Thursday, October 14, 2010

யெச்சூரி: யோக்கியன் வாரான் சொம்பெடுத்து உள்ளே வை!

கடல் கொள்ளையைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? கடலின் மீது மிதந்துவரும் மேலை நாட்டுக் கப்பல்களின் மீது ஆப்பிரிக்க-சோமாலியர்களின் நடவடிக்கையை நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தியப் பெருங்கடலையும் வங்காள விரிகுடாவையும் இன்னபிற மூன்றாம் உலக நாடுகளின் கடல் பகுதிகளையும் வளைத்து மீன்பிடிக் கொள்ளை நடத்திவரும் ஏகாதிபத்திய நிறுவனங்களைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். உண்மையான கடல் கொள்ளை என்பது இதுதான்.

மீனவர்களின் மீன்பிடி கடல்தூரங்களுக்கு வரம்பிட்டுவிட்டு பன்னாட்டு பகாசூர நிறுவனங்களுக்கு கடல் வளத்தைத் தாரைவார்த்திருக்கும் துரோக ஒப்பந்தங்கள் ஒரு புறம் மறுகாலனியத்தின் அடையாளமாக இருக்க, சேது சமுத்திர திட்டம் இந்திய மக்களுக்கு, இதுவரை காணாததொரு இன்பலோகத்தை வழங்கவிருப்பதாகக் கூவி வருகிறார்கள், ஓட்டுப் பொறுக்கிகள்.

பொதுத்துறை தனியார் மயமாக்கலையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும், காடுகள், மலைகள், வனங்கள் என அனைத்தையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு உடமையாக்குகின்ற திட்டங்களையும், “தேசத்தின் வளர்ச்சி” என்று மதிப்பிம் ஓட்டுப் பொறுக்கிகள் சேது சமுத்திரத் திட்டத்தை வேறெப்படி மதிப்பிடுவார்கள்?

மறுகாலனியாக்கத் திணிப்புக்குப் பிறகு சேது சமுத்திர திட்டம் ஒரு அரசியல் திட்டமாக மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எண்ணற்ற சேதுசமுத்திர நாயகர்கள் தமிழக அரசியல் அரங்கில் முடிசூடிக்கொண்டனர். கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ என மாநிலக் கட்சிகளும் காங்கிரசு, பா.ஜ.க. பெருச்சாளிகளும் கூட சேதுசமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கு பாடுபட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள்.

இத்திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில்தான் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அடுத்துவந்த தேர்தல்களில் ‘இந்துக்களின் எழுச்சி’யை உருவாக்குவதற்கு வேறெந்த முகாந்திரமும் கிடைக்காததால், சேதுசமுத்திர திட்டம் தொடங்கப்பட்டு பல நூறு கோடிகள் கடலுக்கடியில் கொட்டப்பட்டுவிட்ட பிறகு, திடீரென பா.ஜ.க. பரிவாரங்களுக்கு நினைவில் உதித்ததுதான் ‘ராமர் பாலம்’!

கடலுக்கு அடியில் தென்பட்ட அந்த மணல் திட்டை அகற்றும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கையில், “அது ராமபிரான் இலங்கைக்குச் சென்று தன் பொண்டாட்டியைக் கூட்டிவருவதற்காக கட்டிய பாலம், அது இந்துக்களின் வரலாற்றுச் சின்னம், அதனை ஒருபோதும் இடிக்கக்கூடாது” என்று கூப்பாடு போட்டு அத்திட்டத்திற்குத் தடைகோரியது, சங்கபரிவார கும்பல்.

அங்கே ராமர் பாலமெல்லாம் கிடையாது, அது ஒரு மணல் திட்டு என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவித்த கருத்தை நிராகரித்த உச்சிக்குடுமி மன்றம் (உச்சநீதி மன்றம்) இராமாயணத்திலும் இந்துக்களின் நம்பிக்கைகளிலும் ஆதாரம் பொதிந்திருப்பதாகக் கூறி அத்திட்டத்திற்கு மோசடியாகத் தடைவிதித்தது. உண்மையைத் துணிவுடன் சொன்ன ‘குற்றத்திற்காக’ அந்த புவியியல் வல்லுநர்களும் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

