Tuesday, September 7, 2010

மன்மோகனுக்கு ஒரு ‘ஓ’ போடுவோம்!

இந்திய மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்படக்கூடாது. எத்தகைய வறுமை நிலையில் அவர்கள் இருக்கவைக்கப்பட்டிருந்தாலும் பசியில் அவர்கள் வாடக்கூடாது. “தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால்...” என்ற பாரதியின் ‘வழியில்’ வந்த ‘பாரதப்’ பிரதமர், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நமது ஏழை, எளிய மக்களுக்காக ‘தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட’த்தை வடிவமைத்துத் தந்திருக்கிறார்!

முதலில் அவருக்கு ஒரு ‘ஓ’ போடுவோம்!

உணவுப் பாதுகாப்பு என்றால், அரசு கொள்முதல் செய்து ‘பாதுகாத்து’ வரும் கிடங்குகளில் மக்கி வீனாகி குப்பையில் வீசியெறியப்படும் உணவு தாணியங்களைப் பாதுகாப்பது என்று பொருள் அல்ல. அந்த உணவு தானியங்களை மக்கள் பயன்படுத்துவதிலிருந்து பாதுகாப்பது. அதாவது மக்களாகிய நாம், அந்த தானியங்களை உணவாக உட்கொண்டு, மலமாக வெளித்தள்ளி வீனடிக்கிறோமல்லவா. இதனைத் தடுத்து அந்த உணவு தானியங்களைக் கொண்டு சாராயம் தயாரித்தால் நாட்டின் ’வளர்ச்சி’க்கு அது பெரிதும் பயனுள்ளதாக இருக்குமல்லவா? அதன்பொருட்டு தயாரிக்கப்பட்ட சட்டம்தான் இந்த ‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்’ ஆகும்.

இதுமட்டுமல்ல, உணவுக் கிடங்குகளில் அழுகிப் புழுத்து, நாற்றமெடுத்து குப்பையில் வீசியெறியப்படும் உணவுகளைக் கூட மக்கள் பயன்பாட்டிலிருந்து ‘பாதுகாத்து’ புழு, பூச்சிகளின் பசியைப் போக்கிய பெருமைக்குரியவர் நம்ம மன்மோகன்சிங். இதற்காக உச்சநீதி மன்றத்தையே தனியொரு மனிதனாக எதிர்த்து நின்ற காட்சி நேற்றிலிருந்து அனைத்து ஊடகங்களிலும் காட்டப்படுகின்றன. 

“நரகலில் கூட நல்லரசி தேடுவோர்” என்று கிராமப்புறங்களில் இழிவாகச்  சொல்வார்கள். ஆனால் நம்ம மன்மோகன் சிங் அதில்கூட இலாப நட்டம் பார்க்கும் ஆகச்சிறந்த பொருளாதார மேதை என்பதை இந்த சட்டத்திலிருந்து நாம் புரிந்துகொண்டு அவருக்கு மீண்டுமொருமுறை ‘ஓ’ போடவேண்டும்!

காங்கிரஸ் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளரான அன்னை சோனியாவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி-யின் கூட்டத்தில் இந்த உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டதாம். ஆக, இந்த ‘பெருமைக்குரிய’ சட்டத்திற்கும் மன்மோகனுக்கும் கூஜா தூக்கிய பெருமையை அனைத்து கூட்டணி கட்சிகளும் பெறுகின்றன. அதில் கருணை உள்ளம் படைத்த நம்ம கருணாநிதிக்கும் பெரும்பங்கு உண்டு. அதற்கும் கூட ஒரு ‘ஓ’ போட்டு தொலைத்துவிடலாம்!

இதுமட்டுமா நம்ம நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற எத்தனையோ மிகமுக்கியமான சட்டங்களெல்லாம் வெறும் குப்பைக் காகிதமாக தூங்கிக்கொண்டிருக்கும் போது உயிரோடு உலவுகின்ற சட்டங்களையும் திட்டங்களையும் ஒருகனம் பகுத்துப்பார்த்தால், இந்த தயாள குணம்படைத்த ஆட்சியாளர்களின் நோக்கம் எளிதாகப் புரியும்.

