Saturday, September 11, 2010

வா... இயற்கையே உன்னைப் போராட அழைக்கிறது! - கவிதை

வா... இயற்கையே உன்னை
போராட அழைக்கிறது.
இந்தமுறை விட்டுவிடாதே!
அணிசேரு... முன்னேறு!
முதலாளித்துவக் கொடுங்கரத்தை முறி!
என்று-
புல்லின் நுனியிலும் போராடத் துடிக்கும்
கடலின் அலைகளில் பழிவாங்கத் துடிக்கும்
உனது... மூதாதையர் குரலடா... அது!

கேள்!... செவி நுகர்...
இதயம் உள்வாங்கு...
இந்த இயற்கை உனதாகும்.

பார்!...

பழங்குடி மக்களின் வில்லிலிருந்து
புறப்படும் போர்க் குரலாய் நக்சல்பரி!

காடும், மலையும்,
கவினுறு நதியும்,
ஆடும், மாடும்,
ஆயிரமாம் உயிரினச் சூழலும்
உன்னை நம்பி ஒப்படைத்த போர் இது!

நடத்து!
தண்ணீர்க்கு மேல் பொருளுமில்லை.
கம்யூனிஸ்டுகளுக்கு மேல் கட்சியுமில்லை.
வந்து அமைப்பாகு!

சத்தீஸ்கரும், தூத்துக்குடியும்
இடத்தால் வேறு
அரசியலால் ஒன்று.

நியாம்கிரி மலையின்
முகத்தை எரித்த ஸ்டெர்லைட்தான்
தூத்துக்குடி துறைமுகத்தில் ஒதுங்கியிருக்கிறான்.
விடாதே, விரட்டியடி!

பிளாச்சிமாடாவை சுடுகாடாக்கிய
கோக்கோ கோலாதான்
கங்கை கொண்டானில் பதுங்கியிருக்கிறான்.
விட்டு விடாதே,
கயத்தாறில் கட்டபொம்மன் விட்ட மூச்சு
எதிர்பார்க்குது உன்னிடம்...

இரு! கொலைகார அரசே
வன்னிக் காட்டில்
நீ வைத்த நெருப்பை
தண்டகாரண்யா திருப்பித் தரும்!

பொறு! கோக்கோ கோலாவே
பிளாச்சிமாடாவில்
நீ குடித்த இரத்தத்தை
கங்கைகொண்டானில் கக்குவாய்!

தண்டகாரண்யாவின்
வர்க்கத்தீயை மூட்டி...
முதலாளித்துவச் சாம்பலை
தூத்துக்குடியில் கரை...

தெக்கத்தி சீமையின் தியாகிகள் இரத்தம்
மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்கும்
இதயத்தைத் தேடி
அலைகிறது எங்கும்!

இதயமிருந்தால் களமிறங்கு!


வேடிக்கைப் பார்த்து
ஒதுங்க வேண்டாம்.
இது உனது இரத்தம்! உனது யுத்தம்!
பதைத்திடு!
பொது எதிரியை வீழ்த்த
புரட்சி இப்போதே வேண்டுமென எழுந்திடு!

தி.மு.க., அ.தி.மு.க.,
பா.ம.க., ம.தி.மு.க.,
ஓட்டுக் கட்சிகளின் தாய்கழகம்;
நம்மை போட்டுத் தள்ளும்
உலக வர்த்தக் கழகம்.

நமது பரம்பரை நிலத்தை
பறிக்கவரும் முதலாளிக்கு
இந்த முறை ‘பாரதப் போரில்’
தேரை ஓட்டுவது,
கிருஷ்ண பரமாத்மா அல்ல
புத்ததேவ் பட்டாச்சார்யா!

ஆரியம் பிளஸ் போலி கம்யூனிசம்
இசிகோல்ட்டு - மார்க்சிஸ்டு!
காங்கிரசு - பா.ஜ.க.வுக்கு
ஒண்ணுவிட்ட பாசிஸ்ட்டு!

அன்று காலனியாதிக்கம்
இன்று மறுகாலனியாதிக்கம்.


அன்று கட்டபொம்மு
இன்று பு.ஜ.தொ.மு.

அன்று சுந்தரலிங்கம்
இன்று மக்கள் கலை இலக்கியக் கழகம்!

அன்று தீபகர்ப்பக் கூட்டணி
இன்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி!

ஆளும்வர்க்க சட்டத்திற்கு அடங்காதே!
அடிமைத்தனத்திற்கு எதற்கடா ஐ.பி.சி.
அன்று வ.உ.சி.
இன்று எச்.ஆர்.பி.சி.
மனித உரிமை பாதுகாப்பு மய்யம்!

அஞ்சாதே... அறிந்துகொள்
நல்லவனுக்குப் பெயர் நக்சலைட்
தேசத் துரோகத்தின் பெயர் காங்கிரஸ்.

எமனையும் நம்பலாம்,
ஓட்டுக் கட்சி
எவனையும் நம்பாதே!

காலாவதியான உணவு,
காலாவதியான மருந்து,
இவை மட்டுமா?
இது காலாவதியான அரசு!
இது காலாவதியான முதலாளித்துவம்!

இதை நம்பி வாழமுடியாது
தூக்கி எறி!
இனி நாடு வாழ ஒரே வழி நக்சல்பாரி!

- துரை. சண்முகம்
-------------------------------------------------------------------------------------
“மறுகாலனியாதிக்கக் கொலைக்களங்கள்” - தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதைத் தொகுப்பிலிருந்து மேற்கண்ட கவிதை இங்கு பதியப்படுகிறது.

வெளியீடு:
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
எண்-10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
தொலைபேசி: 044-28412367
====================================================

No comments:

Post a Comment