Wednesday, September 29, 2010

அநீதி மன்றங்களின் வரலாற்றுப் பக்கங்களும் வரவிருக்கும் அயோத்தி தீர்ப்பும்!

த்வானி தலைமையிலான சங்கபரிவார வானரங்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்கிறவரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த வழக்கின் தீர்ப்பு நாளை (29.09.2010)வழங்கப்படவிருக்கிறது. "தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும் அதனை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டு அமைதிகாக்க வேண்டும்" என்று வரவிருக்கும் தீர்ப்பின் யோக்கியதையை முன்னறிவித்திருக்கிறார் நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்.


இந்த வலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு ஒருபுறமிருக்கட்டும், இதுபோன்ற மதவெறிப் பயங்கரவாதப் பிரச்சினைகள் தொடர்ப்பான விசாரனைகளில், நமது தேசத்தின் ஜனநாயகத்தூண்களில் ஒன்றான நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருப்பதன் வரலாறு ஒன்றும் இருக்கிறது. அவற்றை ஒருமுறை நினைவுபடுத்திப் பார்த்தாலே வரவிருக்கும் தீர்ப்பின் தன்மை எளிதாக விளங்கும்.


இந்துக்கள் மத்தியில் கலவர-கரசேவகர்களை உற்பத்தி செய்யும் நோக்கத்தோடும், பாபர் மசூதி இடிப்புக்கு ஆள்பிடிக்கும் நோக்கத்தோடும் அத்வானி குஜராத்தில் தொடங்கிய (த்)தயாத்திரை உலகறிந்தது. அந்த ரதயாத்திரையின் முடிவிலேயே, அதுவும் அதனை நடத்திவந்த அத்வானியின் தலைமையிலேயே பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஆனால், அவ்வழக்கிலிருந்து, இதே அலகாபாத் நீதிமன்றத்தால் அத்வானி விடுவிக்கப்பட்டார். இந்த நீதிமன்றம்தான் நாளை "பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்" என்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது!


அத்வானியின் பாபர் மசூதி இடிப்பு நடவடிக்கை ஒருபுறமிருக்கட்டும், அதற்கு முன்னதாக அவர் நடத்திய ரதயாத்திரை நெடுகிலும் திட்டமிட்டு அவரால் உருவாக்கப்பட்ட கலவரங்கள், உயிர்ப்பலிகள் என்று ஏராளமான ரத்தசாட்சியங்கள் இருந்தும் அவற்றுக்கெல்லாம் வழக்கும் கிடையாது, வாய்தாவும் கிடையாது.


தொன்னூறுகளின் துவக்கத்தில், தனது பத்திரிக்கையானசாம்னாவின் மூலம் வெறியூட்டி 2000-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நரவேட்டையாடிய, பம்பாய் கலவரத்தின் நாயகன் பால்தாக்கரே, நமது ஜனநாயக அரசின் சட்டத்தால் சீண்டப்படவேயில்லை. ஆனால், அக்கலவரத்திற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட இசுலாமிய பயங்கரவாத குண்டுவெடிப்புகள் வழக்காடப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.குஜராத்தின் முதல்வரான நரமமிசமோடியிடம் சி.பி.. விசாரனை நாடகங்களை நடத்துவதும், அந்த போலியான விசாரனைக்குக் கூட நேரில் ஆஜராவதிலிருந்து அடிக்கடி ஜகாவாங்கிக் கொண்டிருக்கும் மோடியையும் நாம் எளிதில் மறக்கவியலாது. போலி என்கவுண்டர் புகழ் அமித்ஷா (குஜராத்தின் மோடி அரசாங்கத்தின் அமைச்சர்) வுடனான வழக்கு விசாரனை என்கிற விளையாட்டாகட்டும் அனைத்தும் ஒரு கேளிக்கையைப் போல நிகழ்த்தப்படுகின்றன.


பெண் சாமியார் பிரக்யாசிங் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கூலிப்படைக் கும்பல் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரனைகளைக் கொஞ்சம் நுனுகிப்பார்த்தால், நீதிமன்றத்தின் இந்துத்துவப் பாசம் அப்பட்டமாகத் தெரியும்.


ஆனால் மறுபுறமோ இசுலாமியராகப் பிறந்துவிட்ட காரணத்தால், போலி என்கவுண்டரின் மூலமாகவும் போலி வழக்குகளின் மூலமாகவும் தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் எத்தனையோ பேர். இததான் இந்த நீதிமன்றங்களும் சட்டத்தைப் பாதுகாக்கின்ற அரசும் போலீசும் நீதிக்கு எதிராக அநீதியை பிரயோகித்துக்கொண்டிருக்கும் உண்மையான வரலாறு!


