Saturday, October 23, 2010

போலிகம்யூனிஸ்டுகளின் தேர்தல் வன்முறையும், நக்சல்பரி புரட்சியாளர்களின் அரசியல் போராட்டங்களும்!!

நேற்று (23.10.2010) நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டது. வெடிகுண்டுகள் வீசப்பட்டது. வேறு வழியில்லாமல் வேறொரு தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இது மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை எதிர்த்து நடத்தப்படும் பீகார் தேர்தல் பற்றிய செய்திகள் அல்ல. “நிலச்சீர்திருத்தத்தின் மூலம் மாவோயிச பயங்கரவாதத்தை நுழையவிடாமல் செய்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் மாநிலமான, அகிம்சாவாத கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யக்கூடிய...” கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய செய்திகள்தான் இவை. கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் என்ற ஊரில் இருந்த வாக்குச் சாவடியில் நடைபெற்ற மோதல்தான் இது. இதுபோன்ற, சுமார் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் மோதல்களும், குண்டுவீச்சுக்களும், வாக்குச் சாவடிகளைச் சூறையாடுதலும் நடத்தப்பட்டிருப்பதாக இன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பாக, இதே போலிமார்க்சிஸ்டுகள் ஆட்சி செய்துவரும் மேற்குவங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட, இந்த அகிம்சாவாத காம்ரேடுகள் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் சகிதம் ‘அமைதிவழியில்’ எதிர்கட்சியினருடன் மோதிக்கொண்டதை நாம் செய்திகளினூடாகப் பார்த்தோம்.

அரசுப் பதவிகளுக்காகவும் உள்ளாட்சிப் பதவிகளுக்காகவும் குண்டுவீச்சில் ஈடுபடும் காம்ரேடுகள், அத்தோடு நின்றுவிடுவதில்லை; அதே மேற்கு வங்கத்தில், சென்ற மாதம், ஒரு பள்ளியின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட போதும்கூட குண்டுவீச்சில் ஈடுபட்டனர். அதில் (இந்தச் சண்டையில் சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள்) சுமார் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட அக்கிரமும் நிகழ்ந்தது. போலிகம்யூனிஸ்டுகளின் பதவி வெறியும், அற்ப பிழைப்புவாதமும் வெளிப்படையாக அம்பலமாகும் இடம் இதுதான்.

வர்க்கப் போராட்ட களத்தில் ஆயுதம்தாங்கிய போராட்டத்தை வலியுறுத்தி களம் காணும் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள் என்று முத்திரைகுத்தி அவதூறு செய்துவரும் இந்தப் போலிகள், தேர்தல்களின் மூலம் கிடைக்கும் நாற்காலி சுகத்திற்காக ஆயுதம் தூக்கிக்கொண்டு வெறியாட்டம் போடுவதற்குத் தயங்குவதே கிடையாது.

அதாவது மக்கள் விடுதலைக்காக, சமுதாய மாற்றத்திற்காக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை “பயங்கரவாதம்” என்று கூச்சல் போட்டு முடக்க நினைக்கும் இந்த கம்யூனிசப் போலிகள் மக்களுக்கு எதிராக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை ஆதரித்து நிற்கிறார்கள். சிங்கூர், நந்திகிராம விவசாயிகளுக்கு எதிராகவும் லால்கார் பழங்குடி மக்களுக்கு எதிராகவும் அரச பயங்கரவாதத்தை ஏவி அப்பாவி மக்களைப் படுகொலை செய்தவர்கள்தான் இந்த அகிம்சாவாத கம்யூனிஸ்டுகள்.

தேர்தல் என்ற நாடகங்களின் மூலம் வாக்காளர்களான அப்பாவி மக்களை ஏமாற்றி, நமது மண்ணையும் வளங்களையும் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு விற்பனை செய்துகொடுத்துவிட்டு, கமிஷனாக சில எலும்புத்துண்டுகளைக் கவ்விக்கொள்ளும் புரோக்கர்களையே முதல்வராகவும் பிரதமராகவும் அமைச்சர்களாகவும் தேர்வு செய்துகொள்ளும் இந்தத் தேர்தல் முற்றாகப் புறக்கனித்து ஒதுக்கப்படவேண்டியது அவசியம்.


இந்தியாவை அமெரிக்கா உள்ளிட்ட இதர ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக மாற்றுவதை, அதிகாரத்தின் மூலமாகவும் சட்டப்பூர்வமாகவும் செய்துதருவதற்காக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இந்திய நாடாளுமன்றம், இந்திய மக்களால் இகழ்ந்து ஒதுக்கப்படவேண்டும்.

 இந்த நாடாளுமன்றத்தையும் தேர்தல் முறைகளையும் பயன்படுத்தி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தவேண்டும். இதில் காங்கிரசு, பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அடக்கம். இவர்கள்தான் இந்த போலிஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாத்து நிற்கும் தூண்களாக இருக்கின்றனர். உண்மையான ஜனநாயகத்தை, சுயசார்பான தேசத்தைப் படைக்க விரும்புகின்ற எவரும் இந்த போலிஜனநாயகக் கும்பலை அடையாளப்படுத்தி, தனிமைப்படுத்தி முடக்கியழிப்பதற்கு முன்வரவேண்டும்.

கேவலம் ஓட்டுக்காகவும், நாற்காலிப் பதவிகளுக்காகவும் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதமாக மோதிக்கொள்ளும் கம்யூனிச போலிகளை அக்கட்சியின் நேர்மையான தோழர்கள் கேள்விக்குட்படுத்திட வேண்டும். இந்தியப் புரட்சியைச் சாதிக்கக் கூடிய வலிமை படைத்தவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களா அல்லது இந்த தேர்தல்-பதவி வெறியர்களா என்பதை ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் அணிகள் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு தற்காலிகமாக விடைபெறுகிறேன். தொடர்ந்து இதுபோன்ற தகவல்களுடன் சந்திப்போம். நன்றி!

தோழமையுடன்,
து. சுரேஷ்
=================================================

சி.பி.எம். என்ற அகிம்சாவாத கம்யூனிஸ்டுகளின் ‘அமைதி’வழிப் புரட்சியைப் பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டிகளின் மீது அழுத்தி, அதில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளை அவசியம் படியுங்கள் தோழர்களே!

  1. ஏரியா பிரிக்க அடித்துக் கொள்ளும் சி.பி.எம். குண்டர் படை! - அசுரன்.
  2. திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? - புதியஜனநாயகம்.
  3. உ.ரா.வரதராசனின் மரணமும் சி.பி.எம்.மின் அரசியல் ஒழுக்கக்கேடும்! - வினவு.
  4. கொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை!!
  5. யெச்சூரி: யோக்கியன் வாரான் சொம்பெடுத்து உள்ளே வை!
  6. தெருநாய்ச் சண்டைகளும் அரசியல் ஓலங்களும்!

  1. சி.பி.எம்: உங்களது அரசியல் அடையாளமாக கம்யூனிசம் தொடரும்வரை எங்களது விமர்சனங்களும் எதிர்வினைகளும் தொடரும்!



 ==================================================

Thursday, October 14, 2010

யெச்சூரி: யோக்கியன் வாரான் சொம்பெடுத்து உள்ளே வை!

கடல் கொள்ளையைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? கடலின் மீது மிதந்துவரும் மேலை நாட்டுக் கப்பல்களின் மீது ஆப்பிரிக்க-சோமாலியர்களின் நடவடிக்கையை நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தியப் பெருங்கடலையும் வங்காள விரிகுடாவையும் இன்னபிற மூன்றாம் உலக நாடுகளின் கடல் பகுதிகளையும் வளைத்து மீன்பிடிக் கொள்ளை நடத்திவரும் ஏகாதிபத்திய நிறுவனங்களைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். உண்மையான கடல் கொள்ளை என்பது இதுதான்.

மீனவர்களின் மீன்பிடி கடல்தூரங்களுக்கு வரம்பிட்டுவிட்டு பன்னாட்டு பகாசூர நிறுவனங்களுக்கு கடல் வளத்தைத் தாரைவார்த்திருக்கும் துரோக ஒப்பந்தங்கள் ஒரு புறம் மறுகாலனியத்தின் அடையாளமாக இருக்க, சேது சமுத்திர திட்டம் இந்திய மக்களுக்கு, இதுவரை காணாததொரு இன்பலோகத்தை வழங்கவிருப்பதாகக் கூவி வருகிறார்கள், ஓட்டுப் பொறுக்கிகள்.

