Monday, September 13, 2010

ச.தமிழ்ச்செல்வனுடன் ஒரு அரசியல் விவாதம்!

’மார்க்சிஸ்டு’ கட்சியைச் சார்ந்த அன்பார்ந்த தோழர்களே!
அதிமேதாவித் தலைவர்களே!

உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

அரசியல் ரீதியாக, தர்க்கப்பூர்வமாக, திறந்த மனத்துடன் விவாதிக்க வேண்டும்; அதன் மூலமாகத்தான் ஒரு சரியான கருத்தை நாம் எட்ட முடியும் என்கிற நோக்கில்தான் இந்த வலைதளம் தொடங்கப் -பட்டிருக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்டு கட்சியின் தோழர்களோடு விவாதிக்க வேண்டும் என்பதுதான் இத்தளத்தின் அடிப்படையான நோக்கம்.

இதில் பதியப்படும் எம்து கருத்துக்களை எத்தனைக் கடுமையாகவேனும் மறுத்துப் பதிவிடுகிற உரிமையை எதிர்கருத்தாளர்களுக்கு இத்தளமும் வழங்குகிறது. இதன் பின்னூட்டப் பகுதி எதிர்கருத்துள்ளவர்கள் தங்கள் விருப்பம் போல் ஜனநாயகமான முறையில் தங்களது கருத்துக்களைப் பதிந்து விவாதிக்க வசதியாக மட்டுறுத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

இந்நிலையில் “உலகில் எத்தனையெத்தனையோ பேசவேண்டிய, போராட வேண்டிய  முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் இருக்கும் போது, போயும் போயும் உங்களுக்கு மார்க்சிஸ்டு கட்சிதான் கிடைத்ததா?” என்பதுதான் மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர்கள் முதல் அணிகள் வரை அனைவரது கேள்வியுமாக இருக்கிறது. 

இக்கேள்வியானது மார்க்சிஸ்டு கட்சியின் மீது செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் புனித பிரமையிலிருந்து எழுகிறது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கருவறைக் கடவுளாக தமது கட்சியை இவர்கள் பார்க்கிறார்கள். இதிலிருந்து, இவர்கள் மார்க்சியத்தின் பெயரால் உலாவும் கருத்து முதல்வாதிகள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், த.மு.எ.க.ச என்கிற அமைப்பின் மாநிலச் செயலாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் (மின்னஞ்சலினூடாக) நான் மேற்கொண்ட உரையாடலில் (பதிவின் நீண்டு கொண்டே போவதைத் தவிர்க்க) அவருடைய பதில்களை மட்டும்  இங்கு பதிவிடுகிறேன். தோழர்கள் தத்தமது கருத்துக்களைப் பதிந்து விவாதிக்க முன்வரவேண்டும் என்றும் கோருகிறேன்.

[முழுமையான விவாதத்தை இதன்மீது சுட்டியை அழுத்தி படித்துக் கொள்ளலாம்.]


//////////On 9/8/10, tamil selvan tamizh53@gmail.com wrote:
சிபிஎம் மட்டும் ஒழிந்தால் போதும்.எல்லாம் சரியாகிவிடும் .அதை மட்டும்
சொன்னால் போதாதா..எதற்கு தேவையில்லாமல் மன்மோகன் பற்றியெல்லாம் எழுதிக் குழப்ப வேண்டும்.///////////

///////On 9/12/10, tamil selvan tamizh53@gmail.com wrote:
அதில்லை தோழரே... நம்ம பிறப்பும் லட்சியமும் சி.பி.எம்மை ஒழிப்பது மட்டும்தானே. எதற்கு தேவையில்லாமல் மன்மோகன் விஷயத்தை -யெல்லாம் எழுதி நம்ம சக்தியை வீணாக்க வேண்டும் என்பதுதான் என் கவலை. அவ்வளவுதான்.. உங்கள் புரட்சிப்பணி தொடர வாழ்த்துகிறேன்..///////

///////On 9/13/10, tamil selvan tamizh53@gmail.com wrote:
புரட்சிகரமான தோழர் சுரேஷ் அவர்களுக்கு,
நமக்குள் விவாதிக்க இப்ப என்னா இருக்கு.. உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் மக இக இருந்தாலும் இல்லாமல் போனாலும் சரி. சிபிஎம் ஒழியனும். இதற்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களோடு என்னதான் விவாதிக்க முடியும் தலைவா.. புரட்சியாளர் மம்தா தலைமையில் காங்+அத்வானி கூட்டணியில் அங்கே நீங்கள் நடத்தும் அரசியல்தான் புனிதமானது தலைவா.. நாங்க சும்மா பன்றித்தொழுவத்தில் உழல்கிறவர்கள். உங்கள் புரட்சிப் பாதைக்கு இடைஞ்சலாக இருந்தால் பேசாம சுட்டுத்தள்ளுங்க.. அதைத்தான் நான் சொன்னேன்.. விவாதம் விவாதம்னு சொல்லி டிசைன் டிசைனாக அவதூறு செய்யுங்க. அது உங்களுக்கு சூப்பரா வரும்..///////