பொதுவாக இந்துவெறி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நீதிமன்றமே கவசமாக இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஏகாதிபத்திய நலனுக்காக முன்வைக்கப்பட்ட சேதுக்கால்வாய்த் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, மக்கள் வரிப்பணம் சில நூறு கோடிகள் கடலுக்கடியில் கொட்டப்பட்டுவிட்ட பிறகு, கடலுக்கடியில் இருந்த மணல்திட்டைராமர் பாலம்என்று இந்த வானரங்கள் கூப்பாடு போட்டது உங்களுக்கு நினைவிலிருக்கலாம். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தவுடன், அந்த திட்டத்திற்குத் தடைவிதித்த உச்சநீதிமன்றம், தமது தடையாணைக்கு ஆதாரமாக எதைக் காட்டியது தெரியுமா, நண்பர்களே? துளசிதாசர் ராமாயணத்தையும், வால்மீகி ராமாயணத்தையும்தான். "அது ராமர் பாலமோ, ஆதாம் பாலமோ அல்ல அது ஒரு மணல் திட்டு" என்று ஆய்வு செய்து அறிவித்த புவியியல் வல்லுநர்கள் தெரிவித்த அறிவியல் சார்ந்த கருத்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, உச்சநீதி மன்றத்தாலும் இந்திய அரசாலும் பழிவாங்கப்பட்டார்கள்.


(இதைப் படிக்கும்மார்க்சிஸ்ட்தோழர்கள் கவனத்திற்கு "ஆதாம் மணல் திட்டுக்கள் பற்றிய வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிவியல் கழகத்தின் கருத்துக்களை அரசு மறுபேச்சின்றி திரும்பப் பெற்றது மிகவும் சரியான நடவடிக்கையே" என்று உங்கள் கட்சியின் மாபெரும் தலைவர் யெச்சூரி 22 - அக்டோபர்’07 ஹிந்து பத்திரிகையின் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.)


ஆக, இந்திய நீதித்துறையின் யோக்கியதை இவ்வாறகத்தான் வரலாறு முழுக்க பதிவாகியிருக்கிறது. மதவெறி நடவடிக்கைகளில் மட்டுமல்ல, மறுகாலனியாக்க நடவடிக்கைகளிலும் இந்த நீதித்துறையும் அரசும் அநீதிக்குத்தான் துணைபோயிருக்கின்றனவேயொழிய நீதிக்கும் அவர்களுக்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை.


போபால் வழக்கு விசாரனையில், நீதிமன்றமும், மத்திய அரசும், மத்திய புலனாய்வுத்துறையும் கொலைகாரன் ஆண்டர்சனுக்கு செய்த உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்த தொடர் துரோகங்களையும் ஒரு கனம் நினைத்துப்பார்த்தாலே, இந்த நீதிமன்றங்களின் உண்மைநிலை, வஞ்சகத்தன்மை எளிதில் புரியும். இதே நீதிமன்றங்கள்தான் மத்திய அரசு தண்டகாரன்ய ப்ழங்குடியின மக்களின் மீது நடத்திவரும்காட்டு வேட்டைஎனும் உள்நாட்டுப் போரை ஆதரித்து கருத்துக்கள் தெரிவித்திருக்கின்றன.


இதுமட்டுமா, மேலவலவு முருகேசனை பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் தலையறுத்துக் கொண்ற சாதி வெறியர்களைக் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பெழுதியதும் இதே நீதிமன்றங்கள்தான். மகாராஷ்டிராவின் கயர்லாஞ்சியின் துயரத்தை யாரும் அத்தனை எளிதாக மறந்திருக்க முடியாது. அந்தக் கயர்லாஞ்சி வழக்கில் நீதிமன்றத்தின் அயோக்கியத்தனங்கள் அப்பட்டமான ஆதிக்கசாதி வர்க்கத்துக்கு சாதகமாக இருந்துவருகிறது. "பீயத்திண்ணுடா பறநாயே" என்று திருச்சியை அடுத்த திண்ணியம் என்ற ஊரில் வாயில் பீ திணிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவனுக்கு நீதிமன்றமும் தன்பங்குக்கு ஆதிக்க சாதி மலத்தை தீர்ப்பாக திணித்தது.


இந்தியாவின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றான நீதிமன்றம் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்புகள் ஒருசிலவற்றைத்தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இந்திய நீதித்துறையின் வரலாறே இதுபோன்ற பக்கங்களால்தான் நிரப்பப்பட்டுள்ளது. சட்டமும் நீதியும் ஆளூகின்ற வர்க்கத்தின் தன்மையைப் பிரதிபலிப்பது எதார்த்தமே. மதப் பிரச்சினையானாலும், சாதியப் போராட்டங்களானாலும், முதலாளித்துவ கொடூரங்களானாலும் இந்த நீதிமன்றங்களின் வர்க்கப்பாசம் ஒளிவுமறைவிற்கு இடமின்றி வெளிப்படையாக அம்பலப்பட்டு நிற்பதை நாம் பார்க்க முடிகிறது. இனியும் இந்த நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு நீதியை வழங்கும் என்று நம்பிக்கொண்டிருப்பதற்கு எந்த முகாந்திரமுமில்லை.