பொதுத்துறை தனியார் மயமாக்கலையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும், காடுகள், மலைகள், வனங்கள் என அனைத்தையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு உடமையாக்குகின்ற திட்டங்களையும், “தேசத்தின் வளர்ச்சி” என்று மதிப்பிம் ஓட்டுப் பொறுக்கிகள் சேது சமுத்திரத் திட்டத்தை வேறெப்படி மதிப்பிடுவார்கள்?

மறுகாலனியாக்கத் திணிப்புக்குப் பிறகு சேது சமுத்திர திட்டம் ஒரு அரசியல் திட்டமாக மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எண்ணற்ற சேதுசமுத்திர நாயகர்கள் தமிழக அரசியல் அரங்கில் முடிசூடிக்கொண்டனர். கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ என மாநிலக் கட்சிகளும் காங்கிரசு, பா.ஜ.க. பெருச்சாளிகளும் கூட சேதுசமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கு பாடுபட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள்.

இத்திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில்தான் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அடுத்துவந்த தேர்தல்களில் ‘இந்துக்களின் எழுச்சி’யை உருவாக்குவதற்கு வேறெந்த முகாந்திரமும் கிடைக்காததால், சேதுசமுத்திர திட்டம் தொடங்கப்பட்டு பல நூறு கோடிகள் கடலுக்கடியில் கொட்டப்பட்டுவிட்ட பிறகு, திடீரென பா.ஜ.க. பரிவாரங்களுக்கு நினைவில் உதித்ததுதான் ‘ராமர் பாலம்’!

கடலுக்கு அடியில் தென்பட்ட அந்த மணல் திட்டை அகற்றும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கையில், “அது ராமபிரான் இலங்கைக்குச் சென்று தன் பொண்டாட்டியைக் கூட்டிவருவதற்காக கட்டிய பாலம், அது இந்துக்களின் வரலாற்றுச் சின்னம், அதனை ஒருபோதும் இடிக்கக்கூடாது” என்று கூப்பாடு போட்டு அத்திட்டத்திற்குத் தடைகோரியது, சங்கபரிவார கும்பல்.

அங்கே ராமர் பாலமெல்லாம் கிடையாது, அது ஒரு மணல் திட்டு என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவித்த கருத்தை நிராகரித்த உச்சிக்குடுமி மன்றம் (உச்சநீதி மன்றம்) இராமாயணத்திலும் இந்துக்களின் நம்பிக்கைகளிலும் ஆதாரம் பொதிந்திருப்பதாகக் கூறி அத்திட்டத்திற்கு மோசடியாகத் தடைவிதித்தது. உண்மையைத் துணிவுடன் சொன்ன ‘குற்றத்திற்காக’ அந்த புவியியல் வல்லுநர்களும் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

உச்சநீதிமன்றம் அரசின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்று சில நாட்களுக்கு முன்பாக சாமியாடிய மன்மோகன், சேது சமுத்திரத் திட்டத்தில் உச்சநீதிமன்றம் இழைத்த அநீதிக்கு எதிராக வாய்திறக்கவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தினைத் தொடங்கி கடலுக்கடியில் செலவழிக்கப்பட்ட பலநூறு கோடிகள் காந்தி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டன!  வேறெந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சியின் தலைவர்களும் கூட, இந்த நீதித்துறை அயோக்கியத்தனம் பற்றி கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், போலிகம்யூனிச தலைவர்களில் ஒருவரான அண்ணன் யெச்சூரி, உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையும் தீர்ப்பும் சரியானது என்றும் அதனையொட்டி மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிட முடிவெடுத்ததும் சரியானதுதான் என்றும் அருள்வாக்கு அளித்தார். (ஆதாரம் THE HINDU - 22'October-2007). 



இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை, காஞ்சிக் கிரிமினல் ஜெயேந்திரன், சங்கரராமன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட போது கூட, அவன் கைது செய்யப்பட்டது தவறு என்று NDTV-யில் தீர்ப்பு சொன்னவர்தான் இந்த யெச்சூரி. சமீபத்தில் வெளியான அயோத்தி தீர்ப்பு குறித்து கருத்து சொல்லுகையில், அலகாபாத் நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பைக் கண்டிப்பதற்கு பதில், உச்சநீதிமன்றம் சரியான நீதியை வழங்கும் என்ற மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் திணிக்கும் முகாந்திரத்தில்தான் பேசிவருகிறார்கள் ‘மார்க்சிஸ்டு’கள்.

ஏகாதிபத்திய-மறுகாலனியாக்க ஆதரவு நடவடிக்கைகளில் பா.ஜ.க.வோடு அரசியல் ரீதியில் உடன்பட்டிருக்கும் போலிகம்யூனிஸ்டுகள், இந்துமத வெறி நடவடிக்கைகளில் கலாச்சார ரீதியில் உடன்பாடு கொண்டிருப்பதை நாம் பல இடங்களில் பார்த்துவருகிறோம். சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை, அத்திட்டத்தின் அரசியல் தன்மை ஏகாதிபத்திய நலனை முன்னிறுத்துவதையும், அத்திட்டத்தின் மீதான தடையானது கலாச்சார ரீதியில் இந்துவெறி பயங்கரவாதத்தை முன்னிறுத்துவதையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

இதில் உண்மையான கம்யூனிஸ்டுகள் என்ன விதமான போராட்டங்களை முன்வைக்க முடியும்? இருதரப்புக்கும் எதிரான நடவடிக்கைகளைத்தான் முன்வைக்க வேண்டும். இவ்விரு தரப்பையும் அம்பலப்படுத்தும் விதமாகத்தான் அரசியல் முழக்கங்களை எழுப்ப வேண்டும். ஆனால், இரு தரப்பையும் மாறி மாறி நியாயப்படுத்தும் விதமாகப் பேசிவரும் ‘மார்க்சிஸ்டு’களின் போலித்தனத்தை என்னவென்பது?

சேது சமுத்திர திட்டம் இந்துக்களின் நம்பிக்கை என்ற முகாந்திரத்தில் தடை செய்யப்பட்டதை ஆதரித்து கருத்து சொல்லும் அண்ணன் யெச்சூரி, மறுபுறம் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி மத்திய அரசை வலியுறுத்துவதாகவும் பேசுகிறார். சேது சமுத்திர திட்டம் வந்தால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்று முழங்குகிறார். யெச்சூரியின் இந்த மூடத்தனமான பேச்சுக்கு மயங்கி தமிழகத்திலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள், தமிழக டைஃபியின் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு உண்ணாவிரதப் போராட்ட நாடகம் ஒன்றும் நடத்தப்பட்டது.


இந்த நாடகத்தை முடித்துவைத்து யெச்சூரி ‘முழங்கிய’ விதத்தையும், ராமர் பாலம் என்ற கற்பனைக்காக சேதுக்கால்வாய்த் திட்டம் முடக்கப்பட்டதை ஆதரித்துப் பேசிய மறுபக்கத்தையும் எண்ணிப்பார்க்கையில் மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. ஆனால், யெச்சூரிகளுக்கு இப்படி இரட்டை நாக்குகளுடன் பேசித்திரிவதில் எந்தக் கூச்சமும் ஏற்பட்டதில்லை. கம்யூனிச முகமூடியணிந்து கொண்டு ஏகாதிபத்திய சேவையாற்றிவரும் ‘மார்க்சிஸ்டு’கள் எதற்காக வெட்கப்பட வேண்டும். இவர்களது பேச்சில் செயற்கையாக வழியும் புரட்சிகர சவடால்களை உண்மையென்று நம்பி ஏமார்ந்து திரியும் அப்பாவி இளைஞர்கள்தான் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்கள்.

Sunday, October 10, 2010

வேதாந்தா: டோங்கிரியா கோண்டு பழங்குடிகளின் வீரமும், தூத்துக்குடி சுய உதவிக்குழுக்களின் துரோகமும்!!

பிரிட்டனைத் தலைமியிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம், ஒரிசாவில் உள்ள 40 கிலோமீட்டர் நீளமுடைய நியம்கிரி மலையை விழுங்கி, அதனடியில் புதைந்துள்ள பாக்சைட் தாதுப்பொருளையும் முற்றாகச் சுருட்டி எடுத்துக்கொள்ள மத்திய அரசுடன் ஒப்பந்தமிட்டுள்ளது. தொடக்கம் முதலாகவே அந்நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமைந்து எதிர்த்து வருகின்றனர், அம்மலைகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் டோங்கிரியா கோண்டு இன பழங்குடியின மக்கள்.

