Sunday, October 10, 2010

வேதாந்தா: டோங்கிரியா கோண்டு பழங்குடிகளின் வீரமும், தூத்துக்குடி சுய உதவிக்குழுக்களின் துரோகமும்!!

பிரிட்டனைத் தலைமியிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம், ஒரிசாவில் உள்ள 40 கிலோமீட்டர் நீளமுடைய நியம்கிரி மலையை விழுங்கி, அதனடியில் புதைந்துள்ள பாக்சைட் தாதுப்பொருளையும் முற்றாகச் சுருட்டி எடுத்துக்கொள்ள மத்திய அரசுடன் ஒப்பந்தமிட்டுள்ளது. தொடக்கம் முதலாகவே அந்நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமைந்து எதிர்த்து வருகின்றனர், அம்மலைகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் டோங்கிரியா கோண்டு இன பழங்குடியின மக்கள்.

அப்பழங்குடியினரை மீறி அம்மலையில் கால்பதிக்க வேதாந்தாவால் முடியாத காரணத்தால், அரச பயங்கரவாத போலீசு படைகளைக் கொண்டு துப்பாக்கி முனையில் அப்பழங்குடிகளை விரட்டியடித்துவிட துடித்துக்கொண்டிருக்கின்றன, மத்திய-மாநில (ஒரிசா) அரசுகள். நிதியமைச்சராக இருந்து அந்நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு பல இலட்சம் கோடி டன் பாக்சைட் தாதுப்பொருளைச் சுருட்டிக்கொள்ள ‘சட்டப்படி’ அனுமதியளித்த ப.சிதம்பரம், இப்போது உள்துறை அமைச்சராக மாறி அந்த ஒப்பந்தத்தை நிலைநிறுத்த போலீசு-இராணுவ படைகளுடன் கொலைவெறியோடு அலைகிறார். இந்த நிறுவனத்தில் இயக்குநர்களுள் ஒருவராகப் பணியாற்றியவர்தான் இந்த சிதம்பரம் என்பது கூடுதல் தகவல்.

அந்நிறுவனத்தினை எதிர்த்தும், அரசு அந்நிறுவனத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை கைவிடக் கோரியும் கடந்த சில ஆண்டுகளாக டோங்கிரியா கோண்டு பழங்குடி மக்கள் போராடிவருகின்றனர். ஓட்டுக் கட்சிகளும், பத்திரிக்கைத் துறையும், நீதித்துறையும் முற்றாகக் கைவிட்ட பிறகும் உறுதி குலையாமல் அம்மக்கள் பல கட்ட போராட்டங்களை மாவோயிஸ்டுகளின் வழிகாட்டுதலுடன் மேற்கொண்டனர். ஹிமான்சுகுமார், அருந்ததிராய், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிவுஜீவிகள் மத்திய அரசின் அயோக்கியத்தனத்தையும் போடப்பட்டுள்ள மோசடி ஒப்பந்தங்களையும் அம்பலப்படுத்தி பேசியும் எழுதியும் வந்தனர்.

மத்திய அரசின், நீதித்துறையின் புனித முகமூடிகள் கிழிந்து அவற்றின் கோரமுகம் அம்பலமாகத் தொடங்கியதும், வேறு வழியின்றி சுற்றுச்சூழலுக்குக் கேடு என்ற முகாந்திரத்தில் வேதாந்தா அந்த பாக்சைட் கணிமத்தை வெட்டியெடுப்பதற்கு மட்டும் தடைவித்திருக்கிறது, சுற்றுச் சூழல் அமைச்சகம். இந்த வெற்றி முழுக்க முழுக்க கோண்டு இனப் பழங்குடி மக்கள் போராடிப் பெற்ற வெற்றியாகும். இதில் மத்திய அரசின் கரிசனமோ, பொறுப்புணர்வோ கிஞ்சித்தும் கிடையாது. வேறெந்த ஓட்டுக் கட்சியும் அம்மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. அனைத்து கட்சிகளும் வேதாந்தாவுக்கு வாலாட்டும் நாய்களாக மாறியிருந்தன; இதில் வியப்பேதும் இல்லை.

இது வேதாந்தா என்ற பன்னாட்டு பகாசூர கம்பெனியை எதிர்த்து டோங்கிரியா கோண்டு பழங்குடிகள் சாதித்த வெற்றிக் கதை. அதே வேதாந்தாவுடன் தொடர்புடைய தமிழகத்து நிகழ்வு ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரங்கேறியது; அதனைப் பற்றியும் பார்ப்போம்.