இந்த அநீதிமன்றங்களுக்கு எதிராக உண்மையான நீதியை நிலைநாட்டுவதற்கு மக்கள் சர்வாதிகார மன்றங்களை நாம் கட்டியமைக்க வேண்டிய காலம் நெருங்கிவருகிறது. ஒடுக்கப்பட்டு கிடக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்குச் சாதகமான நீதியை நாம் நீதிமன்றச் சுவர்களுக்குள் பெறமுடியாது, மக்கள் மன்றத்தின் முன்பாகத்தான், நடுவீதியில்தான் அவற்றை நாம் நிலைநாட்ட முடியும்.


அயோத்தி தீர்ப்பு கிடக்கட்டும், இந்த அயோக்கியத் தனங்களை முற்றாகத் துடைத்- தெறிகின்ற புரட்சிகர போராட்டங்களை நோக்கி அணிதிரள்வோம்! நன்றி!

===============================================

தொடர்புடைய (அவசியம் படிக்க வேண்டிய) பதிவுகள்:

1. அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!! - அசுரன்

2. ராமனுக்கே மயிர் பிடுங்கிய அலகாபாத் நீதிமன்றம்! - செங்கொடி மருது.

3. கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு? - செங்கொடி.

4. நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி! - வினவு.

==============================================


Monday, September 27, 2010

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை! - அசுரன்.

அன்பார்ந்த தோழர்களே!

சுமார் மூன்றாண்டுகளுக்கும் முன்னதாக இணையதள - வலைதளங்களை முற்றாக ஆக்கிரமித்திருந்தது பார்ப்பன பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.கும்பல். கம்யூனிச விரோத கருத்துக்களை நுட்பமாக வெளியிட்டு வந்த அந்த காலகட்டங்களில், அந்த அம்பிகளுக்கு எதிர்வினையாற்றும் விதமாக தோழர் அசுரன், தோழர் ராஜாவனஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

2007-ம் ஆண்டு மார்ச் மாதம் தோழர் அசுரன் தமிழ்மணம் என்கிற வலைதளத்திரட்டியின் நட்சத்திர பதிவராக தேர்வுசெய்யப்பட்டார். அவர் அப்போது வெளியிட்ட நட்சத்திர பதிவுகள் அனைத்தும் முத்தாய்ப்பானவை. அவற்றிலிருந்து பின்வருகின்ற சிறப்பான கட்டுரையினை இங்கு பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தோழமையுடன்,
து.சுரேஷ்.

==================================================Monday, April 23, 2007ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை! 


'We have a growing middle class, reared on a diet of radical consumerism and aggressive greed. Unlike industrialising Western countries, which had colonies from which to plunder resources and generate slave labour to feed this process, we have to colonise ourselves, our own nether parts. We have begun to eat our own limbs. The greed that is being generated (and marketed as a value interchangeable with nationalism) can only be sated by grabbing land, water and resources from the vulnerable.'

"பேராசையும், நுகர்வு வெறியும் உந்தித்தள்ள அகோர பசியெடுத்து வளர்ந்து வரும் ஒரு நடுத்தர வர்க்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். தொழில்மயமான மேற்கு நாடுகள் தங்களது காலனிகளின் வளங்களைக் கொள்ளையடித்தும், அடிமை உழைப்பு மூலமும் இந்த பசிக்கு இரையிட்டது போலல்லாமல், இங்கு நாம் நமது சொந்த நாட்டின் பகுதிகளையே காலனியாதிக்கத்துக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. நமது சொந்த உடல் உறுப்புகளையே நாம் புசித்து வருகிறோம். இப்படி உற்பத்தியாகும் பேராசை நிலங்களையும், நீர் நிலைகளையும் இன்ன பிற வளங்களையும் பலவீனமானவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் திருப்திப் படுத்தப்படுகிறது." - தெஹல்கா பேட்டியில் அருந்ததிராய்

நந்திகிராமில் போலி கம்யுனிஸ்டு காட்டேறிகள் நடத்திய வெறியாட்டத்தை ஒட்டி அருந்ததி ராய், தெஹல்கா பத்திரிக்கைக்கு கொதிப்புடன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில்தான் இந்த வரிகள் வருகின்றன. இந்தியாவின் இன்றைய நிலையை இதை விட சுருக்கமாக எடுப்பாக சொல்லி விட முடியாது. இதனை புரிந்து கொள்ள ஒருவன் சமூக விஞ்ஞானங்கள் அனைத்தும் கற்றவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படை மனிதாபிமானமும், சுயமரியாதையும், சமூக அக்கறையும் இருந்தால் போதும்.மீபத்தில்

துரதிருஷ்டவசமாக அல்ல, மாறாக ஏகாதிபத்தியம் திட்டமிட்டே இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தில் ஒரு பிரிவினரை தனது ரொட்டித் துண்டுகளுக்கு அடிமையாக்கியுள்ளது. நுகர்வு கலாச்சாரத்தில் தோய்ந்து போன அவன் தான் ஒரு ஒட்டுண்ணியாக இந்த சமூகத்தின் மீது ஒட்டிக் கொண்டு உறிஞ்சி உயிர் வாழ்வது குறித்த பிரக்சை என்பதே இல்லாமல் மயங்கிக் கிடக்கிறான். தனது வாய், ஆசன வாய், தனது பிறப்புறுப்பு(குழந்தைகள்) இவற்றிலிருந்து வெளியேறும், உள்ளேறும் விசயங்கள் குறித்து மட்டுமே அதிகபட்சம் சிந்திப்பதை பெரும்பான்மை உலகமய யுப்பி வர்க்கத்தார் செய்து வருவதை ஏகாதிபத்திய கலாச்சார தாக்குதல் உறுதிப்படுத்துகிறது.