அதாவது மேற்கண்ட அவரது கருத்துக்கள் எதிலுமே அரசியல் நேர்மையுடன் விமர்சனத்தை எதிர்கொண்ட அடையாளம் இல்லை. சி.பி.எம். ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்வது நியாயமா? என்பதற்குள்ளேயே, அதாவது அதன் புனித பிம்பத்திற்குள்ளேயே வைத்து, இக்கருத்தைச் சுற்றியே விவாதித்து எப்படியாவது விவாதிப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் இப்பதில்களின் நோக்கமாக இருக்கிறது. “சி.பி.எம். கட்சி ஏன் ஒழியவேண்டும்?” என்கிற கேள்விக்குள் அவர் இப்போது மட்டுமல்ல எப்போதுமே நுழையமாட்டார்.

நந்திகிராமத்து போராட்டத்தைப் பொருத்தவரை, மார்க்சிஸ்டுகளின் பதில் ஒன்றுதான் “அது மம்தா, அத்வானி, காங்கிரஸ், மாவோயிஸ்டு கூட்டணியால் விளைந்தது” என்பதுதான். இந்த பதிலை வைத்துக் கொண்டுதான் கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கட்சியின் தலைமை எத்தகைய புரட்டைச் சொன்னாலும் அவற்றை தேவவாக்காகக் கருத்தும் பக்திமான்களாக தமிழ்ச்செல்வன்கள் இருக்கும் வரை இந்த ஒற்றைக் கருத்து போதாதா.

சி.பி.எம். ஒழிக்கப்பட வேண்டும் என்றால் உடனே விவாதத்திலிருந்து விலகி ஓடிவிடுவீர்களா? இதுதான் உங்களது அரசியல் நேர்மையா? இதுதான் உங்களது அறிவு நாணயமா?

நக்சல்பாரிகளை துப்பாக்கி முனையில் ஒடுக்கியழிக்க வேண்டும் என்று நாள்தோறும், மேடைதோறும் பேசித்திரியும் உங்களோடு விவாதிக்க இந்த நிமிடம்வரை நாங்கள் முயலவில்லையா? நக்சல்பாரிகளை ஒழிக்க நீங்கள் என்ன சீன கம்யூனிஸ்டு கட்சியுடனும் நேபாள கம்யூனிஸ்டு கட்சியுடனுமா கூட்டு சேர்ந்திருக்கிறீர்கள், இங்குள்ள அதே காங்கிரசு+அத்வானி, மன்மோகன்+சிதம்பரத்துடனுடன் தானே கூட்டணி அமைத்துக் கொண்டு துப்பாக்கியோடு அலைகிறீர்கள்?

சிங்கூர், நந்திகிராம், லால்கார் போராட்டங்களின் அடித்தளம் என்ன? மம்தா+அத்வானி+மாவோயிஸ்டு கூட்டணிதானா? அதில் வேறெந்த சமூக, அரசியல் காரணங்களும் இல்லை என்று  திரும்பத்திரும்ப நீங்கள் சொல்லிவருவது மோசடியில்லையா? மக்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக அவர்களது நிலங்களைக் கருதுகிறார்கள்; அதனால் துப்பாக்கிமுனையில் அந்த நிலங்களை அவர்கள் உயிரோடு சேர்த்து பறித்துவருகிறது, உமது அரசு. இதுதான் அப்போராட்டத்தின் சாரம்.

மண்ணின் மைந்தர்களை, ஏழை, எளிய உழைக்கும் விவசாய மக்களை நரவேட்டையாடிவிட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு அந்நிலங்களைச் சொந்தமாக்குவது என்பதுதானே உங்கள் அரசின் கொள்கை? இதனை நீங்கள் இல்லையென்று மறுக்க முடியாது. மேற்குவங்க மார்க்சிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஒப்புதல் வாக்குமூலம் இருக்கிறது. நந்திகிராமத்தில் நரவேட்டையாடியதையும் அங்கு அரசு நடத்திய நிலப்பறிப்பையும் ஒப்புக்கொண்டு பகிரங்கமாக மக்கள் முன் மன்னிப்பு கோரியிருக்கிறார், புத்ததேவ்.

ஆனால், இவற்றுக்குக் காரணம் மம்தா+மாவோயிஸ்டு கூட்டணி என்று சளைக்காமல் இன்று வரை புளுகிவருகிறீர்கள். பன்னாட்டு ஏகபோக முதலாளிக்காக நீங்கள் செய்த சேவையை, பெற்ற கைக்கூலியை செங்கொடியைக் கொண்டு பத்திரமாக மூடிமறைத்துவிட்டு, கட்சியின் புனிதத்தைக் கேள்விக்குட்படுத்தக் கூடாது என்று வெளியில் நின்று கொண்டு கூப்பாடு போடுகிறீர்கள்.

