Wednesday, October 6, 2010

எந்திரனை எதிர்ப்போம்; தினமணியின் கட்டுரையினை மறுமதிப்பீடு செய்வோம்!

கருணாநிதி குடும்பத்தின் மீடியா மேலாதிக்கம் ஆக்டோபஸ் கரங்களாக தென்னிந்தியாவை வளைத்துப் பிடித்திருக்கின்றன. சினிமாத்துறைக்கே உரிய கழிசடைத்தனங்களையும் சமூகஅக்கறையின்மையையும் தமது மூலதனத்தினால் மேலும் வளர்த்துவிடுகின்ற செயலையே கருணாநிதியின் மகள் வழியில் வந்த சன் குழுமமும், மகன்கள் வழியில் வந்த ரெட்ஜெயண்ட், க்ளவ்ட் நைன் உள்ளிட்ட திரைப்பட நிறுவனங்களும் செய்துவருகின்றன.

சினிமாத்துறையில் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளவும் போட்ட மூலதனத்தை பன்மடங்காக திரும்பச் சுருட்டிக்கொள்ளும் வகையிலும் அவர்களுடைய குடும்பத் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் மக்கள் செவிவழி நுழைந்து சிந்தைக்குள் சங்கு ஊதிக்கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு இப்போது அரசுத்துறையும் எந்திரனின் வசூலுக்கு பங்கம் வராமல் பாதுகாக்கும் பொருட்டு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

150 கோடி மூலதனம் போட்டு 600 கோடி சுருட்டவுள்ள சமூகவிரோத கும்பலை வனிக ரீதியாகப் பாதுக்காப்பதற்காக, திருட்டு சி.டி. விற்கும் ‘சமுக விரோதி’களை  ஒழிக்கவேண்டுமாம். அதற்காக  குண்டாந்தடிகளைத் தூக்கிக்கொண்டு போலீசு நாய்கள் தமிழகமெங்கும் பாய்ந்து செல்கின்றன. தன்னுடலை விற்று தன்பசியைப் போக்கிக்- கொள்ளும், சாதாரணமாக வீதியில் அலைகின்ற விபச்சாரிகளைப் பிடிப்பதற்கு சட்டம் இருக்கிறது; உலக அழகியை வைத்து ஆபாச படமெடுத்து இளைஞர்களின் சிந்தையைக் கெடுத்துவரும் சினிமா விபச்சாரகர்களுக்கு  தொழிலதிபர் என்ற அந்தஸ்து,  தொழில் பாதுகாப்பு! இதுதான் இந்திய ஜனநாயகம்! இதுதான் சட்டத்தின் ஆட்சி!!

இதுபோன்ற கலாச்சார படையெடுப்பை இவர்கள் மக்கள் மீது தொடுத்திருப்பதற்கு இரண்டு அடிப்படையான காரணங்கள் உள்ளன. ஒன்று மூலதனத்தைப் பெருக்கிக்கொள்ள இரசிகர்களின் உணர்ச்சிகளை காசாக மாற்றி பிக்பாக்கெட் அடித்துக்கொள்வது. மற்றொன்று மக்களை, குறிப்பாக இளைஞர்களை சிந்தைரீதியாகச் சீரழிப்பது. எந்திரனின் ரசிகர்கள் இப்போது கிட்டத்தட்ட மனிதத் தன்மையை இழந்த எந்திரங்களாகவே வீதியில் திரிகின்றனர். ஆக, எந்திரனை வனிக ரீதியிலான பிரச்சினையாக மட்டும் சுருக்கிப் பார்ப்பதைவிட, அதன்  கலாச்சார ரீதியிலான பாதிப்புகளையும் இணைத்தே அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது.

(எந்திரன் குறித்த கூர்மையான, விரிவான விமர்சனக் கட்டுரையை வினவு இனையதளம் வெளியிட்டிருக்கிறது. எந்திரன்: படமா, படையெடுப்பா! என்ற அந்த கட்டுரையை தோழர்கள் அவசியம் படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.)இது ஒருபுறமிருக்கட்டும் இப்போது தினமணியின் கட்டுரைக்கு வருவோம்;

எந்திரனின் வனிக ரீதியிலான மேலாதிக்கத்தை மிகவும் சரியாகவே அடையாளப்படுத்தியிருக்கிறது, தினமணியின் கட்டுரை. கருணாநிதி குடும்பத்தின் ஊடகத்துறை அயோக்கியத்தனங்களையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார், கட்டுரையாளர் சமஸ். ஆனால் அதற்குள் நுட்பமாக ஜெமினி எஸ்.எஸ்.வாசன் வகையறாக்களின் தொழில் (அ)தர்மத்தையும் சேர்த்து புனிதப்படுத்தியிருக்கிறார்.