என்றாவது இவர்கள் தமது ஐந்திலக்க சம்பளம் அமெரிக்க கம்பேனிகளுக்கு படு குறைவானதாகவும், ஒரு சராசரி இந்தியனுக்கு மிக உயர்வானதாகவும் தெரிகிறதே ஏன் என்று யோசித்திருப்பார்களா? குறை கூலி பிரதேசம் என்ற பெயரை இந்தியாவுக்கு வாங்கி தந்த தியாகிகள் யார் என்று என்றாவது யோசித்திருப்பார்களா? சராசரியை விட சிறிது வளப்பமான வாழ்க்கை வாழும் வசதியை உறுதிப்படுத்திக் கொடுத்த வள்ளல் யார் என்று யோசித்திருப்பார்களா?

இதோ அந்த தியாகிகள்-உழைக்கும் மக்கள் இந்திய சமூகத்தின் அன்றாட தேவைகளுக்காக மாடுகளாய் உழைத்து கிடக்கிறார்கள். காலையில் பால் போடும் இளைஞன், பத்திரிக்கை வீசியெறியும் சிறுவன், காலை உணவு அருந்தும் கடை சிப்பந்திகள், அந்த உணவுக்கு தேவையான எண்ணைய், மசாலா முதலானவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயி, காலை ஆறு மணிக்கெல்லாம் வேலை செய்யத் துவங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், 4 மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்யும் அண்ணாச்சி குடும்ப கடைகள், காய்கறி மொத்த கொள்முதற்சாலை தொழிலாளர்கள், கம்பேனிக்கு இட்டுச் செல்லும் பேருந்து ஓட்டுனர்கள், தண்ணீர் லாரிகள், தனியார் தண்ணீர் சப்ளை வேன் ஓட்டுனர்கள் - இப்படி இன்றைய யுப்பி வர்க்கத்தின் ஒவ்வொரு தேவையுடனும் ஒரு பெரும் சமூக உழைப்பு பின்னி பிணைந்திருப்பதை அவர்கள் என்றுமே உணர்வதில்லை.

குறைந்தது தமது ஆபார்ட்மென்ட் வாட்ச் மேனுக்கு குடும்பம் உண்டு அவரது உழைப்பு எத்தனை மணிநேரம் நமது பாதுகாப்புக்காக சுரண்டப்படுகிறது என்றளவிலாவது இந்த வர்க்கம் யோசித்ததுண்டா?

இவர்களைப் போன்ற சிறுபான்மையினர் தவிர்த்து மிகப் பெரும்பான்மை சமூகம், நகரங்களிலும், கிராமங்களிலும் மிக பின் தங்கிய சிதறிய உற்பத்தி முறையில் குறைந்த விலையில் பொருட்களை தொடர்ந்து உற்பத்தி செய்வதுதான் யுப்பி வர்க்கத்தின் ஐந்திலக்க சம்பளத்தை மிக பெரிய சம்பளமாக வைத்திருக்கச் செய்யும் காரணி என்பதை என்றுமே இவர்கள் உணர்வதில்லை. அது குறித்தான் விவாதங்களிலும் தமது சாதனை குறித்தான வெற்று சவடால்களையே பதில்களாக இட்டுச் செல்கின்றனர். தமிழ்மணத்தில் உலகமய யுப்பிகள் குறித்த கட்டுரைகள் பலவற்றில் நான் கண்டுணர்ந்த விசயம் இது.


உலகமய சம்பளமும், உள்ளூர் சம்பளமும்:

குங்குமம் எழுதுகிறது, மதுரையை சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டினர், தறி பட்டறைகளையும், வயல் வெளிகளையும் இன்ன பிற சிறு வீத, பின் தங்கிய அடிமை உற்பத்தி முறைகளை உடைய பட்டறைகளை, தொழிற்பேட்டைகளை அதிசயமுடன் பார்த்துச் செல்வதாக. அத்துடன், இது போல இந்திய உழைப்பாளிகள் நவீனமயமாகாமல் தமது உழைப்பை நாள் முழுவதும் செலுத்துவது வெளிநாட்டினருக்கு வியப்பாக இருப்பதாக குங்குமம் எழுதுகிறது. நமக்கு வியப்பாக இருப்பதெல்லாம் வெளிநாட்டினனின் கண்ணுக்கு வியப்பாகவாவது தெரியும் பெரும்பான்மை இந்திய மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏன் இந்த ஐந்திலக்க ஒட்டுண்ணிகளின் பார்வையில் விழுவதே இல்லை என்பதுதான்.
ஒரு எடுத்துக்காட்டுக்கு நாம் அன்றாடம் உணவு சாப்பிடும் தோசைக் கடை ஒன்றில் தோசை சுடுபவரை எடுத்துக் கொள்வோம், காலை 6:00 மணிக்கு சற்று முன்பாக கடைக்கு வந்து கழுவி அடுப்பை சூடேற்றி வைத்தால் ஒரு ஏழு ஏழரைக்கு கடை களை கட்ட ஆரம்பித்தவிடும், காலை கூலி வேலைக்கு வந்தவர்கள், அடுத்ததாக வெள்ளை காலர் உத்தியோகத்துக்கு செல்பவர்கள் என்று ஒவ்வொருவராக அவரவர் வேலை வசதிக்கேற்ப்ப காலர் கலருக்கேற்ப வந்து பதினொன்று வரை தோசைக் கடை ஓடும், இதனிடையே மதியம் புரோட்டா மாவு ரெடியாகியிருக்கும் (சில இடங்களில் இவரே புரோட்டா மாவும் தாயரிக்க வேண்டியிருக்கும்) மாலை மூனு மூனரை வரை புரோட்டா, அம்லேட் கடை ஓடும், சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை தோசை கம் புரோட்டாவுக்கான தாயாரிப்புகள் ஆரம்பமாகிவிடும், இது இரவு 10:00, 11:00 மணிவரை ஓடும். இதற்க்கப்புறம் கடையை கழுவி எடுத்து வைத்து அடுத்தநாளுக்கான தாயாரிப்புகளை செய்தால், தூங்குவதற்க்கு பணிரென்டரை ஆகிவிடும். பிறகு மீண்டும் காலை 6:00 மணி.

ஒரு பால் கறந்து விற்பவரை எடுத்துக் கொண்டால் அவரது உழைப்பு காலை 4:00 மணிக்கு ஆரம்பிக்கிறது. இதே முறையிலான உற்பத்தியில்தான் காய்கறி கடைக்காரர் முதல் பேப்பர் போடும் பையன் வரை பலரும் ஈடுப்பட்டு இந்த சமூகத்தை உயிர்ப்புடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விவசாயியின் வாழ்க்கையும் இப்படித்தான், காலை காய்கறி, தானியங்களை கட்டி எடுத்து நகர சந்தைகளில் விற்பது ஒரு காலம் எனில், விதைப்பு இல்லாத நாட்களில் திருப்பூர்களிலும், சென்னைகளிலும் பனியன் பட்டறைகள், ஹோட்டல் கடைகளில், கட்டுமான இடங்களிலும் தமது உழைப்பை இடையறாமால் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆடு மேய்ப்பவனின் வாழ்க்கை ஆடுகளுடன் முற்று முதலாக கட்டுண்டு அவன் சாகும் வரை ஆடோ டு ஆடாக சாக சபிக்கப்பட்டதொரு வாழ்க்கையைத்தான் இந்த சமூகம் அவனுக்கு உத்திரவாதப்படுத்தியுள்ளது. இவையணைத்தும் அற்பக் கூலிக்கு சுரண்டப்படும் உழைப்பு.

இந்தியாவில் Working poverty அதிகம். இந்தியாவில் வறுமைக் கோட்டை அரசு நிர்ணயம் செய்திருப்பதே ஒரு பெரிய மோசடி என்பதிருக்க, அதனை உண்மை என நாம் அங்கீகரித்தால் கூட 30% கிட்ட வறுமைக் கோட்டிற்க்கு கீழ் இருக்கும் ஒரு சமூகம்தான் இந்தியா. அதில் பெரும்பான்மையினர் வேலை செய்தும் வறுமையில் இருப்பவர்கள். அரசு புள்ளி விவரத்தின் படியே சில நூறு ரூபாய்கள்தான் கிராம ஆண்டு சராசரி வருமானமாக உள்ளது. நமக்கு சோறு போடுபவர்கள் சோறின்றி இருக்கு கொடுமை இது.