‘தேசிய வேலை உறுதித் திட்டம்’ இந்தத் திட்டம் பற்றி விடியவிடிய பேசலாம். இலட்சக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளிவிட்ட இந்த (முந்தைய, தற்போதைய) அரசுகள், மிச்சமிருக்கின்ற விவசாயக் கூலிகளுக்கு வாய்க்கரிசி போடுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் இது. இந்த திட்டத்தின் மூலமாக அத்துக்கூலிக்கு ஆள்வைத்து எப்படியெல்லாம் சுரண்டலாம் என்று தனியார் முதலாளிகளே கற்றுக்கொள்ளும் பொருட்டு, ஏராளமான வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு கிராமங்களிலிலும் வழங்கப்படுகின்றன. வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் எப்படி ஏமாற்றலாம் என்பதையும், கொடுக்கின்ற சொற்ப கூலியில் கூட எப்படி அமுக்கல் வேலை செய்து அம்மக்களின் வயிற்றிலடிக்கலாம் என்பதையும் வெளிப்படையாகக் கற்றுக்கொடுக்க பி.டி.ஓ. , மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.

வேலை செய்த கூலியைத் தர மறுத்த அதிகாரிகளைக் கண்டித்து போராடுகின்ற மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்குவதற்காக கைநிறைய சம்பளத்துடன் போலீஸ்காரர்கள் மட்டும் இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் வேலைக்கு எடுத்து வைத்துக்கொள்ளப்படுகிறது. இவையெல்லாம் அந்த 100-நாள் வேலையின் சாதனைகளில் சில.

இதுமட்டுமா, கிராமப்புற ஏழை மக்களின் கையில் இத்திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் சொற்ப கூலியைக் குறிவைத்து கழுகுப் பார்வையுடன் காத்திருக்கிறது கிராமப்புற சந்தையும் ‘டாஸ்மாக்’ கடைகளும். இத்திட்டத்தின் பலனை, கிராமப்புற சந்தையின் ‘சீரான’ நிலையை புள்ளி விபரங்களுடன் அடுக்கிக்கொண்டிருக்கிறது எக்கனாமிக் டைம்ஸ் என்ற ஆங்கில நாளேடு. இதுபோன்ற திட்டங்கள் நம்ம அரசியல்வாதிகளின் (குறிப்பாக இடதுசாரிகளின்) சிந்தையில் உதிப்பதற்கு காரணமாக அமைந்தது எது என்பதை இந்த புள்ளிவிபரங்களைக் கொண்டே நாம் புரிந்துகொள்ள முடியும். அதேபோல டாஸ்மாக் கடைகளின் இலாபத்தை ரூபாய் 15,000 கோடிகள் என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது தமிழக அரசு.

இத்திட்டத்தை வகுத்த பெருமைக்குரியவர்களும் இதே ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள்தான். இதில் ஒரு கூடுதல் ‘பெருமை’யும் இருக்கிறது. இது ‘இடதுசாரி’க் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட திட்டம் என்பதுதான் அது. இத்திட்டம் கொண்டு வரும்போது, அதாவது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பங்கெடுத்த ‘பெருமை’ அவர்களையே சாரும்! நேற்றைய தினம் (05.09.2010) திருச்சியில் நடைபெற்ற ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீத்தாராம் யெச்சூரி இத்திட்டத்தைத் தமது கட்சி கொண்டுவந்தது பற்றி பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். அவருக்கும் அவரது கட்சிக்கும் கூட ஒரு ‘ஓ’ போட்டுவிடலாம்!