மம்தா+மாவோயிஸ்டு கூட்டணி பற்றிய உங்களது கருத்தை மறுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. மாவோயிஸ்டுகளின் அப்படிப்பட்ட அனுகுமுறையை நாமும் எதிர்க்கிறோம் என்பதை நாம் பலமுறை தெளிவுபடுத்தியாகிவிட்டது. இருப்பினும் அக்கூட்டணி தேர்தல் கூட்டணியல்ல, அது மண்ணை மீட்கின்ற மக்கள் போராட்டத்தில் சந்தர்ப்பவாதமாக அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணி. அதன் நோக்கம் தவறாக இருந்தாலும் அதன் பின்புலம் மக்களின் நிலமீட்பு போராட்டம்தான்.

ஆனால், தேர்தலுக்குத் தேர்தல், கேவலம் ரெண்டு நாற்காலி சீட்டு தரும் சுகத்திற்காக, சிறிதும் கூச்சமின்றி கண்ட கழிசடைக் கட்சிகளுடன்கூட கூட்டணி அமைத்துக் கொள்ளும் உங்கள் கட்சியின் செயலைவிட அது இழிவானதல்ல. மம்தா+மாவோயிஸ்டு கூட்டணி பற்றி பேச உங்கள் கட்சிக்கும்  தலைமைக்கும் அருகதையில்லை.

சென்றவாரம் நீங்கள் நடத்திய ‘பொது வேலை நிறுத்தம்’ போல கபட நாடகம் வேறேதேனும் உண்டா? மன்மோகன் அரசை எதிர்த்து மன்மோகனுடனேயே கூட்டு சேர்ந்து போராடுவது! காங்கிரசு அரசின் மக்கள் விரோத செயலைக் கண்டித்து, காங்கிரசுடனேயே சேர்ந்துகொண்டு போராடுவது! இப்படித்தான், மதவெறிக்கு எதிராக ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்துக்கொண்டது! என்று நீளுகிறது.

இனி தொடர்ந்து மதவெறியை எதிர்த்து பா.ஜ.க.வோடு இணைந்து போராடுகின்ற போராட்டங்கள், ஊழலை எதிர்த்து பினராயி விஜயன் தலைமையில் போராடுவது போன்ற அசிங்கங்களெல்லாம் நடைபெற்றாலும் வியப்பதற்கில்லை. இந்த லட்சனத்தில் மம்தா+மாவோயிஸ்டு கூட்டு குறித்துப் பேச உங்கள் கட்சிக்கு என்ன யோக்கியதை இருக்கமுடியும்?

அறிவு நாணயமும் அரசியல் நேர்மையும் சிறிதளவேணும் இருந்தால் இந்த தமிழ்ச்செல்வன்கள் நேர்மையான பரிசீலனைக்கு முன்வரவேண்டும்.
 “ ‘மார்க்சிஸ்டு’ ஒழியவேண்டும் என்று சொல்கிறார்களே! கேட்டீர்களா!” என்று கூப்பாடு இனியும் எடுபடாது. தனிப்பட்ட சில பன்னாட்டு நிறுவனங்களுக்காக நூற்றுக்கணக்கான உழைக்கும் மக்களை ‘மார்க்சிஸ்டு’ அரசு கொல்வது நியாயமென்றால், மார்க்சிஸ்டு  கட்சி ஒழித்துக்கட்டப் படவேண்டும் என்று சொல்வதில் என்ன தவறிருக்க முடியும்?

செங்கொடியால் போர்த்தி கமுக்கமாக மூடிமறைக்கப்பட்டிருக்கும் உங்கள் கட்சி என்னும் கருவறைச் சாமியை வெளியே எடுத்து பொதுவெளியில் உடைத்து ஆராயவேண்டும். டாடாவுடனும், டௌ கெமிக்கல்ஸ் உடனும் சலீம் குழுமத்துடனும், ஜிண்டாலுடனும் நீங்கள் அமைத்து கொண்ட ‘மக்கள் நலத்திட்டங்கள்’ பொதுவெளியில் வைத்து விவாதிக்கப்பட வேண்டும். அதிலிருந்துதான் நீங்கள் சுட்டிக்காட்டுகின்ற புறநிலைச் சக்திகளான மம்தா+மாவோயிஸ்டு கூட்டணியைப் பற்றி பேசமுடியும்.

ஒரு உபதகவல்: சிங்கூர், நந்திகிராம், லால்கார் பகுதியில் அமையவிருந்த பன்னாட்டு தொழில் கழகங்களுடன் மேற்குவங்க மாநில மார்க்சிஸ்டு அரசு செய்துகொண்ட ‘புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்’ குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரிப் பெறமுடியாமல் மோசடியாகத் தடை வாங்கி வைத்திருக்கிறார், மார்க்சிஸ்டு முதல்வர் புத்ததேவ்.