அப்பழங்குடியினரை மீறி அம்மலையில் கால்பதிக்க வேதாந்தாவால் முடியாத காரணத்தால், அரச பயங்கரவாத போலீசு படைகளைக் கொண்டு துப்பாக்கி முனையில் அப்பழங்குடிகளை விரட்டியடித்துவிட துடித்துக்கொண்டிருக்கின்றன, மத்திய-மாநில (ஒரிசா) அரசுகள். நிதியமைச்சராக இருந்து அந்நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு பல இலட்சம் கோடி டன் பாக்சைட் தாதுப்பொருளைச் சுருட்டிக்கொள்ள ‘சட்டப்படி’ அனுமதியளித்த ப.சிதம்பரம், இப்போது உள்துறை அமைச்சராக மாறி அந்த ஒப்பந்தத்தை நிலைநிறுத்த போலீசு-இராணுவ படைகளுடன் கொலைவெறியோடு அலைகிறார். இந்த நிறுவனத்தில் இயக்குநர்களுள் ஒருவராகப் பணியாற்றியவர்தான் இந்த சிதம்பரம் என்பது கூடுதல் தகவல்.

அந்நிறுவனத்தினை எதிர்த்தும், அரசு அந்நிறுவனத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை கைவிடக் கோரியும் கடந்த சில ஆண்டுகளாக டோங்கிரியா கோண்டு பழங்குடி மக்கள் போராடிவருகின்றனர். ஓட்டுக் கட்சிகளும், பத்திரிக்கைத் துறையும், நீதித்துறையும் முற்றாகக் கைவிட்ட பிறகும் உறுதி குலையாமல் அம்மக்கள் பல கட்ட போராட்டங்களை மாவோயிஸ்டுகளின் வழிகாட்டுதலுடன் மேற்கொண்டனர். ஹிமான்சுகுமார், அருந்ததிராய், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிவுஜீவிகள் மத்திய அரசின் அயோக்கியத்தனத்தையும் போடப்பட்டுள்ள மோசடி ஒப்பந்தங்களையும் அம்பலப்படுத்தி பேசியும் எழுதியும் வந்தனர்.

மத்திய அரசின், நீதித்துறையின் புனித முகமூடிகள் கிழிந்து அவற்றின் கோரமுகம் அம்பலமாகத் தொடங்கியதும், வேறு வழியின்றி சுற்றுச்சூழலுக்குக் கேடு என்ற முகாந்திரத்தில் வேதாந்தா அந்த பாக்சைட் கணிமத்தை வெட்டியெடுப்பதற்கு மட்டும் தடைவித்திருக்கிறது, சுற்றுச் சூழல் அமைச்சகம். இந்த வெற்றி முழுக்க முழுக்க கோண்டு இனப் பழங்குடி மக்கள் போராடிப் பெற்ற வெற்றியாகும். இதில் மத்திய அரசின் கரிசனமோ, பொறுப்புணர்வோ கிஞ்சித்தும் கிடையாது. வேறெந்த ஓட்டுக் கட்சியும் அம்மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. அனைத்து கட்சிகளும் வேதாந்தாவுக்கு வாலாட்டும் நாய்களாக மாறியிருந்தன; இதில் வியப்பேதும் இல்லை.

இது வேதாந்தா என்ற பன்னாட்டு பகாசூர கம்பெனியை எதிர்த்து டோங்கிரியா கோண்டு பழங்குடிகள் சாதித்த வெற்றிக் கதை. அதே வேதாந்தாவுடன் தொடர்புடைய தமிழகத்து நிகழ்வு ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரங்கேறியது; அதனைப் பற்றியும் பார்ப்போம்.



வேதாந்தாவின் கிளை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாமிர உருக்கு ஆலை ஒன்று தூத்துக்குடிக்கு அருகில் செயல்பட்டு வருவது நாம் அறிந்ததே. அந்நிறுவனத்தின் தலைவர், சுமார் 800 கோடி ரூபாய் கலால் வரி ஏய்ப்பு குற்றத்திற்காக கலால்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்தான். அந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியது என்றும் அது செயல்படுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும் தடைவிதிக்கக் கோருகின்ற வழக்குகள் நடைபெற்றுவந்தது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்நிறுவனம் உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக, இந்தத் தடைக்கு ஒரு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இதற்கிடையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக திட்டமிட்டு இறக்கிவிடப்பட்டுள்ள சில தன்னார்வக் குழுக்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களைத் திரட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலம் சென்று ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஆலையும் தொடர்ந்து இயங்க வழிசெய்ய வேண்டும். ஏனெனில் அந்நிறுவனம்தான் தங்களது வாழ்க்கைக்கே ஆதாரமாக விளங்கிவருகிறது, என்றெல்லாம் முறையிட்டிருக்கின்றனர்.

பன்னாட்டு நிறுவனங்களாலும் இந்தியத் தரகுமுதலாளிகளாலும் சுற்றிவளைத்து சுரண்டப்படும் ஏழை எளிய மக்கள் வாழ்விழந்து திண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், பொருளாதார உதவிகளை வழங்குகின்ற அமுதசுரபி என்ற தோற்றத்துடன் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதுதான் இந்த சுய உதவிக் குழு திட்டங்கள். பொருளாதார ரீதியாக உதவிகள் வழங்குவதாகக் காட்டிக்கொண்டாலும் அதன் உள்ளீடாக ஏகாதிபத்திய அரசியல் நுட்பமாகப் புகுத்தப்பட்டு வந்திருக்கிறது. அரசாலும் ஓட்டுக்கட்சிகளாலும் நிர்வகிக்கப்பட்டு வந்த இக்குழுக்கள், இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளாகச் செயல்படும் என்.ஜி.ஓ-க்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இக்குழுக்களுக்கு பொருளாதார அடையாளத்தை மட்டுமே அரசும், ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் வழங்கிவருகின்றன. அதில் பங்கெடுத்துக்கொண்டிருக்கக் கூடிய பெண்களும்கூட அவ்வாறுதான் நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அதன் அரசியல் தன்மை மிகவும் அபாயகரமானது என்று நக்சல்பாரி புரட்சியாளர்கள் மட்டும் தொடக்கம் முதலாகவே அடையாளப்படுத்தி வருகின்றனர். உழைக்கும் பெண்களை இந்த சுய உதவிக் குழுக்களைப் புறக்கனித்து வாழ வலியுறுத்தி, அவர்களைப் போர்க்குணத்துடன் பயிற்றுவித்தும் வருகின்றனர். நாளெல்லாம் உழைத்தும் பொருளாதார ரீதியாக நாம் முடங்கியிருப்பதற்குக் காரணம் இந்த ஏகாதிபத்திய கைக்கூலி அரசுதான். எனவே, இந்த அரச கட்டமைப்பை உடைத்து நொறுக்கி அனைவருக்குமான ஜனநாயகத்தை உருவாக்குகின்ற புரட்சிகர போராட்டங்களின் மூலமாகத்தான் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் விடுதலை பெறமுடியும்; இதுபோன்ற, ஏகாதிபத்தியத்திடம் ‘நிதியுதவி’ பெற்றுத்தரும் என்.ஜி.ஓ.க்களால் அல்ல; என்பதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துவருகின்றனர் புரட்சியாளர்கள்.

இதனை நாம் அதீத கற்பனையோடு சொல்வதாகவும், என்.ஜி.ஓ.க்கள் மக்கள் நலன் காப்பவை என்றும் சிலர் அடித்துக் கூறுகின்றனர். சுய உதவிக் குழுக்களில் பங்குபெறாமல் பெண்கள் முன்னேற முடியாது என்றும் சிலர் நம்புகின்றனர். இந்த பொருளாதார முலாம் பூசப்பட்ட கவர்ச்சித் திட்டத்திற்குள் பொதிந்திருக்கக் கூடிய அபாயகரமான அரசியலைத்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக திரட்டப்பட்டிருக்கக் கூடிய மக்கள் கூட்டம் தெளிவாக நிரூபித்துக் காட்டுகிறது.