இதுபோன்ற ‘மக்கள் நலத் திட்டங்கள்’ எண்ணிலடங்காமல் நாள்தோறும் நம்ம நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ‘மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா’, ‘அணுவிபத்து கடப்பாடு மசோதா’, ‘அனைவருக்கும் ஆரம்பக் கல்வி திட்டம்’ இவைகள் எல்லாம் அத்தகைய சட்டங்களுக்கான வகைமாதிரிகள்.

இங்கே தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை சட்டப்படி அங்கீகரிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட கல்விக்கட்டண வரம்புகள், சமச்சீர் கல்வி போன்ற பெயரளவுக்கான திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களுக்கு பயனளிக்கின்றன என்பதை தினசரி செய்திகளைக் கொண்டே நாம் தெரிந்துகொள்ளலாம்.

இப்போது மீண்டும் உணவுப் பாதுகாப்பிற்கும் வறுமைக்கும் வருவோம். 1963-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் கொடிய பஞ்சம் நிலவியதாம். அப்போதைய மகாராஷ்டிர அரசு ஒரேயொரு சட்டத்தின் மூலமாக அத்தகைய பஞ்சம், பட்டினி போன்றவற்றை ஒழித்துவிட்டதாம். இதிலிருந்து நமது இன்றைய மத்திய அரசு அன்றைய மகாராஷ்டிர அரசைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுத்தாளர் சாய்நாத் திரைகிழிக்கிறார்.

1963 பஞ்சத்தையொட்டி மகாராஷ்டிர அரசு கொண்டுவந்த அந்த சட்டம் என்ன தெரியுமா? அரசுக் கோப்புகளிலிருந்து அல்லது அவைக் குறிப்புகளில் இருந்து பஞ்சம், பட்டினி, பசி போன்ற சொற்களை அறவே நீக்குவது என்பதும் அந்த வார்த்தைகளுக்குப் பதிலாக ‘வறட்சி’ என்ற சொற்பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் தான் அச்சட்டத்தின் நோக்கம். இப்படியாக அங்கு பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

அதேபோல நம்ம மத்திய அரசு விவசாயிகள் தற்கொலை குறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, யார் விவசாயிகள்? எது தற்கொலை? என்பதை மட்டும் மறுவரையறை செய்து மாற்றி அறிவித்துவிட்டால்! விவசாயிகள் தற்கொலை என்ற அவப்பெயரிலிருந்து அரசைக் காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லவா?!

எப்படியிருக்கிறது பாருங்கள். இதனைக் குறிப்பிட்ட சாய்நாத் அவர்களும் நாமும் விளையாட்டாகவோ நகைச்சுவையாகவோ இதனைச் சொல்லவில்லை. வயிறெறிந்து இதனை எழுதுகிறோம், பேசுகிறோம். நாடு மறுகாலனியாகிவிட்டதையும் இங்கு நிலவுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அதுவே அடிப்படை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ’காட் ஒப்பந்தம்’ என்னும் அடிமைச் சாசனம் நிறைவேற்றப்பட்டது முதல் இப்போதைய அனுவிபத்து கடப்பாடு மசோதா வரை அனைத்து ஒப்பந்தங்களிலும் பன்னாட்டு முதலாளிகளுக்கு நமது ஆட்சியாளர்கள் விலைபோனது பச்சையாகத் தெரிகிறது. குறிப்பாக இவையனைத்தையும் மன்மோகன் சிங்கின் கரங்கள்தான் உருவாக்கியது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இந்திய நாடாளுமன்றம் என்பது பன்னாட்டு முதலாளிகளின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரலசைவுக்குத் தகுந்தவாறு நடத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள இன்னும் வேறு ஏதேனும் ஆதாரங்கள் தேவையா?

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் உருவாக்கப்படும் குட்டி சமஸ்தானங்களோடு நமது அரசு போட்டுக்கொண்டிருக்கின்ற ஒப்பந்தங்கள் இரகசியமாகவே இன்னும்  இருக்கிறது. நாள்தோறும் சுமார் ஆயிரம் கோடிகளை வரிச்சலுகையாக தரகுப் பெருமுதலாளிகளுக்கு அள்ளிக்கொடுத்து வரும் இந்த அரசு, பெரும்பான்மை உழைக்கும் மக்களை பசியிலும் பட்டினியிலும் தள்ளி விடுகிறது.

