண்டுமானால் ஐந்தாம் படைகளைத் துரத்தித்தான் ஆகவேண்டும். கருங்காலிகளையும் கைக்கூலிகளையும் அன்ரைய கீழத்தஞ்சை விவசாய இயக்கம் எப்படிக் கையாண்டது என்பதை அவர்கள் நினைவுபடுத்திப் பார்க்கட்டும்.
“பாலங்கள் உடைக்கப்பட்டுவிட்டன. பி.டி.ஓ. ஆபீஸ் இயங்க முடியவில்லை. இரண்டரை மாதமாக சட்டத்தின் ஆட்சியை நடத்த முடியவில்லை” என்று குமுறுகிறார் புத்ததேவ். இந்த அரசின் தலையீடு இல்லாமல் மக்களால் வாழ முடிந்ததிலிருந்து இந்த அரசு தேவையற்றது என்பதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. புத்ததேவ் நிறுவ விரும்பும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பி.டி.ஓ. ஆபீசும், தொழிலாளர் நலத்துறையும், கோர்ட்டும் உண்டா? பன்னாட்டு நிறுவனங்கள் சுயாட்சி நடத்துவதற்கு நந்திகிராமத்தை தாரைவார்க்கலாமாம். மண்ணின் மைந்தர்கள் அந்த உரிமையை நிலைநாட்டிக் கொண்டால் துப்பாக்கிச் சூடாம்! இதுதான் மார்க்சிஸ்டுகளின் மக்கள் ஜனநாயகப் புரட்சி!!
(இன்னும் தொடரும்...
====================================================
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
தொடர்புடைய பிற பதிவுகள்:
No comments:
Post a Comment