பல நூறுகோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை ஏய்த்துக் கொள்ளையடித்த அந்நிறுவனத்தை, சுற்றுச்சூழலுக்கு எக்கேடு நேர்ந்தாலும், அதனால் நீர், நிலவளங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் வீதிக்கு வந்தாலும் பரவாயில்லை, தமது தொழில் நடக்க வேண்டும், இலாபம் பெருக்க வேண்டும், என்று இந்திய சட்டத்தையும் நீதித்துறையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு சுரண்டிக் கொழுக்கும் அந்நிறுவனத்தை, தமது வாழ்க்கைக்கே ஆதாரமாகக் கருதி, அதன் பாதிப்புகளை சந்திக்கப் போகின்ற மக்களே பிதற்றுகின்ற அளவுக்குத் தயாரிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி மக்கள் தயாரிக்கப்பட்டிருப்பதற்கு கனிசமான பங்கு நமது தமிழகத்து ஓட்டுக் கட்சிகளுக்கும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் திரட்டப்பட்ட பெண்கள் மத்தியில் சில ஊராட்சி மன்றத் தலைவர்களும் அடக்கம் என்பதை நாம் நன்கு கவனிக்க வேண்டும்.

தி.மு.க., அ.தி.மு.க., போலிகம்யூனிஸ்டுகள் என அனைத்து கட்சிகளும் தமது மகளிர் அணியினரைக் கொண்டு பல்வேறு சுய உதவிக் குழுக்களைக் கட்டியமைத்து, அவற்றை இந்த ஏகாதிபத்தியக் கைக்கூலி என்.ஜி.ஓ.க்களின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கச் செய்திருக்கின்றனர். “செம்மலர் சுய உதவிக்குழு”, “ஜோதிபாசு சுய உதவிக்குழு”, “செங்கொடி சுய உதவிக்குழு”,  “ஜீவா சுய உதவிக்குழு” என்று புரட்சிகர தோற்றங்களுடன் கம்யூனிச துரோகிகளின் பெயர்களில் உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய எண்ணற்ற குழுக்கள் போலி கம்யூனிஸ்டுகளின் உபயமாக ஏகாதிபத்திய சேவையாற்றி வருகிறது.



ரிசாவின் டோங்கிரியா கோண்டு இனத்து மக்களுக்கும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி வாழ்ந்துவருகின்ற மக்களுக்கும் எதிரி ஒருவன் தான். எதிர்கொள்ளக் கூடிய பாதிப்புகளும் கூட கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவைதான். இருப்பினும் பழங்குடி மக்களின் தீரமிக்கப் போராட்டமும், தூத்துக்குடி மக்களின் போராட்டமும் சாராம்சத்தில் வேறுபட்டிருப்பதும், எதிரெதிராய் இருப்பதும்  எப்படி நிகழ்ந்தது?


மாவோயிசத் ‘தீவிரவாதி’களால் அணிதிரட்டப் பட்டிருக்கும் மக்களுக்கும், இதர ‘ஜனநாயக’ சக்திகளான ஓட்டுக்கட்சிகளால் பராமரிக்கப் பட்டிருக்கும் மக்களுக்கும் உணர்வு ரீதியாக உள்ள வேறுபாடுதான், இப்போராட்டத்தை எதிர்கொள்வதிலும் பச்சையாக வெளித்தெரிகிறது. சுருங்கச் சொன்னால் தேசப்பற்றுமிக்க புரட்சியாளர்களால் திரட்டப் படுகின்ற மக்கள் போராடுவதற்கும், தேசத் துரோகிகளான ஓட்டுப் பொறுக்கிகளால்  முடக்கிவைக்கப்பட்டிருக்கின்ற மக்கள் போராடுவதற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான்!


மாவோயிச பயங்கரவாதம் தேச நலனுக்கு எதிரானது என்று கூப்பாடு போடுகின்ற மன்மோகன்கள், புத்ததேவு பட்டாச்சாரியாக்கள், தேச பக்தர்களா, தேசத்துரோகிகளா என்பதை வரலாறு தெளிவுபடுத்தட்டும்!

நாம் சுய உதவிக் குழுக்கள் என்ற பெயரில் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் பெண்களை மீட்டெடுப்போம்! மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!! நன்றி!

===================================================

தொடர்புரைய பிற கட்டுரைகள்:




Friday, October 8, 2010

தெருநாய்ச் சண்டைகளும், அரசியல் ஓலங்களும்!

திருமண மண்டபங்களின் வெளியே வீசப்பட்டு கிடக்கும் எச்சில் இலைமேட்டின் மீது அந்தந்த பகுதியின் சொறிநாய்கள் சங்கமித்து சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். அச்சண்டையின் ஓலம் காதைப் பிளந்துகொண்டு அப்பகுதியின் அமைதியைக் கெடுத்து அனைவரது கவனத்தையும் அதன் பக்கம் குவித்துக்கொள்ளும். இந்த தெருநாய்ச் சண்டைகள் இல்லாத எச்சில் இலை மேடுகளே இருக்க முடியாது.

அதேபோல்தான் நமது நாடாளுமன்ற, சட்டமன்ற கூட்டத்தொடரின் போதும் தேர்தல் வேளைகளிலும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் லாவனி ஓலம் நாய்சண்டையை விடக் கேவலமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இவர்களுடைய ஏச்சும் பேச்சும், போலிச்சண்டைகளும் மக்கள் பிரச்சினை- களை திசைத்திருப்புவதற்குத்தான் பயன்படுகிறதேயொழிய அவற்றைத் தீர்ப்பதற்குப் பயன்படுவதில்லை. காங்கிரசு முதல் போலிகம்யூனிஸ்டுகள் வரை அனைத்து ஓட்டுப் பொறுக்கிகளின் அரசியல் சவடால்களும் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக நடத்தப்படுகின்ற நாடகங்களாகத்தான் இருக்கின்றன.

மக்கள் விரோதக் கொள்கைகள் அனைத்திலும் கூட்டாகப் பங்கெடுத்து, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் மீது வறுமையையும், பசியையும், பட்டினியையும் திணித்துவரும் இவர்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளைவிட ஒற்றுமைகளே ஏராளமாக இருக்கின்றன. அவ்வொற்றுமையை, மோசடியை, அயோக்கியத்தனத்தை மூடிமறைத்துக் கொள்ளும் வகையிலேயே ஓட்டுப் பொறுக்கிகள் இந்த நாய்ச்சண்டைகளை நடத்திக்கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு நாய்சண்டையை, நாடாளுமன்றத்திற்குள் கனிசமான எண்ணிக்கையில் ‘நாய்களை’க் கொண்டிருக்கும்  பா.ஜ.க. வரும் கூட்டத் தொடரில் தொடங்கவிருப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருக்கிறது.

சமீபத்தில் பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சுஷ்மா சுவராஜ் மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.)யை ஒருதலைப் பட்சமாகவும், எதிர்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கத்தோடும் பயன்படுத்திவருவதாகக் குற்றம் சாட்டினார். சீக்கியப் படுகொலையில் நேரடித் தொடர்புடைய காங்கிரசு ரவுடிகளான ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோர் மீதான விசாரனையை முடக்கி அவர்களைக் காப்பாற்றும், மத்திய புலனாய்வுத்துறை, அத்வானியையும் நரேந்திரமோடியையும் இன்னபிற பா.ஜ.க. தலைவர்களையும் விசாரனைக்கு அலைக்கழிப்பதாக அழுது அரற்றுகிறார், சுஷ்மா.

“அது மத்திய புலனாய்வுத்துறையாக அல்லாமல் காங்கிரசு புலனாய்வுத் துறையாகச் செயல்படுகிறது” என்று முறையிடுகிறார், பா.ஜ.க.வின் தலைவர் நிதின்கட்காரி. காங்கிரசுக்கும் மத்திய புலாய்வுத்துறையினருக்கும் எதிராக நரேந்திரமோடி ஒரு தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருப்பதாக வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள், இதர பா.ஜ.க. தலைவர்கள்.

சும்மாவா, இந்த மத்திய புலனாய்வுத்துறையின் மூலம் மன்மோகன் கொடுத்த நெருக்கடியின் காரணமாக அனுவிபத்து இழப்பீட்டு மசோதா மீதான பா.ஜ.க.வின் சவடால்களை முடக்கி அந்த மக்கள் விரோத மசோதா அனைத்து கட்சிகளின் ஆதரவோடும் வெற்றிபெற்றதே, இதுபற்றி பா.ஜ.க. உள்ளிட்ட எந்த ஒரு ஓட்டுப் பொறுக்கியும் மூச்சுகூட விடுவதில்லை.