ஒருவேளை உங்கள் கட்சிக்குள் ஜனநாயகமிருந்தால், கருத்துரிமை இருந்தால் இக்கருத்தை முன்வைத்து அந்த ரகசிய ஒப்பந்தங்களின் விவரங்களைப் பெற்றுத்தாருங்கள்; விவாதிக்க வசதியாக இருக்கும்! நன்றி!


(இன்னும் தொடரும்......


தோழமையுடன்,
து.சுரேஷ்.

===================================================

தொடர்புடைய பிற பதிவுகள்:










14 comments:

விடுதலை said...

அய்யா சுரேஷ் அவர்களே உங்கள் பாதை நக்சல் குருடர்கள் பாதை என்பதை உங்க அப்பன் சாரு, CPIML,CPIMLL, புதிய ஜனநாயகம் போன்ற தாத்தாகள் எல்லாம் உன்னுடை மொக்கை துப்பாக்கி பாதை இந்தியாவுக்கு ஒர்க்அவ்ட் ஆகதுன்னு திருந்திட்டாங்க.

துப்பாக்கியே பாக்கத நீ என்னாதுக்கு வந்து கத்திக்கிட்டு கிடக்கிற.

சிபிஎம் குறித்த உன் கேள்விக்கு எல்லாம் எப்பவோ நான் வரிக்கு வரி பதில்சொல்லிட்டன். வேனும் என்றால் வினவு, ஏகலை,அரசுன் போலி விடுதலை எல்லாறையும் கேட்டுப்பார்த்துக்கோ! மேற்கு வங்க அரசு டாடா, சலிம், ஜீன்டால் எல்லாருக்கும் நிலத்தை கொடுக்குது அங்க கூட நெருக்கமாக இருக்குன்னு பொலம்பாத அப்படி எல்லாம் இல்ல திரும்ப திரும்ப பேசாத கண்னு. செம்பள் வேனா தரேன் இந்தியாவில் உள்ள சிறப்பு பொருளாதார மன்டலம் பத்தி படிச்சிப்புட்டு விவாத்திற்கு வான்னு நான் சொல்லமாட்டன் வேனுமனா சொல்லி வுடு வரேன்.

நாட்டிலுள்ள மாநிலங்கள் பல சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவியுள்ளன. மேற்கு வங்கத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம் குறித்து, மற்ற மாநிலங்கள் குறித்து ஊடகங்கள் எதுவும் வாயே திறக்கவில்லை. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில்தான் விவசாயிகளின் நிலங்கள் வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டிருப்பதாக, பூதாகரமான முறையில் அவதூறுப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

ஆனால், எதார்த்த நிலைமை என்ன? சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் 2006இல் அறிவிக்கப்பட்ட பிறகு, மேற்கு வங்கத்தில் இதுநாள்வரையில் 11 சிறப்புப் பொருளாதார மண்டலங்களே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்பது மண்டலங்கள் தகவல் தொழில் நுட்பங்களுக்கானவை. இவை ஒவ்வொன்றும் சராசரி 10லிருந்து

20 ஹெக்டேர் நிலப்பரப்பிற்குள் (ஹெக்டேர்=சுமார் 2.5 ஏக்கர்)தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மிகப் பெரிய ஒன்று என்பது 48.5 ஹெக்டேரில் நிறுவப்பட்டிருப்பதாகும். மேற்கு வங்கத்தில் உள்ள 11 மண்டலங்களும் மொத்தத்தில் 210 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் கோவாவின் நிலைமை என்ன தெரியுமா? கோவாவில் வெறும் மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 250 ஹெக்டேர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டிருக்கின்றன. இவ்வாறு, நாட்டின் மிகச் சிறிய மாநிலமான கோவாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான நிலப் பரப்பைவிட மிகவும் குறைவான நிலத்தில்தான் மேற்கு வங்கத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

நாடு முழுவதும் மொத்தம் 363 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் அதிகமான அளவிற்கு ஆந்திராவில்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. 12,300 ஹெக்டேர் பரப்பளவில் 74 மண்டலங்கள் இங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் அவற்றிற்கான நிலப்பரப்பின் விவரமும் வருமாறு:

இவ்வாறு ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத். தமிழ்நாடு, கர்நாடகா, அரியானா போன்ற மாநிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும் அள்ளிக் கொடுத்திருக்கின்றன.

ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் வாயே திறக்காத ஊடகங்கள், மேற்கு வங்கத்தில் வெறும் 210 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்து குய்யோமுறையோ என்று காட்டுக்கூச்சல் போடுகின்றன.

மாநிலம் எண்ணிக்கை மொத்தப் பரப்பளவு

(ஹெக்டேரில்)

ஆந்திரம் 74- 12300

மகாராஷ்ட்ரா 62- 09150

தமிழ்நாடு 57 04470

கர்நாடகா 32 02160

அரியானா 32- 01380

குஜராத் 30- 08600

மே.வங்கம் 11- 00210

கோவா 3 -250

விடுதலை said...

