Monday, September 6, 2010

நந்திகிராம்: பாட்டாளியின் பகையாளி! டாடாவின் கூட்டாளி! (மீள்பதிவு)

மேற்கு வங்கத்தில் சிங்கூரைத் தொடர்ந்து நந்திகிராமத்தில், அம்மாநிலத்தை ஆளுகின்ற மார்க்சிஸ்டு அரசு ஏழை, எளிய, விவசாய உழைக்கும் மக்களை வேட்டையாடி, அவர்களது விளைநிலங்களை பன்னாட்டு பகாசூர கம்பெனிகளுக்குத் தாரைவார்க்க முயற்சி செய்தது. அதனை எதிர்த்த அம்மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாக அந்த அரசு சற்று பின்வாங்கியிருக்கிறது. இருப்பினும் தனது மறுகாலனியாக்க ஆதரவுக் கொள்கைகளை அம்மாநிலத்தில் திணிப்பதில் அந்த அரசு சற்றும் பின்வாங்கவில்லை. மேலும் நந்திகிராம் போராட்டத்தைப் பற்றி அவதூறான தகவல்களை ‘மார்க்சிஸ்டு கட்சி’யினர் இப்பொழுதும்கூட இணையத்தினூடாகவும் ‘தீக்கதிர்’ என்ற தமது கட்சியின் பத்திரிக்கையினூடாகவும் பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்.  எனவே, நந்திகிராம பிரச்சினைகளை புதிய வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்வதற்காகவும், மாற்றுக்கருத்துள்ளவர்கள் எம்முடன் விவாதித்து தெளிவு பெறுவதற்காகவும், தொடர்பதிவுகளாக இங்கு இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

’நந்திகிராம்: சி.பி.எம். கட்சியின் கொலைவெறி!’ என்ற இந்த வெளியீட்டிலிருந்து இக்கட்டுரைகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன. வாசகர்கள் சிரமமின்றி படிப்பதற்காக பல பாகங்களாக இங்கு பதிவிடப்பட்டுள்ளது. முந்தைய பாகங்களின் சுட்டிகள் வரிசையாக இதோ வாசகர்களின் பார்வைக்கு...





====================================================



மூன்று ஆறுகளால் சூழப்பட்டு ஐநூறு கெஜத்துக்கு ஒரு குளம், ஆங்காங்கே வெற்றிலைக் கொடிக்கால் என்று மரகதப் பச்சையாக விரிந்து கிடக்கும் சிங்கூர் கிராமத்தை டாடாவுக்குத் தாரை வார்க்க முடிவு செய்தது புத்ததேவ் அரசு. உடனே மூன்றுப் போகம் பயிரிடும் அந்த மண்ணை ‘ஒரு போகம் விளையும் நிலம்’ என்று கூசாமல் புளுகினார்கள்.

பிரிட்டிஷ் காலச் சட்டத்தின் கீழ் நிலத்தைக் கட்டாயமாகப் பறித்துக்கொண்டார்கள். பிறகு “தானாக முன்வந்து நிலத்தை விற்பதாக எழுதிக் கொடுத்தால் 10% அதிகப் பணம் தருகிறோம்” என்று ஆசை காட்டி விவசாயிகளை ஏமாற்றி ‘ஒப்புதல் கடிதம்’ எழுதி வாங்கினார்கள். “விவசாயிகள் மனமுவந்து நிலத்தைத் தந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஆதாரம்” என்று நமக்கெல்லாம் அந்தக் கடிதத்தைக் காட்டி நம்பவைத்தார்கள். இன்று இந்த இரகசியம் அம்பலமாகி மேற்கு வங்க அரசுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் கொடுத்திருக்கிறது கல்கத்தா உயர்நீதிமன்றம்.

மக்கள் வரிப்பணம் 140 கோடியைக் கொடுத்து 997 ஏக்கர் நிலத்தை வாங்கிவிட்டு, அதை வெறும் 20 கோடிக்கு (அதையும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கொடுத்தால் போதும் என்று) டாடாவுக்கு தானம் செய்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை ஆயிரம் கோடிக்கு டாடாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்தாலும் டாடாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட மறுக்கிறார்கள். தடியடி முதல் துப்பாக்கிச் சூடு வரை எல்லா அடக்குமுறைகளையும் அரங்கேற்றி அந்த ஊரையே டாடாவுக்கு வழங்கிவிட்டு ஆயுத போலீசையும் காவல் வைத்திருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

இன்னும் தொடரும்...
====================================================

தொடர்புடைய பிற பதிவுகள் (தவறாமல் படிக்கவும்)





No comments:

Post a Comment