இவர்களுக்கு இந்த சமூகம் என்ன திருப்பிக் கொடுக்கிறது? இவர்களுக்கு என்றாவது தமது சொந்த வாழ்க்கையை நிதானமாக நின்று சிந்தித்துப் பார்க்கவோ அல்லது உழைப்பின் களைப்பை வியாபாரமாக்கும் சந்தை கலாச்சார ஆபாசங்களை மீறி ஆக்கப்பூர்வமான கலைகள் குறித்தோ, அல்லது அவர்களது சொந்த அறிவு மேன்மை குறித்தோ சிந்திப்பதற்க்கோ வாய்ப்புகளையாவது இந்த சமூகம் கொடுத்துள்ளதா? இப்படி அவனது சிந்தனை, உடல் உழைப்பு முழுவதையும் தோசைக் கல்லிலும், பசுவின் மடுவிலும், உழு மாடுகளுடனும், கட்டிட குவியல்களிலும் கட்டி வைத்து அடிமையாக்கி சுரண்டுவது குறித்து என்றாவது இந்த வளங்களை அனுபவிக்கும் வர்க்கங்கள் யோசித்திருக்குமா? ஒரு பெரிய சமூகமே இப்படி ஜனநாயகமின்றி - 'விடிந்தால் பட்டறை அடைந்தால் படுக்கை' என்று முடக்கப்பட்டு, ஒட்டு மொத்த சமூகத்தின் அறிவு அழிவு ஏற்படும் புதிய மனு நிதியின் அவலம் குறித்து என்றாவது அறிவு ஜீவிகள் என்று பீற்றிக் கொள்ளும் நடுத்தர வர்க்க மேதைகள் யோசிப்பதுண்டா?
ஒரளவு வளமான நடுத்தர வர்க்க பின்புலத்தில் பிறந்து, இந்த சமூகத்தின் கூட்டு உழைப்பின் பலன்களையெல்லாம் அனுபவித்து விட்டு, தமது அறிவை வளர்த்துக் கொண்டு, இந்த பலங்களின் அடிப்படையிலேயே இன்று உலகமயப் பொருளாதாரத்தில் தன்னை ஒரு வளப்பமான இடத்தில் உட்கார வைத்துக் கொண்டு ஒட்டுண்ணியாக வாழும் இந்த வர்க்கம் - அதனை ஏதோ தமது தனிப்பட்ட சாதனை போலவும், மற்ற ஏழை தொழிலாளர்கள் எல்லாம் முட்டாள்கள், பிழைக்கத் தெரியாதவர்கள், சோம்பேறிகள் என்றும் வியாக்கியனம் செய்யும் அல்பத்தனமான் திமிர்தனத்தைத்தானே இவர்கள் பெரும்பாலும் இந்த சமூகத்திற்க்கு திருப்பிச் செலுத்தும் கடமையாக் வெளிப்படுத்துகிறார்கள்.
இப்படி சுரண்டிச் சேர்த்த சில்லறை பணத்திலிருந்து சிலர் தானம் செய்து தமது சமூக அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். இந்தியாவை ஒட்டச் சுரண்டிய வெள்ளைக்காரன் இது போல அற்ப தொகையை தானம் செய்து விட்டு அதனையே அவனது கொள்ளைகளை நியாயப்படுத்து பயன்படுத்துவது எந்தளவுக்கு மொள்ளமாறித்தனமோ அந்தளவுக்கு மொள்ளமாறித்தனம் இந்த செயல். சம்பாதித்த பணம் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களை இது போல அற்ப கூலிக்கு சுரண்டி சேர்த்த பன்னாட்டு மூலதனத்தின் ஒரு பகுதி, அதில் இவன் சேமிக்கும் பணம் என்பது உள்நாட்டு உழைக்கும் மக்களை அற்ப கூலிக்கு சுரண்டுவதால் சேகரமாகும் பணம். இதில் உனக்கு என்ன நல்லவன் என்ற மன நிம்மதி வேண்டிக் கிடக்கிறது?
சிலர் இருக்கிறார்கள் - 'சார் சாதி பேச வேண்டாம், மத பேச வேண்டாம், வர்க்க பிரிவினை பேசி நாம் பிரிந்து கிடக்க வேண்டாம். எல்லாரும் மனிதர்கள் சார்' என்று இங்கே தமிழ்மணம் போன்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இங்கே அன்பை பேசு என்பதுதான் இவர்களின் கோரிக்கை. ஏனேனில் தமிழ்மணத்தில் பொழுதைக் கழிக்க வரும் இவர்களுக்கு நமது சத்தங்கள் நாரசமாக இருக்கிறதாம். இவர்களது ஆன்ம நிம்மதியை கெடுக்கிறதாம். அதிர்ச்சியாய் இருக்கிறதாம். ஏனேனில் இவர்கள் எல்லாம் தேவ லோகத்தில் வசிப்பவர்கள் அல்லவா? ரொம்ப நல்லவர்கள் அல்லவா? எந்த பிரச்சனைக்கும் போகாதா உத்தமர்கள் அல்லவா?
உண்மையில் இவர்கள்தான் படு கேவலமான அயோக்கியர்கள். ஒட்டுண்ணியிலேயே வீரிய வகையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இங்கே ஒரு பெரும் சமூகமே துன்பக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது அது குறித்தான பேச்சைக் கூட சகிக்கவொன்னாத அளவு தமது சொந்த சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படு கேவலமான பிழைப்புவாதிகள் இவர்கள். சுரண்டலின் பலன்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டே அது குறித்தான் விவாதங்களை தவிர்ப்பதோடல்லாமல் தமது வர்க்கத்தாரிடமும் நல்ல பெயர் எடுக்கும் நாரிகள் இவர்கள்தான்.
நான் சென்னையிலிருந்த காலம் அது, பெசண்ட் நகர் சிக்னல் வாட்டர் டேங்க் சாலையின் ஆரம்பத்தில் சில புரோட்டாக் கடைகளை கடந்தால் தள்ளு வண்டியில் தோசைக் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார் ஒரு அண்ணாச்சி. சிரிவில்லிபுத்தூர்க்காரர் அவர். இரவு நேரங்களில் அங்குதான் நமக்கு சாப்பாடு. அமிர்தமாக இருக்கும். மாலை ஆறு மணி போல ஆரம்பித்து இரவு விடிய விடிய கடை ஓடும். அதுதான் அவரது பிரதான வருமானம். முக்கியமாக இரவு எட்டு முதல் பத்து மணி வரையான பீக் அவரில் எவ்வளவு காசு பார்க்க முடியுமோ அவ்வளவு லாபம் அவருக்கு. அந்த நேரங்களில் அவரது கைகள் படு பரபரப்பாக இயங்கும். மின்னலின் வேகத்துடன் சுற்றி பல்வேறு கோரிக்கைகளை வைத்து நிற்க்கும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வெறி கொண்டு இயங்குவார் அவர். அது கலைக் கண் கொண்டு உற்று நோக்குவோருக்கு இரை கேட்டு கீச் கீச் என்று கதறும் குஞ்சுகளை திருப்திப்படுத்தும் ஒரு பறவையின் தாய்மையை ஒத்ததாக தோன்றும். ஆனால் நிதர்சனத்தில் அவரை உந்தித்தள்ளும் குழந்தைகளின் படிப்பு, தங்கையின் மருத்துவ செலவு இன்னபிற வாழ்க்கை துயரங்கள் எனது கண்ணில் நிழலாடும். அவரது இந்த பேராசையால் காக்க வைக்கப்பட்ட நபர்கள் பலர் (ஆம், இந்த அடிப்படை தேவைகளை பேராசை என்று அல்பவாதிகள் சொல்வார்கள் - "சார், இருக்கறவங்கள திருப்தியா வைச்சாலே ஒழுங்கா கடை ஓடும், அவனுக்கு பேராசை சார். அதான் ரெகுலர் கஸ்டமர காக்க வைச்சு கடசில விரட்டி விட்டுற்றான்). அப்படி காக்க வைக்கப்பட்டு இழந்த வாடிக்கையாளர்கள் பலர். ஆனால் இவை அவரை பாதிப்பதில்லை. அவரை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தி கொன்று கொண்டிருக்கும் வேறு ஒரு விசயம் இருந்தது.