உங்கள் நன்பர்கள் கொன்றது யாரை

http://www.youtube.com/watch?v=GsiZwnXQfoo&NR=1

விடுதலை said...

இதுவரை உங்கள் சாதனை இதுதானே

http://www.youtube.com/watch?v=VW22eIyiNIE&feature=related

விடுதலை said...

உங்கள் எதிரிகள் இந்த ஏழைகள் தானே

http://www.youtube.com/watch?v=nrDjeXBqDtA&feature=related

விவாதகளம்... said...

அன்பார்ந்த தோழர்களே!

தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எனக்கு மின்னஞ்சல் மூலமாக பின்வரும் நீண்ட பதிலைச் சொல்லியிருக்கிறார். ஏனைய தோழர்கள் பரிசீலிப்பதற்கும் தொடர்ந்து விவாதிப்பதற்கும் பொருத்தமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் அதனை இங்கும் பதிகிறேன். நன்றி!
-----------------------------------------------------
புரட்சித்தோழர் சுரேஷ் அவர்களே..

உங்கள் விவாதக் குறிப்பைப் படித்தேன்.பாராவுக்குப் பாரா தீர்ப்புகளாகச் சொல்லிச் செல்கிறீர்கள்.தீர்ப்பு வழங்கும் இடத்தில் உங்களை வைத்துக்கொண்டு யாரோடுதான் என்ன விவாதிப்பீர்கள்.முதலில் நீங்கள் உங்களின் இந்த நாட்டாமை மனநிலையை மாற்றுங்கல் அப்போதுதான் யாரும் உங்களோடு விவாதிப்பார்கள்.சிபிஎம் ஒரு புளுகு மூட்டை.கேடுகெட்ட பாராளுமன்றவாதக் கட்சி மார்க்சியத்துக்கு விரோதமான அமைப்பு ... 1968லிருந்து நக்சல் இயக்கத்தோழர்களிடமிருந்து கேட்டுக்கேட்டுப் புளித்துப்போனதையே மறுபடி மறுபடி வாந்தி எடுத்து வைத்துள்ளீர்கள்.. புதுசா ஏதாச்சும் திட்டுங்க தல..

நந்திகிராமில் நிலம் எடுப்பது என்கிற பிரச்னையே இல்லை.அது மம்தா மாவோயிஸ்ட்டுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட 100 சதம் கலப்பில்லாத பொய். ஏகாதிபத்திய மீடியாவுடன் நீங்கள் கொண்ட உறவை வைத்து இல்லாத பிரச்னைக்காக சிபிஎம் தாக்கப்பட்டது.எடுக்காத நிலத்துக்காக பூமி பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி உலக வரலாற்றில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஆளும் வர்க்கங்களுடன் இணைந்து உருவாக்கினீர்கள்.அதில் நாங்கள் தோற்றோம் என்பதுதான் உண்மை.பொய்யர்களின் கூட்டணியிடம் சிபிஎம் தோற்ற வரலாறுதான் நந்திகிராம் வரலாறு.புத்ததேவ் மன்னிப்புக் கேட்ட பத்திரிகைக்குறிப்பை சரியாகப் படித்துப்பாருங்கள்.மார்ச் மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.மக்கள் கருத்தை -ஒப்புதலை-பெறாமல் சிங்கூர் போன்ற இடங்களில் புதிய தொழில்கள் துவங்க முயற்சித்ததற்காக வருத்தம் தெரிவித்தார்.சிபிஎம் எடுக்கும் எல்லா முயற்சிக்களும் பகிரங்கமாக மேற்கு வங்கத்திலும் இந்தியாவெங்கும் விவாதிக்கப்படுகிறது.ரகசியம் என்று ஒரு புடலங்காயும் கிடையாது.வெளிநாட்டு முதலீடுகளை உரிய கட்டுப்பாடுகளுடன் மேற்குவங்கத்தில் அனுமதிப்பது தொடர்பாக பல நூறு கட்டுரைகள் சிபிஎம் வெளியிட்டுள்ளது.cpim.org இல் போய் படியுங்கள்.இதை உங்களுக்காக எழுதவில்லை.நீங்கள் எல்லாம் தெரிந்தும்தான் நாடகம் ஆடுகிறீர்கள்.