பா.ஜ.க.வின் அரற்றல்கள் ஒருபுறமிருக்க, போலிகம்யூனிச கட்சியான ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் பிரகாஷ் காரத்தும், மத்திய புலனாய்வுத்துறையை காங்கிரசு அரசு தமது கட்சியின் யோக்கிய சிகாமணிகளைப் பழிவாங்குவதற்காக ஏவிவிட்டிருப்பதாக அழுதுபுலம்புகிறார். 400 கோடி லாவலின் ஊழலில் சிக்கிய கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராயி விஜயன் வேண்டுமென்றே பழிவாங்கப்படுவதாகப் புலம்புகிறார். மறுகாலனியாக்க அடியாளாகச் செயல்பட்டு நந்திகிராம மக்களை அரச பயங்கரவாதத்தை ஏவி நரவேட்டையாடிய புத்ததேவ் பட்டாச்சார்யா மீதான, பெயரளவிலான விசாரனைகளைக் கூட, காங்கிரசு பழிவாங்கும் நோக்கத்தோடு மேற்கொள்வதாக ஒப்பாறி வைக்கிறது, மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ.

இதர பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களான மாயாவதி, முலாயம்சிங், சிபுசோரன், ஜெயலலிதா உள்ளிட்ட ஏராளமானோர் மத்திய காங்கிரசு அரசு, சி.பி.ஐ-யை தமக்கு எதிராக ஏவி வஞ்சம் தீர்த்துக் கொள்வதாக முறையிடுகின்றன.

இப்படிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளையும் மீறியே தமது கட்சியும் தாமும் இந்த மக்களுக்காகத் தொண்டாற்றி வருவதாகவும், இதனை முறையாக தாம் எதிர்கொள்வதாகவும் மறுபுறம் யோக்கிய தோரணையில் சவடால்களையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களது அனைத்து புலம்பல்களும் தாம் விசாரிக்கப் படக்கூடாது என்பதிலிருந்துதான் வருகிறதேயொழிய தாம் குற்றமற்றவர்கள் என்ற நிலையிலிருந்து இவர்கள் பேசுவதில்லை.

மத்திய புலனாய்வுத்துறையின் அயோக்கியத்தனமான செயல்பாடுகள் குறித்து இவர்கள் வாய்திறந்து பேசிவருவது தமது பிரச்சினைகள், தமது தனிப்பட்ட பாதிபுகள்  என்ற வரம்பிற்குட்பட்டே இருந்துவருகிறது.  இதே மத்திய அரசும், சி.பி.ஐ-யும் வெகுமக்களைப் பாதிக்கின்ற வகையில் நடந்துகொள்ளுகின்ற போது, பெரும்பாண்மையான அப்பாவி மக்களுக்கு வெளிப்படையாகத் துரோகமிழைக்கும் போது இந்த ஓட்டுப் பொறுக்கி நாய்கள் வாய்திறப்பதே கிடையாது.

சீக்கியப் படுகொலைக் குற்றவாளிகளைப் பாதுகாத்து அநீதியிழைத்த மத்திய அரசைக் கண்டித்து ப.சிதம்பரத்தின் மீது செருப்பை வீசிய சீக்கிய இளைஞ்ர்  மீது போலீசு நாய்கள் ஏவிவிடப்படும்போது இந்த ஓட்டுப்பொறுக்கி நாய்கள் தத்தமது வால்களைச் சுருட்டி கால்களுக்கு இடையில் அடைத்துக்கொண்டு பம்மி வேடிக்கப்பார்த்து நின்றன. மத்திய அரசுக்கு எதிராக நியாயவாதம் பேசுகின்ற எந்த ஒரு ஓட்டுப்பொறுக்கியும் அந்த சீக்கிய இளைஞரைக் காப்பாற்ற முயலவில்லை.

ஒரே இரவில் பல்லாயிரம் பேர் பிணமக்கப்பட்ட போபால்  படுகொலை தொடர்பான  வழக்குகளில் மத்தியில் ஆட்சிபுரிந்த (காங்கிரசு, பா.ஜ.க., உள்ளிட்ட) அனைத்து ஆட்சிகளுமே இந்த மத்திய புலனாய்வுத்துறையை பொதுமக்களுக்குத் துரோகமிழைக்கும் வகையிலும், அமெரிக்க ‘ஆண்டை’யைக் காப்பாற்றும் வகையிலும்தான் பயன்படுத்தியது. குற்றவாளியை விசாரனைக் கூண்டில் கூட ஏற்றாமல் துரோகமிழைத்த சி.பி.ஐ, கூண்டிலேற்றப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களையும் மறைத்து அவர்களையும் தண்டனைகளிலிருந்து காப்பாற்றியது. இது தலைமுறைகளாக பாதிப்புகளைச் சுமந்துவரும் லட்சக்கணக்கான போபால் மக்களுக்கு மத்திய புலனாய்வுத்துறையும், மத்திய-மாநில அரசுகளும் சுமார் கால்நூற்றாண்டுகால அலைக்கழிப்புக்குப் பிறகு இழைத்த துரோகமாகும்.

இந்தத் துரோகம் குறித்து கேள்வியெழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கி, காங்கிரசு கயவாளிகளை அம்பலப்படுத்தும் விதமாகச் செயல்பட்ட ஒரேயொரு யோக்கியனின் பெயரை இந்த ஓட்டுப்பொறுக்கி பட்டியலில் காட்டுங்கள் பார்க்கலாம்! பா.ஜ.க., போலிகம்யூனிஸ்டு, திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட எந்தக் கட்சியின் தலைவனும் இதுபற்றி இன்றுவரை வாய்திறக்கவில்லை. ஏனெனில் இவர்கள் எல்லோரும் அமெரிக்கக் கொலைகாரன் ஆண்டர்சனின் விட்டையைத் தின்று வளர்ந்தவர்கள்தான்.

நந்திகிராமத்தில் புத்ததேவ் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு நூற்றுக்கணக்கான அப்பாவி விவசாயிகளைக் கொண்று புதைத்தது யாருக்காக? போபால் படுகொலையை அரங்கேற்றிய அதே யூனியன் கார்பைடு (டௌ கெமிக்கல்ஸ்)-க்காகத்தான். பா.ஜ.க.வின் தலைவர்களும் காங்கிரசின் தலைவர்களும் இதே, நாசகார  டௌ கெமிக்கல்ஸின் வழக்குரைஞர்களாக வெளிப்படையாகச் செயல்பட்டவர்கள்தான். ஆக, ஆண்டர்சன் வீசிய எலும்புத்துண்டைச் சுவைக்காதவன் எவனும் இந்த நாடாளுமன்றத்திற்குள் இல்லாத காரணத்தினால்தான், போபால் மக்களுக்கு சி.பி.ஐ. இழைத்த துரோகம் குறித்துப் பேச ஆளில்லாமல் போய்விட்டது.

எனவே, இந்த நாடாளுமன்றத்தில் உழலும் ஓட்டுப்பொறுக்கிகளின் ஓலம், அது பா.ஜ.க.வாக இருக்கட்டும் ‘மார்க்சிஸ்ட்’-ஆக இருக்கட்டும் அனைத்துமே மக்கள் பிரச்சினைகளை மறைப்பதற்கான கூப்பாடுகள்தான். மக்களாகிய நாம் இந்த ஓலத்தை தெருநாய்ச் சண்டைகளை விடக் கீழானதாகக் கருதி புறக்கனிக்க வேண்டும்.

 தெருநாய்களின் ஓலத்தைச் சகித்துக்கொள்ள முடியாத அமைதி விரும்பிகள் கல்லெடுத்து நாய்களைத் துரத்தியடிப்பதைப் போல, இந்த ஓட்டுப்பொறுக்கி நாய்களையும் வீதிகளில் அடித்துத் துரத்தவேண்டும்.

அப்போதுதான் தம்மை அழுத்தி வதைக்கின்ற உண்மையான பிரச்சினைகள் அனைத்தும் மக்களால் உணர்ந்து கொள்ளப்படும். அவற்றுக்கெதிராக மக்கள் அணிதிரள்வதற்கும் வழியமைத்துக் கொடுக்கும். இந்த இழிவான சமூக அமைப்பு உடைத்து நொறுக்கப்பட்டு உண்மையான ஜனநாயகம் கட்டியெழுப்பப்படும். நன்றி!


==================================================



Wednesday, October 6, 2010

எந்திரனை எதிர்ப்போம்; தினமணியின் கட்டுரையினை மறுமதிப்பீடு செய்வோம்!