தொடர்ந்து இப்படி வேக வேகமாக தோசை சுட்டதால் அவரது மணிக்கட்டு முற்றிலும் சேதமாகி, சவ்வு வலுவிழந்து அவருக்கு பெரும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த வலியையும் மீறி அவர் தொடரந்து தோசை சுட்டுக் கொண்டேயிருப்பார். இதுதான் அவரை உண்மையில் கலவரப்படுத்திக் கொண்டிருந்த விசயம். ஏனேனில் அவரது மூலதனம் என்பது அவரது மணிக்கட்டின் வேகம்தான். அந்த கடையில் பெரும்பாலும் வேலை தேடும் இளைஞர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் வருவார்கள். முக்கியமாக அன்றாடம் கூலி வேலை செய்து வயிறு கழுவுபவர்களும் பெரும்பான்மையாக வருவார்கள்.

முகமெல்லாம் வெள்ளை பொடி - அவர் கட்டிட இடிபாடுகளில் வேலை செய்கிறார் போலும், இரவு பத்து மணி போல வருகிறார், பழுப்பு நிற சட்டை - வேட்டியா, லுங்கியா அல்லது கிழிந்த பேண்டா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒரு ஆடை. கடும் உழைப்பின் வலு ஏறிய உடலமைப்பு. கண் இமைகளில் கூட வெள்ளைப் பொடிகள் நிற்கின்றன. வாய் திறந்து பேசும் போது வித்தியாசமாக பற்கள் பழுப்பு நிறத்திலும், உதடுகளில் ஒட்டிய பொடிகள் வெள்ளை நிறத்திலுமாக காட்சி தருகின்றது. சிரி வில்லிபுத்தூர் அண்ணாச்சியிடம் கேட்க்கிறார் - "இட்லி எத்தன ரூபாய்". வேலை சிரத்தையாக இருக்கும் அண்ணாச்சி பதில் சொல்கிறார். ஒரு நொடியில் கால் பங்கு நேரம் கணக்குப் போடுவது போன்று நிதானித்த பிறகு வெள்ளை பொடி தொழிலாளி, அண்ணாச்சியிடம் 4 இட்லிகளை கேட்க்கிறார். அருகே 5 தோசைகளை சாப்பிட்ட பிறகு ஆம்லேட்டுக்காக நின்று கொண்டிருந்த எனக்கு அதற்க்கு மேல் சாப்பாடு இறங்கவில்லை.

வெள்ளைத் தொழிலாளியின் உழைப்பின் தேவை என்னவென்பதை பார்க்கும் போதே என்னால் உணர முடிகிறது. அது நான்கு இட்லிகளில் அடங்கிவிடும் விசயம் அல்ல என்பதை உணரும் போது எனது வயிறு தானே சுருங்கிக் கொள்கிறது. கொடுமையில் கொடுமை உழைப்பவரின் வறுமை. எனது மனசாட்சி இந்த சமூகத்தின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நாகரீகமான வாழ்க்கை வாழ்கிறாயே பதிலுக்கு என்ன செய்யப் போகிறாய் என்று என்னை குத்திக் கிழிக்கிறது. மங்கிய சோடியம் விளக்கின் அழுக்கு மஞ்சள் வெளிச்சம் இந்தியாவின் இழி நிலையை நினைத்து மௌனமாக அழுவது போன்ற எண்ணம் வலுப்பட்டது. வெளியே பரவும் அந்த சோக மஞ்சள் உள்ளே மனதுள் கருமையாய் படர்ந்தது. சென்னையின் இரவு நேர காற்றழுத்த இறுக்கம் இந்த சோகத்தை இன்னும் மோசமானதாக மாற்றியது. ஒன்றும் செய்ய இயலாமல் வெறுமே நின்று வேடிக்கை பார்க்க வைக்கும் அந்த சூழல் என்னுள் கழிவிரக்கத்தை தோற்றுவித்தது.