நக்சல்பாரிகள் ஆந்திராவிலிருந்து மே.வங்க,ஜார்கண்ட் பகுதிக்குள் பல ஆண்டுகளுக்கு முன் ஊடுருவி உருவான எழுச்சிதான் இன்றைய மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைப்போராட்டங்கள்.இன்றைக்கும் மாவோயிஸ்ட்டுகளை கட்டுப்படுத்த அரசியல்ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும் என்றுதான் சிபிஎம் கூறி வருகிறது.ஜார்கண்ட்டில் போல சால்வா ஜூடும் போன்ற அமைப்புக்களை சிபிஎம் ஏற்படுத்தவில்லை.பழங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பிரச்னைகள் தொடர்பாக மே.வங்க அரசு செய்யத்தவறியவை குறித்து சிபிஎம் வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளது.அந்த இடைவெளியில்தான் மாவோயிஸ்ட்டுகள் பணியாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன..இது எதையும் உங்களுக்காக எழுதவில்லை.உங்களுக்குத்தான் எல்லாமே தெரியுமே.உங்களுக்கு ஆதரவான ஏகாதிபத்திய மீடியா கிளப்பிவிட்டுள்ள சிபிஎம் எதிர்ப்புக் கருத்துக்களை மட்டுமே வாசிக்கும் ஒரு வாசகருக்காக குறிப்பிடுகிறேன்.

[நீளம் கருதி, பின்னூட்டப் பகுதி ஏற்கவில்லை அதனால் அடுத்த பகுதியாக இதன் பின்னூட்டம் தொடர்கிறது. - சுரேஷ்]

விவாதகளம்... said...

முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி இதோ.....
----------------------------------------------------

பாராளுமன்ற அரசியலில் பங்கேற்பதா கூடாதா என்பதுதான் மர்கிசிஸ்ட்டுகள் விவாதிக்க வேண்டியது.இன்றைய இந்தியச் சூழலுக்கெற்ற மார்க்சியத்தை சிபிஎம் மட்டுமே இந்தியாவில் முன் வைக்கிறது.ஒரு கட்சித்திட்டத்தை முன்வைத்து ச் செயல்படும் ஒரே கம்யூனிஸ்ட் கட்சி அது மட்டுமே.ஆகவேதான் அதை ஒழிக்க இடது தீவிரவாதமும் வலது அடிப்படைவாதமும் இந்திய ஆளும்வர்க்கமும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கிறீர்கள்.இந்த உன்மைகளையெல்லாம் செங்கொடியைக்கொண்டே மூடி மறைக்கப் பார்க்கிறீர்கள்.

நக்சல்பாரி இயக்கம் அது தோன்றிய நக்சல்பாரி வட்டாரத்திலேயே வளரவில்லை.சில அதிமேதாவி அறிவுஜீவிகள்,மத்தியதர வர்க்கத்தினரில் ஒரு சிறு பகுதி ,மாணவர்களில் மிகச்சிறூ பகுதி ..இன்னும் கொஞ்ச நாளைக்கு மலைவாழ் மக்களிடம் என்று ..சுருங்கிக் கிடக்கிறது.ஏன் சரியான கம்யூ கொள்கை கொண்டிருப்பதாகக் கூறும் நீங்கள் வளரவில்லை?

அதெல்லாம் போகட்டும் தோழரே... தனிப்பட்ட முறையில் மக இக மீது எனக்கு சில மரியாதைகள் இருந்தது.தஞ்சையில் ஆண்டுதோறும் நீங்கள் நடத்திய மக்கள் இசைவிழா..ஒரு உருப்படியான காரியம்..கோக் எதிர்ப்பு இயக்கம் நீங்கள் நடத்திய பாராட்டத்தக்க போராட்டம்.அதையெல்லாம் ஏன் இப்போது கைவிட்டு விட்டீர்கள்.எப்படி இருந்த நீங்க இப்ப இப்படி ஆயிட்டீங்களே தோழா..அதைப்பற்றி முதல்ல கவலைப்படுங்க..நாங்க என்னான்னும் நாசமாப்போறோம்.நாங்க சரியில்லைன்னுதானே 68இலே பிரிஞ்சு நக்சல் இயக்கத்துக்குப் போனீங்க.. உங்க இயக்கத்தை வளர்க்கிறதுக்கு வழியைப் பாருங்க தலைவா..

நான் தொடர்ந்து உங்களோடு விவாதிக்க நேரம் ஒதுக்க முடியாது.அது தேவையற்ற வேலையும் கூட.நான் ரொம்பச் சின்ன ஆள்.நீங்கள் எல்லோருமே பெரிய மார்க்சிய மேதைகளாக இருப்பதால் நான் விவாதித்து நீங்கள் தெரிந்து கொள்ள உலகத்தில் ஒன்றுமே இல்லை.எல்லாமே அறிந்தவர்கள் நீங்கள்தான்.உங்கள் பாதை உங்களுக்கு எங்கள் பாதை எங்களுக்கு.காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்.நன்றி.வணக்கம்.

தமிழ்ச்செல்வன்

விவாதகளம்... said...