கருணாநிதி குடும்பத்தின் மீடியா மேலாதிக்கம் ஆக்டோபஸ் கரங்களாக தென்னிந்தியாவை வளைத்துப் பிடித்திருக்கின்றன. சினிமாத்துறைக்கே உரிய கழிசடைத்தனங்களையும் சமூகஅக்கறையின்மையையும் தமது மூலதனத்தினால் மேலும் வளர்த்துவிடுகின்ற செயலையே கருணாநிதியின் மகள் வழியில் வந்த சன் குழுமமும், மகன்கள் வழியில் வந்த ரெட்ஜெயண்ட், க்ளவ்ட் நைன் உள்ளிட்ட திரைப்பட நிறுவனங்களும் செய்துவருகின்றன.

சினிமாத்துறையில் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளவும் போட்ட மூலதனத்தை பன்மடங்காக திரும்பச் சுருட்டிக்கொள்ளும் வகையிலும் அவர்களுடைய குடும்பத் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் மக்கள் செவிவழி நுழைந்து சிந்தைக்குள் சங்கு ஊதிக்கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு இப்போது அரசுத்துறையும் எந்திரனின் வசூலுக்கு பங்கம் வராமல் பாதுகாக்கும் பொருட்டு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

150 கோடி மூலதனம் போட்டு 600 கோடி சுருட்டவுள்ள சமூகவிரோத கும்பலை வனிக ரீதியாகப் பாதுக்காப்பதற்காக, திருட்டு சி.டி. விற்கும் ‘சமுக விரோதி’களை  ஒழிக்கவேண்டுமாம். அதற்காக  குண்டாந்தடிகளைத் தூக்கிக்கொண்டு போலீசு நாய்கள் தமிழகமெங்கும் பாய்ந்து செல்கின்றன. தன்னுடலை விற்று தன்பசியைப் போக்கிக்- கொள்ளும், சாதாரணமாக வீதியில் அலைகின்ற விபச்சாரிகளைப் பிடிப்பதற்கு சட்டம் இருக்கிறது; உலக அழகியை வைத்து ஆபாச படமெடுத்து இளைஞர்களின் சிந்தையைக் கெடுத்துவரும் சினிமா விபச்சாரகர்களுக்கு  தொழிலதிபர் என்ற அந்தஸ்து,  தொழில் பாதுகாப்பு! இதுதான் இந்திய ஜனநாயகம்! இதுதான் சட்டத்தின் ஆட்சி!!

இதுபோன்ற கலாச்சார படையெடுப்பை இவர்கள் மக்கள் மீது தொடுத்திருப்பதற்கு இரண்டு அடிப்படையான காரணங்கள் உள்ளன. ஒன்று மூலதனத்தைப் பெருக்கிக்கொள்ள இரசிகர்களின் உணர்ச்சிகளை காசாக மாற்றி பிக்பாக்கெட் அடித்துக்கொள்வது. மற்றொன்று மக்களை, குறிப்பாக இளைஞர்களை சிந்தைரீதியாகச் சீரழிப்பது. எந்திரனின் ரசிகர்கள் இப்போது கிட்டத்தட்ட மனிதத் தன்மையை இழந்த எந்திரங்களாகவே வீதியில் திரிகின்றனர். ஆக, எந்திரனை வனிக ரீதியிலான பிரச்சினையாக மட்டும் சுருக்கிப் பார்ப்பதைவிட, அதன்  கலாச்சார ரீதியிலான பாதிப்புகளையும் இணைத்தே அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது.

(எந்திரன் குறித்த கூர்மையான, விரிவான விமர்சனக் கட்டுரையை வினவு இனையதளம் வெளியிட்டிருக்கிறது. எந்திரன்: படமா, படையெடுப்பா! என்ற அந்த கட்டுரையை தோழர்கள் அவசியம் படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.)



இது ஒருபுறமிருக்கட்டும் இப்போது தினமணியின் கட்டுரைக்கு வருவோம்;

எந்திரனின் வனிக ரீதியிலான மேலாதிக்கத்தை மிகவும் சரியாகவே அடையாளப்படுத்தியிருக்கிறது, தினமணியின் கட்டுரை. கருணாநிதி குடும்பத்தின் ஊடகத்துறை அயோக்கியத்தனங்களையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார், கட்டுரையாளர் சமஸ். ஆனால் அதற்குள் நுட்பமாக ஜெமினி எஸ்.எஸ்.வாசன் வகையறாக்களின் தொழில் (அ)தர்மத்தையும் சேர்த்து புனிதப்படுத்தியிருக்கிறார்.

எந்திரன் ஒரு ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தின் திணிப்பு என்றால், ஜெமினி வாசனின் பிரம்மாண்டங்கள் பார்ப்பனக் கலாச்சாரத்தின் வெளிப்படையான திணிப்பாக இருந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவ்வையார் என்ற பெண்மணியை பார்ப்பனப் பெண்மணியாகச் சித்தரித்து எடுக்கப்பட்ட ஔவையார் திரைப்படமாகட்டும், ஏனைய திரைப்படங்களாகட்டும் ஜெமினி பிலிம்சின் சேவை அன்றைக்கு பார்ப்பனியத்தின் ‘தேவை’யைத்தான் பிரதிபலித்தது. கே.பி.சுந்தராம்பாள் என்ற பெண்மணியை பார்ப்பனியத்தின் பிரச்சாரகராகவும் பெரியாருக்கு எதிராகவும் பயன்படுத்தினார் வாசன்.

எனவே, சன் குழுமத்திற்கு நேர்மறையாக ஜெமினி பிலிம்ஸ் உருவகப்- படுத்தப்படுவதை ஏற்கமுடியாது. வாசனின் திரைப்பட சேவையை விட்டுத்தள்ளுங்கள், அவரது ஆனந்த விகடனின் யோக்கியதையை ஒரு கனம் யோசித்துப்பார்த்தால் எல்லாம் எளிதில் விளங்கும். ஜெயேந்திரன் கைதுக்கு சப்பைக்கட்டு கட்டிய ஆனந்தவிகடன் அதன் பார்ப்பன உணர்வைத்தான் வெளிப்படுத்திதே தவிர சமூக அக்கறையை அல்ல.

ஆகவே, ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கருணாநிதி குடும்பத்தின் ஏகபோகத்தை எதிர்க்கும் வகையிலும் தினமணி வெளியிட்ட கட்டுரை, ஜெமினி வாசனையும் அதனூடாக பார்ப்ப பண்பாட்டையும் மறைமுகமாக நியாயப்படுத்த முயலுவதை நாம் கவனிக்க வேண்டும். தினமணியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துக்கள் பா.ஜ.க.வின் சுதேசிக் கொள்கையிலிருந்துதான் வெளிவருகிறதேயொழிய, அதன் முற்போக்கு சிந்தனையிலிருந்து வரவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகளான நமக்கும் பா.ஜ.க., சங்கபரிவார கும்பலுக்கும் உள்ள அடிப்படையான முரண்பாடு இதுதான்.

பா.ஜ.க.வும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறது; ஆனால் அது ஏகாதிபத்திய கலாச்சாரத்தை மட்டுமே எதிர்க்கிறது; ஏகாதிபத்தியத்தை பொருளாதார ரீதியில் இங்கு வளர்க்கவே அது அனைத்து வகைகளிலும் முயலுகிறது. ஆனால் கம்யூனிச புரட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்தின் சுவடுகளே இங்கு எந்தத் துறையிலும் இல்லாமல் அழிக்கின்ற இலக்கோடு போராடிக்கொண்டிருப்பவர்கள்.

கருணாநிதியை  பதவிக்காக பார்ப்பனியத்தை பகைத்துக்கொள்ளாத துரோகியாகவே நாம் பார்க்கிறோம். ஆனால் பார்ப்பன அடிப்படைவாதிகள் இன்னும் அவரை திராவிட அடையாளத்தோடே பார்க்கிறார்கள். கருணாநிதியை பார்ப்பனிய வாதிகள் பெயரளவுக்கேனும் எதிர்ப்பதற்கான உண்மையான காரணம் இதுதான். மற்றபடி தினமணியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது சமூக அக்கறையிலிருந்து எழவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தை ஒழித்துவிட்டு பண்டைய பார்ப்பனிய பிற்போக்கு நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தை நிலை நிறுத்துவதுதான் சங்க பரிவார அமைப்புகளின் திட்டம். தினமணியின் எந்திரன் எதிர்ப்புக் கருத்துக்கள் இந்த அடிப்படையிலிருந்துதான் வந்திருக்கிறது.  

