Saturday, October 23, 2010

போலிகம்யூனிஸ்டுகளின் தேர்தல் வன்முறையும், நக்சல்பரி புரட்சியாளர்களின் அரசியல் போராட்டங்களும்!!

நேற்று (23.10.2010) நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டது. வெடிகுண்டுகள் வீசப்பட்டது. வேறு வழியில்லாமல் வேறொரு தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இது மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை எதிர்த்து நடத்தப்படும் பீகார் தேர்தல் பற்றிய செய்திகள் அல்ல. “நிலச்சீர்திருத்தத்தின் மூலம் மாவோயிச பயங்கரவாதத்தை நுழையவிடாமல் செய்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் மாநிலமான, அகிம்சாவாத கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யக்கூடிய...” கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய செய்திகள்தான் இவை. கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் என்ற ஊரில் இருந்த வாக்குச் சாவடியில் நடைபெற்ற மோதல்தான் இது. இதுபோன்ற, சுமார் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் மோதல்களும், குண்டுவீச்சுக்களும், வாக்குச் சாவடிகளைச் சூறையாடுதலும் நடத்தப்பட்டிருப்பதாக இன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பாக, இதே போலிமார்க்சிஸ்டுகள் ஆட்சி செய்துவரும் மேற்குவங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட, இந்த அகிம்சாவாத காம்ரேடுகள் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் சகிதம் ‘அமைதிவழியில்’ எதிர்கட்சியினருடன் மோதிக்கொண்டதை நாம் செய்திகளினூடாகப் பார்த்தோம்.

அரசுப் பதவிகளுக்காகவும் உள்ளாட்சிப் பதவிகளுக்காகவும் குண்டுவீச்சில் ஈடுபடும் காம்ரேடுகள், அத்தோடு நின்றுவிடுவதில்லை; அதே மேற்கு வங்கத்தில், சென்ற மாதம், ஒரு பள்ளியின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட போதும்கூட குண்டுவீச்சில் ஈடுபட்டனர். அதில் (இந்தச் சண்டையில் சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள்) சுமார் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட அக்கிரமும் நிகழ்ந்தது. போலிகம்யூனிஸ்டுகளின் பதவி வெறியும், அற்ப பிழைப்புவாதமும் வெளிப்படையாக அம்பலமாகும் இடம் இதுதான்.

வர்க்கப் போராட்ட களத்தில் ஆயுதம்தாங்கிய போராட்டத்தை வலியுறுத்தி களம் காணும் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள் என்று முத்திரைகுத்தி அவதூறு செய்துவரும் இந்தப் போலிகள், தேர்தல்களின் மூலம் கிடைக்கும் நாற்காலி சுகத்திற்காக ஆயுதம் தூக்கிக்கொண்டு வெறியாட்டம் போடுவதற்குத் தயங்குவதே கிடையாது.

அதாவது மக்கள் விடுதலைக்காக, சமுதாய மாற்றத்திற்காக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை “பயங்கரவாதம்” என்று கூச்சல் போட்டு முடக்க நினைக்கும் இந்த கம்யூனிசப் போலிகள் மக்களுக்கு எதிராக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை ஆதரித்து நிற்கிறார்கள். சிங்கூர், நந்திகிராம விவசாயிகளுக்கு எதிராகவும் லால்கார் பழங்குடி மக்களுக்கு எதிராகவும் அரச பயங்கரவாதத்தை ஏவி அப்பாவி மக்களைப் படுகொலை செய்தவர்கள்தான் இந்த அகிம்சாவாத கம்யூனிஸ்டுகள்.

தேர்தல் என்ற நாடகங்களின் மூலம் வாக்காளர்களான அப்பாவி மக்களை ஏமாற்றி, நமது மண்ணையும் வளங்களையும் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு விற்பனை செய்துகொடுத்துவிட்டு, கமிஷனாக சில எலும்புத்துண்டுகளைக் கவ்விக்கொள்ளும் புரோக்கர்களையே முதல்வராகவும் பிரதமராகவும் அமைச்சர்களாகவும் தேர்வு செய்துகொள்ளும் இந்தத் தேர்தல் முற்றாகப் புறக்கனித்து ஒதுக்கப்படவேண்டியது அவசியம்.


இந்தியாவை அமெரிக்கா உள்ளிட்ட இதர ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக மாற்றுவதை, அதிகாரத்தின் மூலமாகவும் சட்டப்பூர்வமாகவும் செய்துதருவதற்காக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இந்திய நாடாளுமன்றம், இந்திய மக்களால் இகழ்ந்து ஒதுக்கப்படவேண்டும்.

 இந்த நாடாளுமன்றத்தையும் தேர்தல் முறைகளையும் பயன்படுத்தி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தவேண்டும். இதில் காங்கிரசு, பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அடக்கம். இவர்கள்தான் இந்த போலிஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாத்து நிற்கும் தூண்களாக இருக்கின்றனர். உண்மையான ஜனநாயகத்தை, சுயசார்பான தேசத்தைப் படைக்க விரும்புகின்ற எவரும் இந்த போலிஜனநாயகக் கும்பலை அடையாளப்படுத்தி, தனிமைப்படுத்தி முடக்கியழிப்பதற்கு முன்வரவேண்டும்.

கேவலம் ஓட்டுக்காகவும், நாற்காலிப் பதவிகளுக்காகவும் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதமாக மோதிக்கொள்ளும் கம்யூனிச போலிகளை அக்கட்சியின் நேர்மையான தோழர்கள் கேள்விக்குட்படுத்திட வேண்டும். இந்தியப் புரட்சியைச் சாதிக்கக் கூடிய வலிமை படைத்தவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களா அல்லது இந்த தேர்தல்-பதவி வெறியர்களா என்பதை ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் அணிகள் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு தற்காலிகமாக விடைபெறுகிறேன். தொடர்ந்து இதுபோன்ற தகவல்களுடன் சந்திப்போம். நன்றி!

தோழமையுடன்,
து. சுரேஷ்
=================================================

சி.பி.எம். என்ற அகிம்சாவாத கம்யூனிஸ்டுகளின் ‘அமைதி’வழிப் புரட்சியைப் பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டிகளின் மீது அழுத்தி, அதில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளை அவசியம் படியுங்கள் தோழர்களே!

  1. ஏரியா பிரிக்க அடித்துக் கொள்ளும் சி.பி.எம். குண்டர் படை! - அசுரன்.
  2. திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? - புதியஜனநாயகம்.
  3. உ.ரா.வரதராசனின் மரணமும் சி.பி.எம்.மின் அரசியல் ஒழுக்கக்கேடும்! - வினவு.
  4. கொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை!!
  5. யெச்சூரி: யோக்கியன் வாரான் சொம்பெடுத்து உள்ளே வை!
  6. தெருநாய்ச் சண்டைகளும் அரசியல் ஓலங்களும்!

  1. சி.பி.எம்: உங்களது அரசியல் அடையாளமாக கம்யூனிசம் தொடரும்வரை எங்களது விமர்சனங்களும் எதிர்வினைகளும் தொடரும்! ==================================================

No comments:

Post a Comment