////////அய்யா சுரேஷ் அவர்களே உங்கள் பாதை நக்சல் குருடர்கள் பாதை என்பதை உங்க அப்பன் சாரு, CPIML,CPIMLL, புதிய ஜனநாயகம் போன்ற தாத்தாகள் எல்லாம் உன்னுடை மொக்கை துப்பாக்கி பாதை இந்தியாவுக்கு ஒர்க்அவ்ட் ஆகதுன்னு திருந்திட்டாங்க./////////

தோழர் விடுதலை,
இந்த பதில்தான் மொக்கையிலும் மொக்கையாக இருக்கிறது. சுயபுரிதலுடந்தான் நீங்கள் சி.பி.எம். கட்சியில் இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் இப்போதுதான் தெரிகிறது, சாரு நிவேதிதா போன்றவர்களின் அனுபவத்தைக் கேட்ட விளைவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது.

சாரு கதையப் போயி வச்சிக்கிட்டு கம்யூனிச விவாதம் பன்ன வந்திருக்கிறீர்களே, உண்மையிலேயே நீங்கள் பரிதாபத்திற்குரிய அப்பாவிதான், தோழரே!

நேத்துக்கு அடிச்ச பிராந்தியிலிருந்து விலகி இன்னிக்கு விஸ்கிக்கு மாறிய ‘புரட்சிகர’ மாற்றத்துக்கே முன்னூறு பக்கம் மொக்கை கட்டுரை எழுதுகிற, தலைசிறந்த இலக்கியவாதி சாரு, அவருடைய கொள்கை பற்றி உங்க தமிழ்ச்செல்வன் கிட்டபோயி கேளுங்க, அவருதான் அவனோட அடிக்கடி மல்லுக்கு நிக்கிறவரு. அவர் சொன்னாருன்னு நீங்க நக்சல்பரி அரசியலை புறக்கனிப்பது கோமாளித்தனமாக இருக்கிறது, தோழரே, மன்னிக்கவும்!

மேலும் நீங்கள் போட்டிருக்கின்ற லிஸ்டில் நைசாக புதிய ஜனநாயகத்தையும் சேர்த்து சொருகிவைத்திருக்கிறீர்களே, உங்களது அரசியல் புரிதலுக்கு இதுவும் ஒரு மிகச் சிறந்த உதாரணம். வளர்க உங்களது புரிதல். வாழ்க கருத்து முதல்வாதம்!

(அட பதில்கள் இன்னும் முடியலிங்க... இன்னும் இருக்குது... அடுத்த கமெண்டாக அது வரும் please stay tuned!!!!!!!

விவாதகளம்... said...

//////////துப்பாக்கியே பாக்கத நீ என்னாதுக்கு வந்து கத்திக்கிட்டு கிடக்கிற.///////////

இந்த வேண்டுகோள் தோழர் விமலவித்யா அவர்களுக்கு!

ஆரோக்கியமாக விவாதிப்பதை அடுத்தவர்களுக்குப் போதிக்கும் ‘தைரியம்’ மார்க்சிஸ்டு கட்சியினருக்கு மட்டுமே உண்டு.

ஆரோக்கியமான மேற்கண்ட வரிகள் குறித்து ஆராய்ந்து தோழர் விமலவித்யா அவர்கள் கருத்து சொல்ல வேண்டும் என்று இந்த பின்னூட்டத்தின் மூலமாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

விவாதகளம்... said...

”இதுவரைக்கு எவனும் என்னத் தொட்டதில்ல...” - இது வடிவேலு வசனம்.
“போனமாசம் தான நான் உன்ன அடிச்சேன்...” - இது வில்லனின் வசனம்.
“அது போனமாசம், நாஞ்சொல்றது இந்தமாசம்...” - இது வடிவேலு வசனம்.

இதே ஸ்டைலில் ஒரு அரசியல் விவாதத்தில் வடிவேலு பேசினால் அந்த வசனம் எப்படியிருக்கும், ரொம்ப சிரமப்பட்டு யோசிக்காதீர்கள் பின்வரும் வரிகளில் நம்ம சி.பி.எம். வடிவேல் (விடுதலைதான்) அவர்களின் பதில்களைப் படித்து பாருங்கள், தோழர்களே!

/////சிபிஎம் குறித்த உன் கேள்விக்கு எல்லாம் எப்பவோ நான் வரிக்கு வரி பதில்சொல்லிட்டன். வேனும் என்றால் வினவு, ஏகலை,அரசுன் போலி விடுதலை எல்லாறையும் கேட்டுப்பார்த்துக்கோ! /////

விவாதகளம்... said...

பரிதாபத்திற்குரிய தோழர் விடுதலை அவர்களுக்கு,

உங்களுடைய பதில்களைப் பார்த்தால் உண்மையிலேயே மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. நாற்புறமும் அம்பலமாகி, சந்திசிரித்த மோசடியை, இல்லையென்று நிரூபிப்பதற்காக அதனை வளைத்து, வளைத்து நியாயப்படுத்தும் உங்களின் நிலை ஒருபுறம் சிரிப்பகவும், மறுபுறம் பரிதாபமாகவும் இருக்கிறது, தோழரே!

முதலாளி இலாபத்திற்கும் சுரண்டலிற்கும் தொழில் நடத்துகிறானா அல்லது நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதே என்பதற்காக தொழில்நடத்துகிறானா? என்பதுதான் அடிப்படையான கேள்வி.