வேதாந்தாவின் கிளை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாமிர உருக்கு ஆலை ஒன்று தூத்துக்குடிக்கு அருகில் செயல்பட்டு வருவது நாம் அறிந்ததே. அந்நிறுவனத்தின் தலைவர், சுமார் 800 கோடி ரூபாய் கலால் வரி ஏய்ப்பு குற்றத்திற்காக கலால்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்தான். அந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியது என்றும் அது செயல்படுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும் தடைவிதிக்கக் கோருகின்ற வழக்குகள் நடைபெற்றுவந்தது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்நிறுவனம் உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக, இந்தத் தடைக்கு ஒரு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இதற்கிடையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக திட்டமிட்டு இறக்கிவிடப்பட்டுள்ள சில தன்னார்வக் குழுக்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களைத் திரட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலம் சென்று ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஆலையும் தொடர்ந்து இயங்க வழிசெய்ய வேண்டும். ஏனெனில் அந்நிறுவனம்தான் தங்களது வாழ்க்கைக்கே ஆதாரமாக விளங்கிவருகிறது, என்றெல்லாம் முறையிட்டிருக்கின்றனர்.

பன்னாட்டு நிறுவனங்களாலும் இந்தியத் தரகுமுதலாளிகளாலும் சுற்றிவளைத்து சுரண்டப்படும் ஏழை எளிய மக்கள் வாழ்விழந்து திண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், பொருளாதார உதவிகளை வழங்குகின்ற அமுதசுரபி என்ற தோற்றத்துடன் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதுதான் இந்த சுய உதவிக் குழு திட்டங்கள். பொருளாதார ரீதியாக உதவிகள் வழங்குவதாகக் காட்டிக்கொண்டாலும் அதன் உள்ளீடாக ஏகாதிபத்திய அரசியல் நுட்பமாகப் புகுத்தப்பட்டு வந்திருக்கிறது. அரசாலும் ஓட்டுக்கட்சிகளாலும் நிர்வகிக்கப்பட்டு வந்த இக்குழுக்கள், இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளாகச் செயல்படும் என்.ஜி.ஓ-க்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இக்குழுக்களுக்கு பொருளாதார அடையாளத்தை மட்டுமே அரசும், ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் வழங்கிவருகின்றன. அதில் பங்கெடுத்துக்கொண்டிருக்கக் கூடிய பெண்களும்கூட அவ்வாறுதான் நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அதன் அரசியல் தன்மை மிகவும் அபாயகரமானது என்று நக்சல்பாரி புரட்சியாளர்கள் மட்டும் தொடக்கம் முதலாகவே அடையாளப்படுத்தி வருகின்றனர். உழைக்கும் பெண்களை இந்த சுய உதவிக் குழுக்களைப் புறக்கனித்து வாழ வலியுறுத்தி, அவர்களைப் போர்க்குணத்துடன் பயிற்றுவித்தும் வருகின்றனர். நாளெல்லாம் உழைத்தும் பொருளாதார ரீதியாக நாம் முடங்கியிருப்பதற்குக் காரணம் இந்த ஏகாதிபத்திய கைக்கூலி அரசுதான். எனவே, இந்த அரச கட்டமைப்பை உடைத்து நொறுக்கி அனைவருக்குமான ஜனநாயகத்தை உருவாக்குகின்ற புரட்சிகர போராட்டங்களின் மூலமாகத்தான் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் விடுதலை பெறமுடியும்; இதுபோன்ற, ஏகாதிபத்தியத்திடம் ‘நிதியுதவி’ பெற்றுத்தரும் என்.ஜி.ஓ.க்களால் அல்ல; என்பதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துவருகின்றனர் புரட்சியாளர்கள்.

இதனை நாம் அதீத கற்பனையோடு சொல்வதாகவும், என்.ஜி.ஓ.க்கள் மக்கள் நலன் காப்பவை என்றும் சிலர் அடித்துக் கூறுகின்றனர். சுய உதவிக் குழுக்களில் பங்குபெறாமல் பெண்கள் முன்னேற முடியாது என்றும் சிலர் நம்புகின்றனர். இந்த பொருளாதார முலாம் பூசப்பட்ட கவர்ச்சித் திட்டத்திற்குள் பொதிந்திருக்கக் கூடிய அபாயகரமான அரசியலைத்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக திரட்டப்பட்டிருக்கக் கூடிய மக்கள் கூட்டம் தெளிவாக நிரூபித்துக் காட்டுகிறது.