 இத்தகைய அனைத்து விதமான மோசடிகளிலும் ஒரு சர்வகட்சி கூட்டணி இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் எதிர்ப்பதாக நாடகமாடிக்கொண்டு மக்கள் விரோதக் கொள்கைகள் நிறைவேற்றப்படுவதில் அனைவரும் கூட்டாகப் பங்கெடுக்கிறார்கள். தேர்தல் முறையிலும் (இடது, வலது கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட) நாடாளுமன்ற ஓட்டுக்கட்சிகளின் தலைமையிலும் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியாது.

இந்திய நாட்டை ‘பட்டா’, ‘சிட்டா-அடங்கல்’ இல்லாமல் சுருட்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆனால், பாட்டாளி வர்க்கக் கட்சியாக சொல்லிக்கொள்ளும் இடதுகளும் வலதுகளும் மாநில அரசுகளிடம் வீட்டுமனை பட்டா கேட்டு ‘மாபெரும் இயக்கம்’ நடத்துகிறார்களாம். இவர்கள் கம்யூனிசத்தின் வழிவந்தவர்களா அல்லது நீரோவின் வழிவந்தவர்களா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வறுமையும் பசியும் பட்டினியும் ஒழியவேண்டுமென்றால் மன்மோகன்கள் ஒழியவேண்டும். மன்மோகன்கள் ஒழியவேண்டுமென்றால் அவரது திட்டங்களை மோகிக்கும் ஓட்டுப் பொறுக்கிகள் ஒழிக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இப்போதிருக்கும் இந்த நாடாளுமன்றக் கட்டமைப்பே குறுக்கு நெடுக்காக பிளந்து எறியப்பட வேண்டும். அதற்கு ஒரு புரட்சி வேண்டும். புரட்சிகர போராட்டங்கள் வளரவேண்டுமென்றால் இடது, வலது கைக்கூலி கம்யூனிஸ்டுகள் மக்கள் மத்தியிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும். துடைத்தெறிவோம்! நன்றி!

தோழமையுடன்,
சுரேஷ்.

=====================================================

தொடர்புடைய கட்டுரைகள் (அவசியம் படிக்கவேண்டுகிறோம்...)






====================================================

அன்பார்ந்த நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இக்கட்டுரையின் மீது தங்களுக்கு இருக்கும் மாற்றுக்கருத்துக்களை தவறாமல் பதிந்து விவாதிக்க வேண்டுகிறோம்.

அதேபோல தங்களுக்கு ஆதரவுக்கருத்து இருந்தால் கீழே உள்ள திரட்டிகளின் கருவிப்பட்டையை அழுத்தி வாக்களிக்கவும். உங்களுக்கு ஆதரவுடைய இக்கருத்து வேறு பலரைச் சென்று சேர்வதற்கு அது உதவும். நன்றி!




6 comments:

விவாதகளம்... said...

மார்க்சிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்கிற அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு, மேற்கண்ட பதிவு தொடர்பாக, ஒரு குட்டி செய்தியை அனுப்பியிருந்தார். அச்செய்தியையும் அதற்கான எனது பதிலையும் அந்த மின்னஞ்சலிலேயே ரிப்ளை செய்து தெரிவித்து விட்டேன். இருப்பினும் அதனை பிற தோழர்களின் பார்வைக்காக இங்கு பதிவிடுகிறேன்.
=====================================================

//////////On 9/8/10, tamil selvan wrote:
சிபிஎம் மட்டும் ஒழிந்தால் போதும்.எல்லாம் சரியாகிவிடும் .அதை மட்டும்
சொன்னால் போதாதா..எதற்கு தேவையில்லாமல் மன்மோகன் பற்றியெல்லாம் எழுதிக்
குழப்ப வேண்டும்.///////////

தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களே,

சி.பி.எம். வேறு மன்மோகன் வேறு என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியின்
கொடியையும் பெயரையும் தவிர வேறெந்த வித்தியாசமும் உங்களுக்கிடையில்
இல்லை. மறுகாலனியக்கத்தின் தந்தை மன்மோகன் என்றால் நீங்கள் அக்கொள்கையின்
கள்ளத் தந்தையாக இருக்கிறீர்கள்.