உச்சநீதிமன்றம் அரசின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்று சில நாட்களுக்கு முன்பாக சாமியாடிய மன்மோகன், சேது சமுத்திரத் திட்டத்தில் உச்சநீதிமன்றம் இழைத்த அநீதிக்கு எதிராக வாய்திறக்கவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தினைத் தொடங்கி கடலுக்கடியில் செலவழிக்கப்பட்ட பலநூறு கோடிகள் காந்தி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டன!  வேறெந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சியின் தலைவர்களும் கூட, இந்த நீதித்துறை அயோக்கியத்தனம் பற்றி கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், போலிகம்யூனிச தலைவர்களில் ஒருவரான அண்ணன் யெச்சூரி, உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையும் தீர்ப்பும் சரியானது என்றும் அதனையொட்டி மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிட முடிவெடுத்ததும் சரியானதுதான் என்றும் அருள்வாக்கு அளித்தார். (ஆதாரம் THE HINDU - 22'October-2007). இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை, காஞ்சிக் கிரிமினல் ஜெயேந்திரன், சங்கரராமன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட போது கூட, அவன் கைது செய்யப்பட்டது தவறு என்று NDTV-யில் தீர்ப்பு சொன்னவர்தான் இந்த யெச்சூரி. சமீபத்தில் வெளியான அயோத்தி தீர்ப்பு குறித்து கருத்து சொல்லுகையில், அலகாபாத் நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பைக் கண்டிப்பதற்கு பதில், உச்சநீதிமன்றம் சரியான நீதியை வழங்கும் என்ற மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் திணிக்கும் முகாந்திரத்தில்தான் பேசிவருகிறார்கள் ‘மார்க்சிஸ்டு’கள்.

ஏகாதிபத்திய-மறுகாலனியாக்க ஆதரவு நடவடிக்கைகளில் பா.ஜ.க.வோடு அரசியல் ரீதியில் உடன்பட்டிருக்கும் போலிகம்யூனிஸ்டுகள், இந்துமத வெறி நடவடிக்கைகளில் கலாச்சார ரீதியில் உடன்பாடு கொண்டிருப்பதை நாம் பல இடங்களில் பார்த்துவருகிறோம். சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை, அத்திட்டத்தின் அரசியல் தன்மை ஏகாதிபத்திய நலனை முன்னிறுத்துவதையும், அத்திட்டத்தின் மீதான தடையானது கலாச்சார ரீதியில் இந்துவெறி பயங்கரவாதத்தை முன்னிறுத்துவதையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

இதில் உண்மையான கம்யூனிஸ்டுகள் என்ன விதமான போராட்டங்களை முன்வைக்க முடியும்? இருதரப்புக்கும் எதிரான நடவடிக்கைகளைத்தான் முன்வைக்க வேண்டும். இவ்விரு தரப்பையும் அம்பலப்படுத்தும் விதமாகத்தான் அரசியல் முழக்கங்களை எழுப்ப வேண்டும். ஆனால், இரு தரப்பையும் மாறி மாறி நியாயப்படுத்தும் விதமாகப் பேசிவரும் ‘மார்க்சிஸ்டு’களின் போலித்தனத்தை என்னவென்பது?

சேது சமுத்திர திட்டம் இந்துக்களின் நம்பிக்கை என்ற முகாந்திரத்தில் தடை செய்யப்பட்டதை ஆதரித்து கருத்து சொல்லும் அண்ணன் யெச்சூரி, மறுபுறம் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி மத்திய அரசை வலியுறுத்துவதாகவும் பேசுகிறார். சேது சமுத்திர திட்டம் வந்தால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்று முழங்குகிறார். யெச்சூரியின் இந்த மூடத்தனமான பேச்சுக்கு மயங்கி தமிழகத்திலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள், தமிழக டைஃபியின் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு உண்ணாவிரதப் போராட்ட நாடகம் ஒன்றும் நடத்தப்பட்டது.


இந்த நாடகத்தை முடித்துவைத்து யெச்சூரி ‘முழங்கிய’ விதத்தையும், ராமர் பாலம் என்ற கற்பனைக்காக சேதுக்கால்வாய்த் திட்டம் முடக்கப்பட்டதை ஆதரித்துப் பேசிய மறுபக்கத்தையும் எண்ணிப்பார்க்கையில் மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. ஆனால், யெச்சூரிகளுக்கு இப்படி இரட்டை நாக்குகளுடன் பேசித்திரிவதில் எந்தக் கூச்சமும் ஏற்பட்டதில்லை. கம்யூனிச முகமூடியணிந்து கொண்டு ஏகாதிபத்திய சேவையாற்றிவரும் ‘மார்க்சிஸ்டு’கள் எதற்காக வெட்கப்பட வேண்டும். இவர்களது பேச்சில் செயற்கையாக வழியும் புரட்சிகர சவடால்களை உண்மையென்று நம்பி ஏமார்ந்து திரியும் அப்பாவி இளைஞர்கள்தான் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்கள்.

No comments:

Post a Comment