வேலையின்மையைப் போக்குவதற்காகவே பன்னாட்டு பகாசூர நிறுவனங்களை நாங்கள் அழைத்துவருகிறோம் என்று ப.சிதம்பரமும், மன்மோகனும், அத்வானியும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே, அதற்கும், அதே கருத்தை உங்க ‘மார்க்சிஸ்டு’ பொலிட்பீரோ தலைவர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே, அதற்கும் என்ன வேறுபாடு?

பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் விளைநிலங்களைப் பிடுங்கிக் கொடுப்பது எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்ளமுடியும்? யார் அதிகம் பிடுங்கினார்கள், யார் குறைவாகப் பிடுங்கினார்கள் என்ற புள்ளிவிபரங்களுக்குப் பிறகு வருவோம்.

பின்குறிப்பு: வரிக்கு வரி விளக்கங்களை ‘போனமாசம்’ சொல்லிவிட்டு வந்து அமர்ந்திருக்கும் தோழர் விடுதலை அவர்களே, மேற்கண்ட எனது சந்தேகங்களுக்கு (கேள்வியென்று கூட சொல்லமாட்டேன்) உங்கள் பானியில் ஒரு தீர்வு சொல்லுங்கள் போதும்!

தொடர்ந்து விவாதிப்போம்...

தோழமையுடன்,
து.சுரேஷ்.

? said...

சித்தாந்த போராட்டத்தை உள்கட்சியில் நடத்த துணிவுள்ளவர்கள்தான் வெளியிலும் போராடுவார்கள். எனவே தமிழ்செல்வனுடன் விவாதிக்க நீங்கள் முனைந்தாலும் அவரோ அல்லது அவர் சார்ந்தவர்களோ சில திட்டம் முகவரி கட்சி வளர்ப்பு என்பன பற்றிதான் கதைப்பார்கள். மாறாக நிலவும் உற்பத்தி முறை என்ன, நேச சக்திகள் பகை சக்திகளின் வர்க்க அணி சேர்க்கை எப்படி இருக்க வேண்டும், போர்திட்டம் செயல்திட்டம் என்ன, பாராளுமன்ற ஜனநாயக பாதையில் சமூக மாற்றம் ஒரு பின்தங்கிய உற்பத்தி முறையில் சாத்தியமா என்பது பற்றியெல்லாம் பேச முன்வர மாட்டார்கள். இது பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரிந்தும் இருக்லாம்

விடுதலை said...

//சாரு கதையப் போயி வச்சிக்கிட்டு கம்யூனிச விவாதம் பன்ன வந்திருக்கிறீர்களே, உண்மையிலேயே நீங்கள் பரிதாபத்திற்குரிய அப்பாவிதான், தோழரே!//

உங்களை நினைத்தால் எனக்கு.
உங்க மகஇகவின் குருட்டுத்தனம்தான் தெரிகிறது.
"சாரு" என்றவுடன் போய்யும் போய் ஒன்னுத்துக்கும் உதவாத சாருநிவேதாதான் உங்களுக்கு உடனே ஞாபகம் வருகிறது என்றால் உங்கள் அப்பாவித்தனத்தை நினைத்து சிரிப்பு தாங்க முடியவில்லை.

சாரும்மஜீம்தார்ரைத்தான் நான் சாரு என்றேன். நிங்களோ மிண்டும் ஒருமுறை அவரு அளவுக்கு கூட நாங்க ஒத்து இல்ல என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி

விவாதகளம்... said...

அண்ணே விடுதலையண்ணே!

அதெல்லாம் கெடக்கட்டும், பின்வரும் எனது சந்தேகங்களை விளக்கச் சொல்லி உங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். உங்களது மேலான பார்வையை கொஞ்சம் இதன் பக்கம் திருப்பக் கூடாதா? அடியேனின் சந்தேகத்தை கொஞ்சம் நீக்கக் கூடாதா?


முதலாளி இலாபத்திற்கும் சுரண்டலிற்கும் தொழில் நடத்துகிறானா அல்லது நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதே என்பதற்காக தொழில்நடத்துகிறானா? என்பதுதான் அடிப்படையான கேள்வி.

வேலையின்மையைப் போக்குவதற்காகவே பன்னாட்டு பகாசூர நிறுவனங்களை நாங்கள் அழைத்துவருகிறோம் என்று ப.சிதம்பரமும், மன்மோகனும், அத்வானியும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே, அதற்கும், அதே கருத்தை உங்க ‘மார்க்சிஸ்டு’ பொலிட்பீரோ தலைவர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே, அதற்கும் என்ன வேறுபாடு?

ச.தமிழ்ச்செல்வன் said...

இந்தியாவில் ஹமாம் சோப்புக்கு அடுத்து நேர்மைக்கு அத்தாரிட்டி நீங்க மட்டும்தான்

Post a Comment