டாடாவும், சலீமும், யூனியன் கார்பைடின் டௌ கெமிக்கல்சும், லால்கார் புகழ்
ஜிண்டாலும் உங்களுக்கு எசமானர்கள் என்றால் மன்மோகனுக்கு அவர்கள் என்ன
எதிரிகளா? மன்மோகனுக்கும் அவர்கள் எசமானர்கள்தானே?

எனவே, நாடு அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு மீள வேண்டுமென்றால்
மன்மோகனோடு சேர்த்து உங்கள் கட்சியின் தலைவர்களையும் ஏனைய
ஓட்டுப்பொறுக்கிகளையும் சேர்த்தே அம்பலப்படுத்தி வீழ்த்த
வேண்டியிருக்கிறது.

மன்மோகனை விமர்சித்தால் உங்களுக்கு கோபம் முட்டிக்கொண்டு வருவது
ஆச்சர்யமானது அல்ல, வழக்கமானதுதான்.

விவாதகளம்... said...

தமிழ்ச்செல்வனின் அடுத்த பதிலும், அதற்கான எனது பதிலும் மின்னஞ்சலினூடாக அனுப்பப்பட்டது. அதனை இங்கு தோழர்கள் பார்வைக்காக பதிகிறேன்.

===========================================


///////On 9/12/10, tamil selvan wrote:
அதில்லை தோழரே..நம்ம பிறப்பும் லட்சியமும் சிபிஎம்மை
ஒழிப்பதுமட்டும்தானே..எதற்கு தேவையில்லாமல் மன்மோகன் விஷயத்தையெல்லாம்
எழுதி நம்ம சக்தியை வீணாக்க வேண்டும் என்பதுதான் என்
கவலை..அவ்வளவுதான்..உங்கள் புரட்சிப்பணி தொடர வாழ்த்துகிறேன்..///////


தோழர் ச.தமிழ்ச்செலவன் அவர்களுக்கு,


நான் மேலே சொன்ன பதில் உங்களுக்குப் புரிந்ததா, இல்லையா?


தேய்ந்துபோன ரெக்கார்டு கணக்காக சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே, இதுக்கு என்ன பதில் சொல்வது என்று
தெரியாமல் தவிக்கிறீர்களா?


பன்னாட்டு முதலாளிகளிடமும் டாடாவிடமும் பெற்ற கூலிக்காக மாவோயிஸ்டுகளை
ஒழித்துக்கட்ட துப்பாக்கியுடன் கிளம்பியிருக்கும் உங்களுக்கு மேற்கண்ட
கருத்தைச் சொல்ல என்ன அருகதையிருக்கிறது?


தேர்தலுக்குத் தேர்தல் சிறிதும் கூச்சமின்றி எத்தகைய இழிவான கட்சியுடனும்
கூட்டு சேர்ந்து நாற்காலி பிடிக்க நாயாய் அலையும் உமக்கு இக்கருத்தை
சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?


சி.பி.எம். கட்சியை துரோகிக் கூட்டம் என்று அம்பலப்படுத்தி ஒழித்துக்கட்ட
வேண்டியது அவசியம் என்பதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உங்கள்
மொழியில் சொன்னால் வாழ்க்கை, இலட்சியம் எல்லாமே அதுதான். எதிரியை விட
துரோகி எவ்வளவு பயங்கரமானவன் என்பதை நந்திகிராமத்து மக்களைக் கேளுங்கள்
சொல்வார்கள். துப்பாக்கி முனையில் நீங்கள் நடத்திவரும் ‘மார்க்சிய’
ஆட்சியை மேற்குவங்கத்து உழைக்கும் மக்களைக் கேட்டால் புள்ளிவிபரங்களுடன்
எடுத்துவைப்பார்கள். ம.க.இ.க. இருந்தாலும் இல்லாவிட்டாலும் சி.பி.எம்.
ஒழிந்தேயாக வேண்டும் என்பது காலத்தின் நியதி..


முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் வீழ்ந்து சோசலிசம் மலரும் என்பது
காலத்தின் கட்டாயம் என்றால் முதலாளித்துவப் பாதந்தாங்கிக் கூட்டமான
சி.பி.எம். மட்டும் என்னவாகும்? போலிக் கம்யூனிசத்தை ஒழிப்பது உண்மையான
கம்யூனிஸ்டுகளுக்கு வரலாறு வழங்கியிருக்கும் அதிமுக்கியக் கடமையாகும்.


இத்தனை விவாதங்கள் நடைபெறுகிறது. எத்தனையெத்தனையோ கருத்துக்கள்
முன்வைக்கப்படுகின்றன, தர்க்க ரீதியாக அவற்றை எதிர்கொள்ளத் திராணியற்ற
உமக்கு மாநிலச் செயலாளர், பெரிய இலக்கியவாதி என்கிற ஒளிவட்டங்களெல்லாம்
தேவையா?

vimalavidya said...

காழ்புணர்ச்சிகள் ஏதுமின்றி திறந்த மனத்துடன் வாதங்களைப் பதிவு செய்து, ஆரோக்கியமான முறையில் விவாதங்களைக் கொண்டு செல்வது ஒன்றே இந்த வலைதளத்தின் நோக்கம் ஆகும்-Suresh said...But you have used these following words Suresh>>>
/கள்ளத் தந்தையாக/ஓட்டுப்பொறுக்கிகளையும் /தேய்ந்துபோன ரெக்கார்டு/கூலிக்காக/அருகதையிருக்கிறது?/நாயாய் அலையும்/என்ன யோக்கியதை/ஒழித்துக்கட்ட/ஒழிந்தேயாக/பாதந்தாங்கிக் கூட்டமான/ஒழிப்பது/திராணியற்ற/ஒளிவட்டங்களெல்லாம்>>>I don't find any, so called ,decent discussion in your replies.How it is correct ?your arguments need only opinions or views...VASAVU could be avoided...Pl.consider.

விவாதகளம்... said...

புரட்சிகரமான தோழர் சுரேஷ் அவர்களுக்கு..
நமக்குள் விவாதிக்க இப்ப என்னா இருக்கு..உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் மக இக இருந்தாலும் இல்லாமல் போனாலும் சரி.சிபிஎம் ஒழியணும். இதற்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களோடு என்னதான் விவாதிக்க முடியும் தலைவா..புரட்சியாளர் மம்தா தலைமையில் காங்+ அத்வானி கூட்டணியில் அங்கே நீங்கள் நடத்தும் அரசியல்தான் புனிதமானது தலைவா..நாங்க சும்மா பன்றித்தொழுவத்தில் உழல்கிறவர்கள்.உங்கள் புரட்சிப்பாதைக்கு இடைஞ்சலாக இருந்தால் பேசாம சுட்டுத்தள்ளுங்க..அதைத்தான் நான் சொன்னேன்.. விவாதம் விவாதம்னு சொல்லி டிசைன் டிசனாக அவதூறு செய்யுங்க..அது உங்களுக்கு சூப்பரா வரும்..

லஞ்சபேரழகன் said...

தான் முன்வைக்கக் கூடிய கருத்து விமர்சனத்திற்கும் விவாதங்களுக்கும்
அப்பாற்பட்டது. எனது கருத்தை விஞ்சக்கூடிய கருத்து இல்லை. .இதைவிடப்
புனிதம் வேறில்லை என்று கண்ணை மூடிக்கொண்டு கிறித்தவ பாதிரியைப் போல் ஒரு
என்னை போன்ற உண்மையான போலிகள் யாரும் இல்லை

மகஇக வின் புரட்சிக்கரமான வார்த்தைகளை கொண்டு விவாதிப்போம் வாருங்கள்

விவாதகளம்... said...