கலைகள் யாவும் மக்களுக்கே என்ற முழக்கத்தின் கீழ் போராடக்கூடிய முற்போக்காளர்களாகிய நாம், இந்த இரு முகாம்களையும் கலாச்சார ரீதியில் வீழ்த்த வேண்டிய அவசியத்தைப் பெற்றிருக்கிறோம். வீழ்த்துவோம்!


குறிப்பு: தினமணி கட்டுரை குறித்த எனது மேற்கண்ட கருத்துக்களில் மாற்றுக்கருத்துடைய தோழர்கள் அவசியம் தங்களது கருத்தை பின்னூட்டப் பகுதியில் பதிப்பித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

Tuesday, October 5, 2010

எடியூரப்பா: அடேங்கப்பா!......

தேசபக்தியும் தெய்வபக்தியும் இந்துக்களின் முன்னேற்றத்தையுமே இலட்சியமாகக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சர்வசாதாரண தலைவரா என்ன? இந்துக்களின் முன்னேற்றத்தைக் கொஞ்சம் சுருக்கி கன்னடர்களின் முன்னேற்றத்திற்காக ஒகேனேக்கல்லுக்குள் நுழைந்து ஓட்டுப் பொறுக்கி முதல்வரான கன்னடர்களின் பிதாவாயிற்றே!

இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா. மேற்கண்ட அனைத்து கொள்கைகளையும் நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளுகின்ற அரும்பணியைச் செய்துகொண்டிருக்கிறார். இந்துராஜ்ஜியம் அமைக்கவிருப்பதாக வாஜ்பாய் முதல் கட்காரி வரை பேசிவருகிறார்களே, அந்த இந்துராஜ்ஜியத்தின் முன்னோட்டம்தான் கர்நாடகாவும் எடியூரப்பாவும்.

கர்நாடகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திராஜ்ஜியத்தின் சந்துபொந்துகளிலும் கூட அப்பட்டமாக மலிந்திருக்கிறது ஊழல். சுரங்க மாஃபியாக்களான ரெட்டி சகோதரர்கள் முதல் எடியூரப்பா வரை சங்கபரிவார அரசுகளின் அதிகார அடுக்கள் அனைத்தும் கரன்சியால் நிரம்பிவழிகின்றன.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் மறுப்பதற்கு இடமின்றி சந்திசிரித்து விட்டபடியால் இப்போது அதனை இல்லையென்று மழுப்பி நியாயப்படுத்துவதற்கு சட்டமன்றம் பயன்படுகிறது.  சட்டமன்றமும் நாடாளுமன்றமும் பங்கெடுக்காத ஊழல் எந்த நாட்டில் இருக்கிறது. இதுதான் முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் இலட்சனமாகும். மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தை ஊழல் பற்றி விவாதிப்பதற்காகவே ஏற்பாடு செய்திருக்கிறது கர்நாடக சட்டமன்றம். முடிவு நாம் இதுவரை அறிந்திராததாகவா இருந்துவிடப்போகிறது.

சட்டமன்றமும் நாடாளுமன்றமும் ஊழலின் பிறப்பிடமாக மட்டுமல்ல ஊழல் வழக்குகளை சந்தடியில்லாமல் அடக்கம் செய்துவிடக்கூடிய அரசியல் சுடுகாடாகவும் செயல்படுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்கள் மன்றத்தில் பேசமுடியாத விஷயமாக இது வளர்ந்துவிட்டது. பேசினால் செருப்பும் துடைப்பமும் முகத்தைப் பதம்பார்த்துவிடக் கூடிய அபாயமிருப்பதால் இவ்வழக்கு சட்டமன்றத்திற்குள் பாதுகாப்பாக தம்மைப் பதுக்கிக்கொள்ள முயலுகிறது. சட்டமன்றத்திற்குள் உள்ள ஓட்டுப்பொறுக்கிகளின் யோக்கியதையும் அதற்கொரு சாதகமான அம்சமாகத்தானே இருக்கிறது! ஒரு ஓட்டுப்பொறுக்கி மற்றொருவனைப் பார்த்து குற்றம் சாட்டக்கூடிய யோக்கியதையோடா இருக்கிறான். ஊழலில் கூட்டாகப் பங்கெடுத்துவிட்டு அரசியல் மேடைகளில் மட்டும் எதிரெதிர் மேடைகளிலிருந்து குரைத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகள் ஒருவனையொருவன் தண்டித்துக் கொள்வான் என்று எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

காங்கிரசு, பா.ஜ.க., போலிகம்யூனிஸ்டுகள் போன்ற தேசியக் கட்சிகள் முதலாக அந்தந்த மாநிலக் கட்சிகள்வரை ஊழலில் பங்கெடுக்காத கட்சி எது? இந்த ஓட்டுப்பொறுக்கிச் சாக்கடையில் சங்கமித்திருப்பதால்தான் அனைத்து கட்சிகளுக்கும் ஊழல் ஒரு பொதுவான அம்சமாக வளர்ந்திருக்கிறது. இனி வேலிக்கு சாட்சி சொல்ல வரும் இந்த ஓட்டுப்பொறுக்கி ஓணான்களின்  நாடகங்களைத் தொடர்ந்து சில நாட்களுக்கு நாம் பார்க்கலாம்!

பூனை கருவாட்டை வெறுத்துவிடுமா, இந்த ஓட்டுப்பொறுக்கி நாய்கள் ஊழல் பிஸ்கட்டுக்கு மயங்காமல் இருந்துவிடத்தான் போகிறார்களா? பரிசீலிப்போம் நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மதிப்பீடுகளை.

புறக்கனிப்போம் இந்த ஊழல் அரசியல் கட்டமைப்பின் அடையாளமான நாடாளுமன்றத்தையும் அதனைப் புனிதப்படுத்துவதற்காக நடத்தப்படும் தேர்தல் நாடகங்களையும்! நன்றி!!

=================================================

Wednesday, September 29, 2010

அநீதி மன்றங்களின் வரலாற்றுப் பக்கங்களும் வரவிருக்கும் அயோத்தி தீர்ப்பும்!

த்வானி தலைமையிலான சங்கபரிவார வானரங்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்கிறவரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த வழக்கின் தீர்ப்பு நாளை (29.09.2010)வழங்கப்படவிருக்கிறது. "தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும் அதனை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டு அமைதிகாக்க வேண்டும்" என்று வரவிருக்கும் தீர்ப்பின் யோக்கியதையை முன்னறிவித்திருக்கிறார் நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்.


இந்த வலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு ஒருபுறமிருக்கட்டும், இதுபோன்ற மதவெறிப் பயங்கரவாதப் பிரச்சினைகள் தொடர்ப்பான விசாரனைகளில், நமது தேசத்தின் ஜனநாயகத்தூண்களில் ஒன்றான நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருப்பதன் வரலாறு ஒன்றும் இருக்கிறது. அவற்றை ஒருமுறை நினைவுபடுத்திப் பார்த்தாலே வரவிருக்கும் தீர்ப்பின் தன்மை எளிதாக விளங்கும்.


இந்துக்கள் மத்தியில் கலவர-கரசேவகர்களை உற்பத்தி செய்யும் நோக்கத்தோடும், பாபர் மசூதி இடிப்புக்கு ஆள்பிடிக்கும் நோக்கத்தோடும் அத்வானி குஜராத்தில் தொடங்கிய (த்)தயாத்திரை உலகறிந்தது. அந்த ரதயாத்திரையின் முடிவிலேயே, அதுவும் அதனை நடத்திவந்த அத்வானியின் தலைமையிலேயே பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஆனால், அவ்வழக்கிலிருந்து, இதே அலகாபாத் நீதிமன்றத்தால் அத்வானி விடுவிக்கப்பட்டார். இந்த நீதிமன்றம்தான் நாளை "பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்" என்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது!


அத்வானியின் பாபர் மசூதி இடிப்பு நடவடிக்கை ஒருபுறமிருக்கட்டும், அதற்கு முன்னதாக அவர் நடத்திய ரதயாத்திரை நெடுகிலும் திட்டமிட்டு அவரால் உருவாக்கப்பட்ட கலவரங்கள், உயிர்ப்பலிகள் என்று ஏராளமான ரத்தசாட்சியங்கள் இருந்தும் அவற்றுக்கெல்லாம் வழக்கும் கிடையாது, வாய்தாவும் கிடையாது.