பல நூறுகோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை ஏய்த்துக் கொள்ளையடித்த அந்நிறுவனத்தை, சுற்றுச்சூழலுக்கு எக்கேடு நேர்ந்தாலும், அதனால் நீர், நிலவளங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் வீதிக்கு வந்தாலும் பரவாயில்லை, தமது தொழில் நடக்க வேண்டும், இலாபம் பெருக்க வேண்டும், என்று இந்திய சட்டத்தையும் நீதித்துறையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு சுரண்டிக் கொழுக்கும் அந்நிறுவனத்தை, தமது வாழ்க்கைக்கே ஆதாரமாகக் கருதி, அதன் பாதிப்புகளை சந்திக்கப் போகின்ற மக்களே பிதற்றுகின்ற அளவுக்குத் தயாரிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி மக்கள் தயாரிக்கப்பட்டிருப்பதற்கு கனிசமான பங்கு நமது தமிழகத்து ஓட்டுக் கட்சிகளுக்கும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் திரட்டப்பட்ட பெண்கள் மத்தியில் சில ஊராட்சி மன்றத் தலைவர்களும் அடக்கம் என்பதை நாம் நன்கு கவனிக்க வேண்டும்.

தி.மு.க., அ.தி.மு.க., போலிகம்யூனிஸ்டுகள் என அனைத்து கட்சிகளும் தமது மகளிர் அணியினரைக் கொண்டு பல்வேறு சுய உதவிக் குழுக்களைக் கட்டியமைத்து, அவற்றை இந்த ஏகாதிபத்தியக் கைக்கூலி என்.ஜி.ஓ.க்களின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கச் செய்திருக்கின்றனர். “செம்மலர் சுய உதவிக்குழு”, “ஜோதிபாசு சுய உதவிக்குழு”, “செங்கொடி சுய உதவிக்குழு”,  “ஜீவா சுய உதவிக்குழு” என்று புரட்சிகர தோற்றங்களுடன் கம்யூனிச துரோகிகளின் பெயர்களில் உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய எண்ணற்ற குழுக்கள் போலி கம்யூனிஸ்டுகளின் உபயமாக ஏகாதிபத்திய சேவையாற்றி வருகிறது.



ரிசாவின் டோங்கிரியா கோண்டு இனத்து மக்களுக்கும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி வாழ்ந்துவருகின்ற மக்களுக்கும் எதிரி ஒருவன் தான். எதிர்கொள்ளக் கூடிய பாதிப்புகளும் கூட கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவைதான். இருப்பினும் பழங்குடி மக்களின் தீரமிக்கப் போராட்டமும், தூத்துக்குடி மக்களின் போராட்டமும் சாராம்சத்தில் வேறுபட்டிருப்பதும், எதிரெதிராய் இருப்பதும்  எப்படி நிகழ்ந்தது?


மாவோயிசத் ‘தீவிரவாதி’களால் அணிதிரட்டப் பட்டிருக்கும் மக்களுக்கும், இதர ‘ஜனநாயக’ சக்திகளான ஓட்டுக்கட்சிகளால் பராமரிக்கப் பட்டிருக்கும் மக்களுக்கும் உணர்வு ரீதியாக உள்ள வேறுபாடுதான், இப்போராட்டத்தை எதிர்கொள்வதிலும் பச்சையாக வெளித்தெரிகிறது. சுருங்கச் சொன்னால் தேசப்பற்றுமிக்க புரட்சியாளர்களால் திரட்டப் படுகின்ற மக்கள் போராடுவதற்கும், தேசத் துரோகிகளான ஓட்டுப் பொறுக்கிகளால்  முடக்கிவைக்கப்பட்டிருக்கின்ற மக்கள் போராடுவதற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான்!


மாவோயிச பயங்கரவாதம் தேச நலனுக்கு எதிரானது என்று கூப்பாடு போடுகின்ற மன்மோகன்கள், புத்ததேவு பட்டாச்சாரியாக்கள், தேச பக்தர்களா, தேசத்துரோகிகளா என்பதை வரலாறு தெளிவுபடுத்தட்டும்!

நாம் சுய உதவிக் குழுக்கள் என்ற பெயரில் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் பெண்களை மீட்டெடுப்போம்! மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!! நன்றி!

===================================================

தொடர்புரைய பிற கட்டுரைகள்:




No comments:

Post a Comment