எந்திரன் ஒரு ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தின் திணிப்பு என்றால், ஜெமினி வாசனின் பிரம்மாண்டங்கள் பார்ப்பனக் கலாச்சாரத்தின் வெளிப்படையான திணிப்பாக இருந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவ்வையார் என்ற பெண்மணியை பார்ப்பனப் பெண்மணியாகச் சித்தரித்து எடுக்கப்பட்ட ஔவையார் திரைப்படமாகட்டும், ஏனைய திரைப்படங்களாகட்டும் ஜெமினி பிலிம்சின் சேவை அன்றைக்கு பார்ப்பனியத்தின் ‘தேவை’யைத்தான் பிரதிபலித்தது. கே.பி.சுந்தராம்பாள் என்ற பெண்மணியை பார்ப்பனியத்தின் பிரச்சாரகராகவும் பெரியாருக்கு எதிராகவும் பயன்படுத்தினார் வாசன்.

எனவே, சன் குழுமத்திற்கு நேர்மறையாக ஜெமினி பிலிம்ஸ் உருவகப்- படுத்தப்படுவதை ஏற்கமுடியாது. வாசனின் திரைப்பட சேவையை விட்டுத்தள்ளுங்கள், அவரது ஆனந்த விகடனின் யோக்கியதையை ஒரு கனம் யோசித்துப்பார்த்தால் எல்லாம் எளிதில் விளங்கும். ஜெயேந்திரன் கைதுக்கு சப்பைக்கட்டு கட்டிய ஆனந்தவிகடன் அதன் பார்ப்பன உணர்வைத்தான் வெளிப்படுத்திதே தவிர சமூக அக்கறையை அல்ல.

ஆகவே, ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கருணாநிதி குடும்பத்தின் ஏகபோகத்தை எதிர்க்கும் வகையிலும் தினமணி வெளியிட்ட கட்டுரை, ஜெமினி வாசனையும் அதனூடாக பார்ப்ப பண்பாட்டையும் மறைமுகமாக நியாயப்படுத்த முயலுவதை நாம் கவனிக்க வேண்டும். தினமணியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துக்கள் பா.ஜ.க.வின் சுதேசிக் கொள்கையிலிருந்துதான் வெளிவருகிறதேயொழிய, அதன் முற்போக்கு சிந்தனையிலிருந்து வரவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகளான நமக்கும் பா.ஜ.க., சங்கபரிவார கும்பலுக்கும் உள்ள அடிப்படையான முரண்பாடு இதுதான்.

பா.ஜ.க.வும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறது; ஆனால் அது ஏகாதிபத்திய கலாச்சாரத்தை மட்டுமே எதிர்க்கிறது; ஏகாதிபத்தியத்தை பொருளாதார ரீதியில் இங்கு வளர்க்கவே அது அனைத்து வகைகளிலும் முயலுகிறது. ஆனால் கம்யூனிச புரட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்தின் சுவடுகளே இங்கு எந்தத் துறையிலும் இல்லாமல் அழிக்கின்ற இலக்கோடு போராடிக்கொண்டிருப்பவர்கள்.

கருணாநிதியை  பதவிக்காக பார்ப்பனியத்தை பகைத்துக்கொள்ளாத துரோகியாகவே நாம் பார்க்கிறோம். ஆனால் பார்ப்பன அடிப்படைவாதிகள் இன்னும் அவரை திராவிட அடையாளத்தோடே பார்க்கிறார்கள். கருணாநிதியை பார்ப்பனிய வாதிகள் பெயரளவுக்கேனும் எதிர்ப்பதற்கான உண்மையான காரணம் இதுதான். மற்றபடி தினமணியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது சமூக அக்கறையிலிருந்து எழவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தை ஒழித்துவிட்டு பண்டைய பார்ப்பனிய பிற்போக்கு நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தை நிலை நிறுத்துவதுதான் சங்க பரிவார அமைப்புகளின் திட்டம். தினமணியின் எந்திரன் எதிர்ப்புக் கருத்துக்கள் இந்த அடிப்படையிலிருந்துதான் வந்திருக்கிறது.  

கலைகள் யாவும் மக்களுக்கே என்ற முழக்கத்தின் கீழ் போராடக்கூடிய முற்போக்காளர்களாகிய நாம், இந்த இரு முகாம்களையும் கலாச்சார ரீதியில் வீழ்த்த வேண்டிய அவசியத்தைப் பெற்றிருக்கிறோம். வீழ்த்துவோம்!


குறிப்பு: தினமணி கட்டுரை குறித்த எனது மேற்கண்ட கருத்துக்களில் மாற்றுக்கருத்துடைய தோழர்கள் அவசியம் தங்களது கருத்தை பின்னூட்டப் பகுதியில் பதிப்பித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

2 comments:

நந்தா ஆண்டாள்மகன் said...

நல்ல கருத்து

ஏழர said...

தோழரே திணமனி கட்டுரையே வினவு கட்டுரையை அடிப்படையாக வைத்துத்தான் எழுதியிருக்கிறார்கள்... வினவில் இருந்த தெளிவான அரசியல் விமரிசனம் அதில் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. எனவே வினவின் எந்திரன் படமா படையெடுப்பா என்ற கட்டுரையை வைத்து விவாதித்தால் அது பொருத்தமானதாக இருக்கும்

அப்புறம் இந்த Word Verification ஐ நீக்குங்கள்

Post a Comment