தொன்னூறுகளின் துவக்கத்தில், தனது பத்திரிக்கையானசாம்னாவின் மூலம் வெறியூட்டி 2000-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நரவேட்டையாடிய, பம்பாய் கலவரத்தின் நாயகன் பால்தாக்கரே, நமது ஜனநாயக அரசின் சட்டத்தால் சீண்டப்படவேயில்லை. ஆனால், அக்கலவரத்திற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட இசுலாமிய பயங்கரவாத குண்டுவெடிப்புகள் வழக்காடப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.



குஜராத்தின் முதல்வரான நரமமிசமோடியிடம் சி.பி.. விசாரனை நாடகங்களை நடத்துவதும், அந்த போலியான விசாரனைக்குக் கூட நேரில் ஆஜராவதிலிருந்து அடிக்கடி ஜகாவாங்கிக் கொண்டிருக்கும் மோடியையும் நாம் எளிதில் மறக்கவியலாது. போலி என்கவுண்டர் புகழ் அமித்ஷா (குஜராத்தின் மோடி அரசாங்கத்தின் அமைச்சர்) வுடனான வழக்கு விசாரனை என்கிற விளையாட்டாகட்டும் அனைத்தும் ஒரு கேளிக்கையைப் போல நிகழ்த்தப்படுகின்றன.


பெண் சாமியார் பிரக்யாசிங் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கூலிப்படைக் கும்பல் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரனைகளைக் கொஞ்சம் நுனுகிப்பார்த்தால், நீதிமன்றத்தின் இந்துத்துவப் பாசம் அப்பட்டமாகத் தெரியும்.


ஆனால் மறுபுறமோ இசுலாமியராகப் பிறந்துவிட்ட காரணத்தால், போலி என்கவுண்டரின் மூலமாகவும் போலி வழக்குகளின் மூலமாகவும் தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் எத்தனையோ பேர். இததான் இந்த நீதிமன்றங்களும் சட்டத்தைப் பாதுகாக்கின்ற அரசும் போலீசும் நீதிக்கு எதிராக அநீதியை பிரயோகித்துக்கொண்டிருக்கும் உண்மையான வரலாறு!


பொதுவாக இந்துவெறி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நீதிமன்றமே கவசமாக இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஏகாதிபத்திய நலனுக்காக முன்வைக்கப்பட்ட சேதுக்கால்வாய்த் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, மக்கள் வரிப்பணம் சில நூறு கோடிகள் கடலுக்கடியில் கொட்டப்பட்டுவிட்ட பிறகு, கடலுக்கடியில் இருந்த மணல்திட்டைராமர் பாலம்என்று இந்த வானரங்கள் கூப்பாடு போட்டது உங்களுக்கு நினைவிலிருக்கலாம். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தவுடன், அந்த திட்டத்திற்குத் தடைவிதித்த உச்சநீதிமன்றம், தமது தடையாணைக்கு ஆதாரமாக எதைக் காட்டியது தெரியுமா, நண்பர்களே? துளசிதாசர் ராமாயணத்தையும், வால்மீகி ராமாயணத்தையும்தான். "அது ராமர் பாலமோ, ஆதாம் பாலமோ அல்ல அது ஒரு மணல் திட்டு" என்று ஆய்வு செய்து அறிவித்த புவியியல் வல்லுநர்கள் தெரிவித்த அறிவியல் சார்ந்த கருத்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, உச்சநீதி மன்றத்தாலும் இந்திய அரசாலும் பழிவாங்கப்பட்டார்கள்.


(இதைப் படிக்கும்மார்க்சிஸ்ட்தோழர்கள் கவனத்திற்கு "ஆதாம் மணல் திட்டுக்கள் பற்றிய வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிவியல் கழகத்தின் கருத்துக்களை அரசு மறுபேச்சின்றி திரும்பப் பெற்றது மிகவும் சரியான நடவடிக்கையே" என்று உங்கள் கட்சியின் மாபெரும் தலைவர் யெச்சூரி 22 - அக்டோபர்’07 ஹிந்து பத்திரிகையின் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.)


ஆக, இந்திய நீதித்துறையின் யோக்கியதை இவ்வாறகத்தான் வரலாறு முழுக்க பதிவாகியிருக்கிறது. மதவெறி நடவடிக்கைகளில் மட்டுமல்ல, மறுகாலனியாக்க நடவடிக்கைகளிலும் இந்த நீதித்துறையும் அரசும் அநீதிக்குத்தான் துணைபோயிருக்கின்றனவேயொழிய நீதிக்கும் அவர்களுக்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை.


போபால் வழக்கு விசாரனையில், நீதிமன்றமும், மத்திய அரசும், மத்திய புலனாய்வுத்துறையும் கொலைகாரன் ஆண்டர்சனுக்கு செய்த உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்த தொடர் துரோகங்களையும் ஒரு கனம் நினைத்துப்பார்த்தாலே, இந்த நீதிமன்றங்களின் உண்மைநிலை, வஞ்சகத்தன்மை எளிதில் புரியும். இதே நீதிமன்றங்கள்தான் மத்திய அரசு தண்டகாரன்ய ப்ழங்குடியின மக்களின் மீது நடத்திவரும்காட்டு வேட்டைஎனும் உள்நாட்டுப் போரை ஆதரித்து கருத்துக்கள் தெரிவித்திருக்கின்றன.


இதுமட்டுமா, மேலவலவு முருகேசனை பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் தலையறுத்துக் கொண்ற சாதி வெறியர்களைக் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பெழுதியதும் இதே நீதிமன்றங்கள்தான். மகாராஷ்டிராவின் கயர்லாஞ்சியின் துயரத்தை யாரும் அத்தனை எளிதாக மறந்திருக்க முடியாது. அந்தக் கயர்லாஞ்சி வழக்கில் நீதிமன்றத்தின் அயோக்கியத்தனங்கள் அப்பட்டமான ஆதிக்கசாதி வர்க்கத்துக்கு சாதகமாக இருந்துவருகிறது. "பீயத்திண்ணுடா பறநாயே" என்று திருச்சியை அடுத்த திண்ணியம் என்ற ஊரில் வாயில் பீ திணிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவனுக்கு நீதிமன்றமும் தன்பங்குக்கு ஆதிக்க சாதி மலத்தை தீர்ப்பாக திணித்தது.


இந்தியாவின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றான நீதிமன்றம் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்புகள் ஒருசிலவற்றைத்தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இந்திய நீதித்துறையின் வரலாறே இதுபோன்ற பக்கங்களால்தான் நிரப்பப்பட்டுள்ளது. சட்டமும் நீதியும் ஆளூகின்ற வர்க்கத்தின் தன்மையைப் பிரதிபலிப்பது எதார்த்தமே. மதப் பிரச்சினையானாலும், சாதியப் போராட்டங்களானாலும், முதலாளித்துவ கொடூரங்களானாலும் இந்த நீதிமன்றங்களின் வர்க்கப்பாசம் ஒளிவுமறைவிற்கு இடமின்றி வெளிப்படையாக அம்பலப்பட்டு நிற்பதை நாம் பார்க்க முடிகிறது. இனியும் இந்த நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு நீதியை வழங்கும் என்று நம்பிக்கொண்டிருப்பதற்கு எந்த முகாந்திரமுமில்லை.


இந்த அநீதிமன்றங்களுக்கு எதிராக உண்மையான நீதியை நிலைநாட்டுவதற்கு மக்கள் சர்வாதிகார மன்றங்களை நாம் கட்டியமைக்க வேண்டிய காலம் நெருங்கிவருகிறது. ஒடுக்கப்பட்டு கிடக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்குச் சாதகமான நீதியை நாம் நீதிமன்றச் சுவர்களுக்குள் பெறமுடியாது, மக்கள் மன்றத்தின் முன்பாகத்தான், நடுவீதியில்தான் அவற்றை நாம் நிலைநாட்ட முடியும்.


அயோத்தி தீர்ப்பு கிடக்கட்டும், இந்த அயோக்கியத் தனங்களை முற்றாகத் துடைத்- தெறிகின்ற புரட்சிகர போராட்டங்களை நோக்கி அணிதிரள்வோம்! நன்றி!

===============================================

தொடர்புடைய (அவசியம் படிக்க வேண்டிய) பதிவுகள்:

1. அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!! - அசுரன்

2. ராமனுக்கே மயிர் பிடுங்கிய அலகாபாத் நீதிமன்றம்! - செங்கொடி மருது.

3. கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு? - செங்கொடி.

4. நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி! - வினவு.

==============================================