////////கள்ளத் தந்தையாக/ஓட்டுப்பொறுக்கிகளையும் /தேய்ந்துபோன ரெக்கார்டு/கூலிக்காக/அருகதையிருக்கிறது?/நாயாய் அலையும்/என்ன யோக்கியதை/ஒழித்துக்கட்ட/ஒழிந்தேயாக/பாதந்தாங்கிக்கூட்டமான/ஒழிப்பது/திராணியற்ற/ஒளிவட்டங்களெல்லாம்>>>I don't find any, so called ,decent discussion in your replies.How it is correct ?your arguments need only opinions or views...VASAVU could be avoided...Pl.consider.//////


தோழர் விமலவித்யா அவர்களுக்கு,

நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள வார்த்தைகளில் உள்ள ஒரு சில வார்த்தைகள் உங்கள் அபிமான தலைவர் தமிழ்ச்செல்வனின் பதில்களிலும் இருக்கிறதே, அது பரவாயில்லையா. இவை வசவுகள் என்கிற முறையில் நான் இங்கு பதியவில்லை. எனது மொழியே அப்படித்தான்.

உங்கள் தலைவர்களைப் போல ஆகச்சிறந்த இலக்கியவாதியல்ல நான். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஆதரவாளன்; அவ்வளவுதான். மக்களோடு மக்களாக வாழ்ந்து வரும் எளிமையான ஆள்தான் நான். இருப்பினும் உங்களது ஆலோசனையை நான் ஏற்க மறுக்கவில்லை. இனி இதுபோன்ற சொற்பதங்களைத் தவிர்க்க கடுமையாக முயல்வேன்.

இனி மையமான விஷயத்திற்கு வருவோம்.

எனது மொழிவடிவம்தான் உங்களுக்குப் பிரச்சினையா, அதன் உள்ளடக்கத்தில் உங்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லையா? உள்ளடக்கத்தில் உள்ள எனது கருத்துக்களை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையென்றால் அதுகுறித்தும் உங்களது கருத்தைப் பதியலாம் அல்லவா!

எத்தனை கேள்விகள் அரசியல் ரீதியாக கேட்டாலும், “சி.பி.எம்.மை விமர்சிப்பதே வேலையாக உள்ளவர்கள்தானே நீங்கள்..” என்று ஒரு சொத்தையான பதிலைச் சொல்லிவிட்டு விலகி ஓடிவிடுகின்ற விவாதமுறையை நீங்கள் ஏற்கிறீர்களா?

இதை ஒரு கீழ்மட்டத் தொண்டர் செய்தால் ஏற்கலாம். ஆனால், அக்கட்சியின் அரசியலைப் பேசுவதற்காக வேஜ் எனப்படும் மாதாந்திர பராமரிப்புத் தொகை பெற்றுக்கொண்டு முழுநேரமாக வேலை செய்யும் நபர்கள் பொதுவெளியில் இவ்வாறு நடந்துகொள்வதை நீங்கள் ஏற்கிறீர்களா?

எனது மொழிதான் உங்களுக்குப் பிரச்சினை என்றால் அதன் உள்ளடக்கத்தை கருத்தில்கொண்டு உங்களால் இயன்ற நேரத்தில் பதில்களைத் தாருங்கள். நானும் சண்டமாருதம் செய்ய முயலவில்லை. வர்க்கப் போராட்ட களத்தில் எதிரிகளை விட துரோகிகள் மீதான விமர்சனங்கள் என்பது சற்று கடுமையாகத்தான் இருக்கும்.

நன்றி!

தோழமையுடன்,
து.சுரேஷ்.
letusdebate1@gmail.com

Post a Comment