சிலர் அவன் தண்ணியடிப்பதற்க்காக காசு சேர்க்கிறான் என்று சொல்லக் கூடும். இருக்கலாம். ஆயினும் தண்ணியடிப்பதுதான் அவனை மறுநாள் சூரியன் வரும் முன் எழுந்து மீண்டும் ஒரு உழைப்பு சுரண்டலுக்கு உட்படுத்த அவனை தாயர் செய்கிறது எனில் அதனையும் சேர்த்து தருவிக்கும் அளவிலாவது அவனது கூலி இருப்பதுதானே நியாயம் என்று சொல்லத் தெரியாத அல்பைகள்தான் இவ்வாறு அவனை குற்றம் சாட்டுகிறார்கள். அந்த அல்பைகளோ யுப்பி வர்க்கத்தின் அஜீரண தீர்த்த யாத்திரைகள் குறித்து சம்பிரதாயப் பூர்வமான மௌனம் சாதிப்பார்கள்.
இப்படிஇந்திய சமூகத்தின் பெரும் மனித வளத்தை அற்ப கூலிக்கு அடிமைகளாய் வைத்து சுரண்டுவதால்தான் நமக்கு முட்டை 2:50க்கும், தோசை 5:00 ல்லது 6:00 ரூபாய்க்கும் கிடைக்கிறது. தொழிற்சாலைகளில், பனியன் பட்டறைகளில் ஒப்பந்த கூலிகளாக விவசாயிகளை சுரண்டுவதால்தான் லிவி ஜீன்ஸ் லாபத்தையும் உள்ளடக்கி 1000 ரூபாயில் கிடைக்கிறது. இந்த பாணி உற்பத்தி முறையில் இருக்கும் சேவைகள் எல்லாமே நமக்கு மிக குறைவான விலையில் கிடைக்கின்றன. ஒருவேளை உண்மையிலேயே இந்த தியாகிகளுக்கு/பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் என்னாகும்?
அப்படி ஒரு சூழல் உருவாகும் போது புரட்சி செய்ய வேண்டிய தேவை குறித்து நாம் எதுவும் சொல்லித் தர வேண்டாம், யுப்பி வர்க்கமே நம்மிடம் வந்து புரட்சியின் தேவை குறித்து பேசும். ஏனேனில் அது போன்ற சூழலில் அவனது பழைய வளப்பமான வாழ்க்கைத் தரத்தை பேணுவதற்க்கு தற்போதைய ஐந்திலக்க சம்பளம் போதாமல் போயிருக்கும். தேவையான சம்பளத்தை உயர்த்தி தருவதற்க்கோ அவனது இன்றைய பாசமிகு பன்னாட்டு தரகு முதலாளிகள் தாயாராயிருக்க மாட்டார்கள்.
இதுதான் ஐந்திலக்க சம்பளத்தின் லட்சணம். இதுதான் இந்திய மூளைக்கு உண்மையிலேயே சந்தை மதிப்பை உயர்த்தி தரும் காரணி. இதுதான் பல உலகமய தொழிலாளர்களை ஏதோ தாம் சாதனை செய்ததாக சுய திருப்தியில் அலைய வைக்கும் சமூக பொருளாதார பின்னணி. ஏனேனில் அவர்கள் கணக்கில் திறமை என்பதும் சாதனை என்பதும் சம்பள இலக்கங்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் கணக்கில் தன்னலமின்றி இந்திய சமூகத்துக்கு தமது உழைப்பை கொடுக்கும் பெரும்பான்மை மக்கள் திறமையற்றவர்கள். இந்த உண்மைகளையெல்லாம் மறைக்கத்தான் இந்தியா ஒளிர்கிறது என்ற தோல்விகரமான பிரச்சாரம் இன்று வரை தொடர்கிறது.
இப்போ சொல்லுங்க, உங்களோட இந்தியா ஒளிர யார் காரணம்? சோறு போட்ட உங்க சகோதரர்களின் இந்தியா உண்மையில் ஒளிர்கிறதா? எந்த இந்தியாவின் பக்கம் நீங்கள் இருக்கிறீர்கள்? உங்களது இந்தியாவை ஒளிரவைத்தவர்களின் இந்தியாவை ஓளிரவைக்க நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?அதிகமான கேள்விகளோ?...


மன்னிக்கவும்..... சுலபமான ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்.

உங்களுக்கு நன்றியுணர்ச்சி உண்டா?

- அசுரன்